முல்லைத்தீவில் அரங்கேற்றப்பட்ட மனிதப்பேரவலங்களுக்கான நீதிக்கோரிக்கை போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கையில் அதே மண்ணில் வரலாற்றுப்பழைமை வாய்ந்த செம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தில் இராணுவத்தினரின் பங்கேற்புடன் உருவான பௌத்த விகாரை இன முறுகல்களுக்கு வித்திட்டுள்ளதாக பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
விகாராதிபதியின் மரணத்தின் பின்னர் அவரது உடல் நீதிமன்ற உத்தரவை மீறிச் இந்து அலயவளாகத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளமையானது மீண்டும் தமிழினத்திற்கு நீதி மறுதலிக்கப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டுகின்றது.
இவ்விடயங்கள் தொடர்பில் அங்கு ஒரு நேரடிசாட்சியமாக இருக்கும் தமிழர் மரபுரிமைகள் பேரவையின் இணைத்தலைவர் வி.நவநீதன் பிரபல நாளிதழ் ஒன்றிற்கு முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவை வருமாறு,
வரலாற்றுத்தொன்மையும் கேந்திர முக்கியத்துவமும்
செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் வரலாறு மிகப்பழைமையானது. குறித்த ஆலயத்தின் விக்கிரகங்களை ஆய்வு செய்த வரலாற்றாசிரியர்களால் அவற்றை செதுக்கிய காலத்தினைக்கூட கணிக்க முடியாதளவுக்கு உள்ளது. பிள்ளையார் சிலை எப்போது பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பதற்கான மிகத்தெளிவான வரலாற்றுத்தகவல்கள் இல்லை. இருப்பினும் இப்பிரதேசத்தில் மக்களின் வாய்வழி வரலாற்றுத் தகவல்கள் மூலம் மிகத்தொன்மையானது என்பதை உறுதிப்படுத்தக்கூடியதாக உள்ளமை குறிப்பிட்டு சொல்லவேண்டிய விடயம்.
இந்நிலையில் தற்போது அங்கு வாழ்ந்துகொண்டிருக்கும் 93 வயதான முதியவர், ஒருவர் தான் சிறுபராயத்திலேயே இந்த ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டிருப்பதாக கூறுகின்றார். இவை இந்த ஆலயத்தின் வரலாற்றுப் பழைமையை காட்டுகின்றது.
நீராவியடி பிள்ளையார் ஆலயமானது வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அதாவது கொக்குளாய்க்கும் நாயாறுக்கும் இடையில் உள்ள பழைய செம்மலைப் பகுதியில் காணப்படுகின்றது.
கடந்த காலத்தில் கொக்குளாய், முல்லைத்தீவு இடையில் மாட்டுவண்டிகளில் பயணிப்பவர்கள் பழைய செம்மலை எனப்படும் உயரமான இப்பகுதியை கடக்கின்றபோது நன்றிக்கடனாக இந்த ஆலயத்தில் வழிபாடுகளைச் செய்வார்கள். தற்போதும் அந்த மரபுமுறை நீடித்துக்கொண்டிருக்கின்றது.
இராணுவ உதவியுடன் உருவாகிய விகாரை
2009ஆம் ஆண்டு போரின் உச்சகட்டத்தில் மக்கள் இடம்பெயர்ந்து பின்னர் மீள்குடியேறிய போது செம்மலைப்பகுதியில் அமைக்கப்பட்ட இராணுவ முகாமிற்குள் ஆலயமும் உள்வாங்கப்பட்டிருந்ததோடு, ஆலயத்திற்கு எந்தவொரு நபர்களும் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
2004ஆம் ஆண்டு அந்த முகாமிலிருந்த இராணுவத்தினர் பௌத்த தேரர் ஒருவரை அழைத்து வந்து இந்த ஆலயப்பகுதியில் சிறிய அளவில் பௌத்த மத வழிபாடுகளை ஆரம்பித்திருந்தனர்.
அதனையடுத்து இராணுவத்தினரின் நிதிப்பங்களிப்புடன் விகாரை அமைப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவும் அழைத்துவரப்பட்ட கொலம்பே மேதாலங்கார தேரரும் அங்கு சிறிய அறை அமைத்து தங்கிவிட்டார்.
தற்போதும் இந்த விகாரையின் நிர்மாணப் பணிகளுக்காக எந்தெந்த இராணுவ வீரர்கள் எவ்வளவு நிதியளிப்புச் செய்தார்கள் என்பதற்கான சான்றுகள் விகாரையினுள் உள்ளன.
