இறந்த பிக்குவால் தமிழர் பகுதியில் பதற்றம்! அதிகளவான பொலிஸார் குவிப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, September 23, 2019

இறந்த பிக்குவால் தமிழர் பகுதியில் பதற்றம்! அதிகளவான பொலிஸார் குவிப்பு

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த மதகுரு உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் மஹரகம வைத்தியசாலையில் உயிரிழந்திருந்தார்.

உயிரிழந்த பௌத்த மதகுருவின் பூதவுடலை ஆலய வளாத்தில் தகனம் செய்ய முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்து பிரதேச மக்கள் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனையடுத்து முல்லைத்தீவு நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் இந்த விவகாரம் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சம்பவம் குறித்து ஆராய்ந்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஆலய வளாகத்தில் மதகுருவின் உடலை தகனம் செய்ய இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார்.

பிக்குவின் உடலை புதைப்பது தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்கு மீதான விசாரணை தற்போது முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்தநிலையில் இன்று காலை நீதிமன்ற வளாகத்திற்கு சென்றிருந்த ஞானசார தேரர் தலைமையிலான பௌத்த பிக்குகள் சிலர் தற்போது முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்திற்கு சென்றுள்ளனர்.


அத்துடன், முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அதிகளவான தமிழ் மக்களும் குவிந்துள்ளனர்.

இதன்காரணமாக குறித்த பகுதியில் தற்போது பதற்றமான நிலை காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீகந்தராஜா குறித்த பகுதிக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.