ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் இணைவதற்கு முன்பதாக, இந்தக் கட்சிகளின் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து விட்டார்கள் என மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
மேலும், இந்த உண்மையை உணர்ந்துக்கொண்டு இந்த இரண்டுக் கட்சிகளும் செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். கண்டியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன. அந்த இரண்டு கட்சிகளின் அரசியல் இலக்கு ஒன்றாகத்தான் இருக்கிறது.
சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 14 இலட்சம் வாக்குகளை உள்ளுராட்சித் தேர்தலில் பெற்றிருந்தது. பொதுஜன பெரமுன 50 இலட்சம் வாக்குகளைப் இந்தத் தேர்தலில் பெற்றிருந்தது.
இந்த வாக்குகள் அனைத்தும் இடதுசாரி கொள்கையுள்ள, நாட்டை நேசிக்கும் மக்களின் வாக்குகளாகவே நான் கருதுகிறேன். இந்த இரண்டு தரப்பினரின் ஒரே இலக்காக 2019 ஆம் ஆண்டு தேர்தல் தற்போது காணப்படுகிறது.
தேசிய பாதுகாப்பை பலப்படுத்தி, பொருளாதாரத்தை உயர்த்தி, நாட்டில் அபிவிருத்திகளை மேற்கொண்டு, அனைத்து மக்களதும் வாழ்வாதாரத்தை பலப்படுத்துவதற்காக இரண்டு கட்சிகளும் தற்போதிலிருந்தே திட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையிலேயே இந்த இரண்டு கட்சிகளின் கூட்டணி தொடர்பிலான பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன.
ஆனால், இந்த இரண்டு கட்சிகளின் கூட்டணிக்கு முன்பதாகவே இந்த இரு கட்சிகளின் ஆதரவாளர்கள் தற்போது ஒன்றிணைந்து விட்டார்கள் என்பதே உண்மையாகும்.
இந்த உண்மையில் இருந்து கொண்டுதான் இனிமேல் நாம் எமது அடுத்தக்கட்ட நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும்” என கெஹலிய ரம்புக்வெல கூறினார்.