இதன்மூலம் போரின் பின்னர் இராணுவத்தின் பங்களிப்புடன் பிள்ளையார் ஆலயத்துடன் இணைத்து விகாரை அமைக்கப்பட்டிருக்கின்றது என்பது தெள்ளத் தெளிவாகின்றது.
மக்கள் போராட்டமும் நீதிமன்ற உத்தரவும்
ஆலயத்தினை விடுவிக்க வேண்டுமென தொடர்ச்சியாக பொதுமக்கள் கோரிவந்திருந்த நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டுகாலப்பகுதியில் வருடாந்த பொங்கல் நிகழ்வுகளுக்குச் மக்கள் சென்றபோதெல்லாம் இராணுவத்தினரால் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.
இந்தப் பின்னணியில் 2018இல் மிகுந்த ஆக்ரோஷத்துடன் அணியாக திரண்டு மக்கள் போராட்டங்களை முன்னெடுத்த நிலையில் பொலிஸார் இந்த விடயத்தினை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றனர்.
இதற்கு சமகாலத்தில், கரைத்துறைப்பற்று பிரதேச சபையிடத்தில் தகவலறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பௌத்த விகாரை தொடர்பில் எட்டு வினாக்கள் எழுப்பப்பட்டபோது, ஆலயம் அமைந்துள்ள அரை ஏக்கர் நிலம் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்குச் சொந்தமானது என்றும் இங்கு பௌத்த விகாரை பின்னரே நிர்மாணிக்கப்பட்டதென்றும் அதற்கு காணி அனுமதிகள் பெறப்படவில்லை என்றும் இராணுவத்தினரின் வழிபாட்டுக்காக உருவாக்கப்பட்ட சிறிய பகுதி பௌத்த விகாரையாக உருவாக்கப்படுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்றும் பௌத்தர்கள் அங்கு வாழவில்லை என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஆலயம் அமைந்துள்ள நிலமானது ஆலயத்திற்கே உரித்தானது என்பதை பிரதேச செயலாளரும் உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கின் மீது நீண்ட விசாரணைகள் நடத்தப்பட்டன.
அதன் ஈற்றில் பழைய செம்மலையில் நீராவியடிப் பிள்ளையார் பாரம்பரிய இந்துக்கோவில் காணப்பட்டதென்றும் தற்போதைய சூழலில் இரு மதத்தவர்களும் வழிபாடுகளை மேற்கொள்ளமுடியும் என்றும் ஆனால் நிர்மாணங்களைச் செய்வதாக இருந்தால் எந்தவொரு தரப்பினரும் பொருத்தமான உள்ளூர் திணைக்களங்களின் அனுமதியைப் பெறுவது அவசியம் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவால் அதிருப்தி யடைந்த விகாராதிபதி தரப்பு சட்டத்தரணிகள் அதற்கு எதிராக வவுனியா மாவட்ட நீதிமன்றில் மேன்முறையீடு செய்தார்கள். குறித்த வழக்கு நிலுவையில் இருக்கின்ற நிலையில், நீராவியடி ஆலய வளாகம் நிலையியல் மாற்றங்களுக்கு உட்படும் வகையில் எவ்வாறானதொரு நிர்மாணங்களையும் செய்யமுடியாது என்றும் வழிபாடுகளில் தொடர்ந்தும் ஈடுபட முடியும் என்றும் இடைக்கால உத்தரவொன்றை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
நிலைமைகள் இவ்வாறு இருக்கையில் தான் கடந்த 21ஆம் திகதி சனிக் கிழமை விகாராதிபதி புற்றுநோயால் உயிரிழந்து விட்ட நிலையில் அவரது உடலை செம்மலைக்கு கொண்டுவந்து அங்கு தகனம் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்திருந்தன.
இதனையடுத்து அன்றைய தினம் நீதிமன்றுக்கு விடுமுறையாகையால் தமிழர் மரபுரிமைப்பேரவையும், ஆலய நிருவாகத்தினரும் ஆலய வளாகத்தினுள் உயிரற்ற உடலத்தினை வைக்கக்கூடாது என்றும் அவ்வாறு வைக்கப்படுகின்ற போது இந்துக்களின் பாரம்பரியம் மீறப்படும். என்பதோடு இன,மதங்களுக்கிடையிலான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
ஆகவே அதனை உடன் தடுக்க வேண்டும் என்று கோரி முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை மேற்கொண்டோம். பொலிஸார் முதலில் இந்த முறைப்பாட்டினை கருத்தில் கொண்டிருக்காத நிலையில் தொடர்ச்சியாக எமது தரப்புக்களின் அழுத்தமான கோரிக்கைகளினை அடுத்து நள்ளிரவைத் தாண்டி எமது முறைப்பாட்டினை பதில்நீதிவானின் வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
அதனையடுத்து பதில்நீதிவான் 23ஆம் திகதி திங்கட்கிழமை கட்டளை பிறப்பிக்கும் வரையில் பூதவுடலை தகனம் செய்வதற்கு தடை உத்தரவை விதித்திருந்தார்.
