தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து,தமிழக பாஜக தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது.
எச்.ராஜா, வானதி சீனிவாசன்,சி.பி.ராதாகிருஷ்ணன்,நயினார் நாகேந்திரன் ஆகியோர் தலைவர் பதவிக்கான போட்டியில் உள்ளதாக தெரிகிறது.
தமிழிசையின், தமிழக பாஜக தலைவர் பதவிக் காலம் வரும் டிசம்பர் மாதம் முடிவடையும் நிலையில், தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனால் இப்போது தமிழக பாஜக தலைவர் பதவி வெற்றிடமாக உள்ளது. இந்தப் பதவிக்கு இப்போதே போட்டா போட்டி ஆரம்பமாகிவிட்டதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, கோவை முன்னாள் எம்.பி., சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக செயலாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் போட்டியில் முன்னிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இவர்கள் மூவருமே, பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்டவர்கள். இதில் எச்.ராஜா, பாஜக தேசிய தலைவர்களுடன் மிகவும் நெருக்கமானவர் என்றாலும், தமிழக விவகாரங்களில் அடிக்கடி சர்ச்சையை கிளப்புபவர்.
இதனால் தமிழக பாஜகவிலேயே பலரும் இவர் தலைவராவதை விரும்ப மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் எச்.ராஜா விடாப்பிடியாக முயற்சிப்பார் என்றே தெரிகிறது. வானதியும், சி.பி. ராதாகிருஷ்ணனும் கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு பெற்றவர்கள்.
அங்கு பாஜகவின் வளர்ச்சியும் சமீபமாக அமோகம் .அதன் அடிப்படையில் தலைவர் பதவியைப் பிடிக்க முட்டி மோதுவார்கள் என்றே தெரிகிறது.
இதற்கிடையே, அதிமுகவில் ஜெயலலிதா காலத்தில் அமைச்சராக இருந்து பாஜகவுக்கு தாவிய நயினார் நாகேந்திரனும் தலைவர் பதவிக்கு முட்டி மோதுவார் என்றே தெரிகிறது.
இவருக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் ஆசீர்வாதம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழக பாஜக முன்னாள் தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணனோ, டிசம்பர் மாதத்திற்குள் தலைவர் நியமிக்கப்படுவார் என்று கூறியுள்ளார்.
இதனால், தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவும் நிலையில் தற்போதைக்கு தற்காலிக பொறுப்பாளர் மட்டும் நியமிக்கப்படலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.
அந்த தற்காலிக பொறுப்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனாகவும் இருக்கலாம் என்றும் சில வேலைகளில் அவரையே நியமிக்கப் படலாம் என்றும் கூறப்படுகிறது.