Halloween Costume ideas 2015

88 அடி ஆழத்தில் உயிரிழந்த நிலையில் சுஜித் உடல் மீட்பு!

ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள இரண்டரை வயது குழந்தையை மீட்கும் பணிகள், 80 மணி நேரமாக நடைபெற்று வந்த நிலையில் குழந்தை சுஜித் வில்சன் உயிரிழந்தது.


தேசிய, மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் சுஜித் உடலை ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியில் வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஆரோக்கியதாஸின் இரண்டரை வயது குழந்தை சுஜித், பராமரிப்பின்றி திறந்தவெளியில் இருந்த சுமார் 350 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது.

இதுகுறித்து தகவலறிந்த மணப்பாறை தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி, திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு உள்ளிட்டோர் நிகழ்விடத்துக்குச் சென்று மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர்.
27 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தையை மீட்க மேற்கொண்ட முயற்சிகள், ஆழ்துளைக் கிணற்றின் விட்டத்தின் அளவு குறுகியதாக இருந்ததால் தோல்வியடைந்தன. சனிக்கிழமை அதிகாலை 70 அடி ஆழத்துக்கும் கீழே குழந்தை சுஜித் சென்றுவிட்டான்.

தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினரின் முயற்சியும் தோல்வி: பல்வேறு உபகரணங்களுடன் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் சனிக்கிழமை வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் மீட்புப் பணியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து நிகழ்விடத்துக்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைத் தலைவர் காந்திராஜன் தலைமையில், அமைச்சர்கள், பேரிடர் மீட்புக்குழுவினர், ஓ.என்.ஜி.சி, என்.எல்.சி. குழுவினர் ஆலோசித்தனர்.

இதைத் தொடர்ந்து, ஆழ்துளைக் கிணறு அருகே மூன்றரை மீட்டர் பக்கவாட்டில் ரிக் இயந்திரம் மூலம், குழிதோண்டி, அதன் வழியாக தீயணைப்பு வீரரை அனுப்பி குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரிக் இயந்திரம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு சம்பவ இடத்துக்கு கொண்டுவரப்பட்டது. 7 மணியளவில் மீட்புப் பணிகள் தொடங்கிய நிலையில் மூன்று மணி நேரத்தில் 18 அடி வரை தோண்டியது. அதன்பின் கடுமையான பாறைகள் தென்பட்டதால், ரிக் இயந்திரம் மணிக்கு 2 அடிக்கு மேல் துளையிட முடியாமல் திணறியது. மேலும் துளையிடும் கருவியின் முனைப் பகுதிகள் சேதமடைந்தன.

இதையடுத்து அந்த இயந்திரத்தைவிட 3 மடங்கு திறன் மிக்க ரிக் இயந்திரம் ராமநாதபுரத்தில் இருந்து வரவழைக்கப்பட்டது. புதிய ரிக் இயந்திரம் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் தனது பணியைத் தொடங்கியது.
திங்கள்கிழமை இரவு வரை சுமார் 53 அடி ஆழம் வரை துளையிடப்பட்டுள்ளது. தொடர்ந்து துளையிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடினமான பாறைகள், மழை, மண்சரிவு, இயந்திரம் பழுது ஆகியவை மீட்புப் பணிகளுக்கு பெரும் சவாலாக இருந்து வருகின்றன.

மீட்பு பணியின் போது, ரிக் இயந்திரத்தின் பற்கள் பாறையின் இடையே மாட்டியதில் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டதால் பாறையை உடைப்பதில் தடை ஏற்பட்டது. இதையடுத்து சுமாா் 60 அடி ஆழத்தில் அமைக்கப்பட்ட குழியில் பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலைய வீரா் அஜித்குமாா் இறங்கிப் பாா்த்தாா். அப்போது, மிகப்பெரிய அளவிலான உடைக்கப்பட்ட கல் மீட்பு பணிக்குத் தடையாக இருந்தது தெரியவந்தது.

சுமாா் 100 கிலோ எடை கொண்ட அந்தக் கல் கயிற்றின் மூலம் வெளியே தூக்கி எடுத்துவரப்பட்டது. கல்லை எடுத்த பின்னா் துளையிடும் பணி மிக விரைவாக நடைபெற்றது.

ஆழ்துளைக் கிணற்றில் 88 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சுஜித் உடலை தேசிய, மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் மீட்டனர். பின் உடலை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் சிவராசு:

குழந்தை சுஜித் உடலை தேசிய, மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் மீட்டனர். உடல் சிதைந்த நிலையில் எடுக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை செய்ய தயார் நிலையில் மருத்துவர்கள் உள்ளனர். பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அது குறித்த தகவல் வெளியிடப்படும். மேலும் குழந்தை மீட்புக்காக தோண்டப்பட்ட குழிகள் அனைத்தும் உடனடியாக கான்கிரீட் கலவை கொண்டு முழுவதும் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்தார்

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget