மக்களுக்கான சேவைகளை மேற்கொள்ள பதவிகள் எதும் முக்கியமல்ல என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கோட்டாபய மேலும் கூறியுள்ளதாவது, “நான் இந்த நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்தவுடன், இராணுவ ஆட்சியை இலங்கையில் ஸ்தாபிக்க முற்படுகிறேன் என்று என்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
ஆனால், நாம் இந்த விடயத்தை சிந்தித்துப் பார்க்க வேண்டும். 2005 இற்கு பின்னர் இந்த நாட்டில் அதிகளவிலாக சோதனை முகாம்களை நாம் குறைத்தோம்.
இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டு மக்களுக்கு அச்சமற்ற சூழலில் வாழவும், வியாபாரிகள் கப்பம் கொடுக்கும் அச்சமில்லாமல் வியாபாரம் செய்யவும்தான் நாம் நடவடிக்கை எடுத்திருந்தோம்.
இன்று பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகிக்கப்படுகிறது. இதனை இல்லாது செய்யவே கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நாம் கூறியிருந்தோம். இவைதான் ஒரு நாட்டுக்கு அத்தியாவசியமாகவும் இருக்கிறது.
நாம் அன்று கொழும்பை ஆசியாவின் அழகான நகராக மாற்றியமைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தோம்.
இதனை நாம் மக்கள் பிரதிநிதியாக மேற்கொள்ளவில்லை. பாதுகாப்புச் செயலாளராக இருந்துக் கொண்டுதான் இவற்றை நான் செய்திருந்தேன்.
நாம் என்றும் பதவியைப் பார்த்து மக்களுக்கான சேவையை ஆற்றுபவர்கள் அல்ல” என குறிப்பிட்டுள்ளார்.