உரிய பொறிமுறைகள் இன்றி காலாவதியான மருந்துகள் தீ மூட்டி அழிக்க முற்பட்டமையால் பொதுமக்கள் பாதிப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, October 29, 2019

உரிய பொறிமுறைகள் இன்றி காலாவதியான மருந்துகள் தீ மூட்டி அழிக்க முற்பட்டமையால் பொதுமக்கள் பாதிப்பு

பொறுப்பற்ற வகையில் உரிய பொறிமுறைகள் இன்றி காலாவதியான மருந்துகள் வட.மாகாண சுகாதார அமைச்சின் வளாகத்தில் தீ மூட்டி அழிக்க முற்பட்டமையால் அயலில் இருந்த பொதுமக்கள் ஓவ்வாமைக்கு உட்பட்டதுடன் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.



யாழ்.பண்ணை பகுதியில் அமைந்துள்ள வட.மாகாண சுகாதார அமைச்சின் அலுவலக வளாகத்தில் காலவதியான மருந்து பொருட்களை பிளாஸ்டிக் போத்தல்களுடன் பாரிய குழி தோண்டி அதனுள் போட்டு நேற்று ( திங்கட்கிழமை) இரவு தீ மூட்டியுள்ளனர்.

அதனால் பிளாஸ்டிக் போத்தல்கள் எரிந்தும், மருந்துகள் எரிந்தும் ஏற்பட்ட புகை மூட்டத்தால் தூர்நாற்றம் வீசியதுடன் அயலவர்களுக்கு ஒவ்வாமையும் ஏற்பட்டு மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டனர்.

அதனை தொடர்ந்து இந்த விடயம் தொடர்பாக யாழ்.மாநகர சபையின்,  தீயணைப்பு படைக்கு அறிவிக்கப்பட்டது.

குறித்த தகவலுக்கமைய தீயணைப்பு படையினர் தீயினை அணைக்க முற்பட்டபோது, அவர்களுக்கும் ஒவ்வாமை ஏற்பட்டது. அதன் மத்தியிலும்  தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக வட.மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் கூறுகையில்,  “வளாகத்தில் மருந்து பொருட்களை எரியூட்டி அழிக்க அனுமதிக்கவில்லை.

அவற்றை உரிய முறையில் எரியூட்டி அழிக்க உரிய இடத்திற்கு அனுப்பி வைக்குமாறே பணிக்கப்பட்டது. அந்த நிலையில் மருந்தாளர் ஒருவரின் எதேச்சைகரமான முடிவினால் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

அதேவேளை சம்பவம் தொடர்பாக அப்பகுதி பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பிராந்திய வைத்திய அதிகாரிகளிற்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த அவர்கள் நிலைமை  குறித்து அவதானித்தத்துடன், உரிய விசாரணைகளை முன்னெடுத்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தனர்.