வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள், கடந்த சில வாரங்களில் திடீர் கோட்டாபய ஆதரவாளராக மாறியிருக்கிறார். யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் செய்தியாளர் சந்திப்புக்களை நடத்தி, கோட்டாபயவை ஆதரிக்க கோரியிருந்தார்.
வரதராஜ பெருமாளிற்கு ஏன் திடீரென இந்த கோட்டாபய பாசம் ஏற்பட்டது?. இதன் பின்னணியில் நடந்த சம்பவங்கள் என்ன என்பதை தமிழ்பக்கம் திரட்டியது.
வரதராஜ பெருமாள் தரப்பு பொதுஜன பெரமுன கூட்டில் இருந்தாலும், தமிழ் சினிமாவில் வரும் துணை நடிகர் பாத்திரம்தான் அவர்களிற்கு. பெரமுனவிலுள்ள திஸ்ஸ விதாரண, தினேஷ் குணவர்த்தன தரப்புடன்தான் ஒட்டியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் வரதராஜ பெருமாளிற்கு அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தேசியப்பட்டியல் எம்.பி ஆசனத்தை தருவதாக வாக்களித்துள்ளனர்.
சும்மா சிவனேயென யாழ்ப்பாணத்தில் சுற்றி திரிந்த வரதராஜ பெருமாளை அவர்கள் கூப்பிட்டு, தேசியப்பட்டியல் ஆசனம் கொடுக்கிறார்களா?, இதற்கு பின்னால் ஏதோ இருக்குமே என நீங்கள் சந்தேகத்துடன் பார்ப்பது தெரிகிறது.
சம்பவம் ஒன்று இருக்கிறது.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணத்திலிருந்து கிட்டத்தட்ட 45,000 வாக்குகளை கோட்டாபயவிற்காக பெற்றுத்தருவதாக வரதராஜ பெருமாள் கொடுத்த வாக்குறுதியையடுத்தே, இந்த தேசியப்பட்டியல் வாக்குறுதி!
திஸ்ஸ, தினேஷ் போன்ற இடதுசாரி தலைவர்களுடன் பேசியபோது, யாழ்ப்பாணத்திலுள்ள ஒவ்வொரு கிராமத்திலும் தனக்கு 100 வாக்குகள் உள்ளன என வரததராஜ பெருமாள் குறிப்பிட்டாராம். மொத்தம் 430இற்கும் அதிக கிராமங்கள் என்றால், யாழில் அவருக்குள்ள வாக்கு வங்கியை நீங்களே கணக்கிட்டு பாருங்கள்!
அந்த வாக்குகள் – அண்ணளவாக 45,000- அடுத்த முறை கோட்டாபயவிற்கு கிடைக்குமாம்.
எனக்கு தேசியப்பட்டியல் எம்.பி, உனக்கு 45,000.
இதுதான் “டில்“!
இதில் இடிக்கும் இடம் எதுவென்றால், திஸ்ஸ, தினேஷே அந்த கூட்டின் கடைசிப் பெட்டியல்தான் ஏறி நிற்கிறார்கள். தேசியப்பட்டியலிற்கு அவர்களே மல்லுக்கட்ட வேண்டும். இதில் அவர்களின் சிபாரிசில் இன்னொரு தேசியப்பட்டியல் எம்.பியா?