வடக்கில் மட்டும் மக்கள் படுகொலை செய்யப்படவில்லை; தெற்கிலும் படுகொலை நடந்தது: யாழில் சம்பிக்க! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, September 7, 2019

வடக்கில் மட்டும் மக்கள் படுகொலை செய்யப்படவில்லை; தெற்கிலும் படுகொலை நடந்தது: யாழில் சம்பிக்க!

இலங்கையில் வடக்கில் மட்டும் மக்கள் படுகொலை செய்யப்படவில்லை. தெற்கிலும் ஏராளமான இளைஞர் யுவதிகள் படுகொலை செய்யப்பட்டனர். பிரச்சனைகளிற்கு தீர்வு நாட்டை விட்டு தப்பியோடுவதல்ல. யுத்தத்தில் தப்பி தமிழர்கள் ரெறொன்றோவிற்கு சென்றார்கள். சிங்களவர்கள் அவுஸ்திரேலியாவிற்கு சென்றார்கள். இது தீர்வல்ல. இந்த நாட்டை வாழக்கூடிய நாடாக கட்டியெழுப்புவதே தீர்வாகும் என மேல் மாகாணம் மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாநகர சபை மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆளுனர் இங்கு உரையாற்றும்போது, தேர்தலை அடிப்படையாக கொள்ளாமல், அரசியலை நோக்கமாக கொள்ளாமல் அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென ஆளுனர் தெரிவித்திருந்தார். உண்மையில், தேர்தலை நோக்கமாக கொண்டோ, அரசியலை நோக்கமாக கொண்டோ எவ்வித குறுகிய சிந்தனைகளுடனும் இந்த அபிவிருததி திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை. நாம் ஆட்சிக்கு வந்தது முதல் அபிவிருத்தியை நோக்காக கொண்டு செயற்பட்டு வருகின்றோம். இந்த கட்டிடத்தை அமைக்க வேலைத் திட்டங்களை ஆரம்பிக்க முன்னர் நான் இங்கு வந்திருந்தேன். இங்குள்ள அதிகாரிகள் அனைவரையும் இணைத்து அவர்களின் கருத்துகள் அபிப்பிராயங்கள் எல்லாம் கேட்டே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாண மாநகரத்தை மூலோபாய நகரமாக மாற்றியமைக்கும் திட்டத்துடன் 2018ம் ஆண்டிலிருந்து செயற்பட்டு வருகிறோம். இதற்காக உலக வங்கியின் நிதியுதவியை பெற்றுக்கொள்ளவுள்ளோம்.



யாழ் மாநகர ஆளுமை பிரதேசத்திற்குள் பேருந்து நிலைய அபிவிருத்தி, பெருந்தெருக்கள் அபிவிருத்தி கருத் திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். அதேபோல நகர மண்டப பணிகளையும் ஆரம்பிக்கிறோம்.

2010ம் ஆண்டு நான் யாழ்ப்பாணம் வந்தபோது, மின்சார அமைச்சராக வந்தேன். அப்போது யாழில் பாதி இடத்திற்கு மின்சாரம் இருக்கவில்லை. சரியான முறையில் திட்டமிட்டு ஒரு மின்பிறப்பாக்கி நிலையத்தை அமைத்தோம், சுன்னாகத்திலும், இன்னொரு இடத்திலும் மின்பிறப்பாக்கி நிலையத்தை அமைத்து யாழ்ப்பாணத்திற்கு முழுமையான மின்சாரம் வழங்க அடித்தளத்தை இட்டேன் என்பதை நினைவூட்டுகிறேன். அதேபோல எதிர்காலத்திலும் யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்வோம்.



இந்த அபிவிருத்திகளை தான் தோன்றித்தனமாக செய்யவில்லை. உங்கள் எல்லோருடனும் பேசியே திட்டமிடுகிறோம்.

எமதுநாடு 1983ம் ஆண்டிலிருந்து பல்வேறு இன்னல்களிற்கு முகம் கொடுத்தது.  யுத்தத்தினால், கிளர்ச்சியினால், உள்நாட்டுபோரினால் பல பாதிப்புகளை சந்தித்தோம். இதில் வடக்கில் மட்டும் மக்கள் கொல்லப்படவில்லை. வடக்கில் அதிகம் பாதிக்கப்பட்டார்கள் என்பது உண்மை. அதை நான் மறுக்கவில்லை. ஆனால் 87,88களில் தென்பகுதிகளில் ஏற்பட்ட கிளர்ச்சி உங்களிற்கு நினைவிருக்கலாம். அதில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களும், யுவதிகளும் கொல்லப்பட்டார்கள் என்ற உண்மையை நான் சொல்லிவைக்க வேண்டும்.

இதனால் என்ன நடந்தது? இந்த நாடு வேண்டாம் என வெளியேறினார்கள்.தமிழர்கள் அதிகமாக ரெறொண்டோவிற்கு சென்றார்கள். சிங்களவர்கள் அதிகமாக காலிக்கோ, மாத்தறைக்கோ செல்லவில்லை. அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர்.

இந்த பிரச்சனைகளிற்கு தீர்வு நாட்டைவிட்டு தப்பியோடி, வேறொரு நாட்டில் தஞ்சம் புகுந்து வாழ்வதல்ல. அதற்கொரு மாற்றுவழி, இங்கு வாழக்கூடிய நாடாக அதை நாம் கட்டியெழுப்ப வேண்டும். அதற்கான சூழலை உருவாக்கும் பணியைத்தான் நாம் செய்கிறோம்.

தாற்பரியங்களையும், கோட்பாடுகளையும் பேசலாம். அது நல்ல விடயம். ஆனால் அவற்றில் மட்டும் நின்றுவிட முடியாது. பிரயோகரீதியில், நடைமுறை சாத்தியமானவற்றை நாம் செய்ய வேண்டும். எங்களிற்கும், எமது பிள்ளைகளிற்கும், சந்ததிகளிற்கும் வாழக்கூடிய ஒரு நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். அந்த பணியில் நாம் ஈடுபட்டுள்ளோம். அதில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள் என்றார்.