அதன்பின்னர் திங்கட்கிழமையன்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டபோது எமது தரப்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையிலான குழுவினருக்கும் தேரர்களின் சட்டத்தரணிகளுக்கும் இடையில் நீண்ட வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றிருந்தன. இதனையடுத்து இருதரப்பினரின் இணக்கப்பாட்டிற்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அச்சமயத்தில் பௌத்த மத குருவின் தகனக்கிரியைகளை முல்லைத்தீவில் நடத்துவதற்கு நாம் எதிர்க்கவில்லை. ஆனால் இந்து ஆலயத்திற்குள்ளோ அல்லது வளாகத்திலோ நடத்துவதற்கு இடமளிக்க முடியாது என்று தெளிவாக கூறினோம்.
அதனையடுத்து ஆலயத்திற்கு முன்னால் உள்ள இராணுவ முகாமினை அண்டிய கடற்கரைப்பகுதியில் தகனக்கிரியை நடத்துவதற்கு இணக்கப்பாடு ஏற்படவும் நீதிமன்றம் அதனை ஏற்று கட்டளையை பிறப்பித்தது.
நீதிமன்றிற்கு வருகைதந்திருந்த பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் வாதப்பிரதிவாதங்களை அவதானித்து விட்டு நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்திற்குச் சென்றிருந்தார். நீதிமன்ற கட்டளை தயாரிக்கப்படும் ஏக காலத்தில் அங்கிருந்த ஞானசார தேரர் ஆலயத்தின் கேணிப்பகுதியில் இறந்த விகாராதிபதியின் உடலை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக தகவல்கள் எமக்கு கிடைத்திருந்தன.
அதனையடுத்து ஞானசாரதேரரும் அவர்தரப்பு சட்டத்தரணிகளும் கலந்துரையாடிவிட்டு தாம் வழக்கில் வெற்றியடைந்து விட்டதுபோன்று பிரதிபலிப்புக்களைச் செய்துவிட்டு நீதிமன்ற கட்டளைகள் தம்மைக் கட்டுப்படுத்தாது திட்டமிட்ட வகையில் நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுப்போம் என்று கூறி தகன ஏற்பாடுகள் இடம்பெற்றிருந்த பகுதிக்கு விரைந்திருந்தார் என்ற தகவல்களும் ஒருங்கே கிடைத்தன.
அச்சமயத்தில் நீதிமன்றத்தில் குழுமியிருந்த நாம் விடயத்தினை மீண்டும் நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். அப்போது நீதிமன்றக் கட்டளையை பொலிஸார் அமுலாக்க வேண்டும் என்று குறித்துரைக்கப்பட்டது. இவ்வாறான கட்டளையை நாம் எடுத்துக்கொண்டு உரிய இடத்திற்குச் சென்ற எமது சட்டத்தரணிகளின் கோரிக்கைகள் மறுக்கப்பட்டு பொலிஸார் தேரர்களின் செயற்பாடுகளை தடுப்பதற்கு பதிலாக அவர்களையும் எம்மையும் அப்பகுதிக்குள் பிரவேசிக்க விடாது தடுத்திருந்தார்கள்.
அத்துடன் நீதிமன்றக் கட்டளையை அமுலாக்குமாறு வாதிட்ட சட்டத்தரணிகளும் தாக்கப்பட்டதோடு அங்கிருந்த இளைஞர்கள், சாதாரண மக்களென அனைவர் மீதும் திட்மிட்ட தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டு நிலைமைகள் மோசமடைந்திருந்தன.
குறிப்பாக நீதிமன்ற உத்தரவுகளை அமுலாக்க வேண்டிய பொலிஸார் குற்றவாளிகளை நடத்துவது போன்று சட்டத்தரணிகளையும் தமிழ் இளைஞர்களையும் நடத்தி அவர்களை வன்முறையை பிரயோகித்தாவது அங்கிருந்து அகற்றுவதற்கு முயற்சித்திருந்தார்கள்.
அதுமட்டும் அல்லாமல் தேரர்களுக்கு பாதுகாப்பளித்து சார்பாக செயற்பட்டிருந்தார்கள். நீதிமன்றக் கட்டளைகளை விடவும் பௌத்த தேரர்களின் கட்டளைகளையே அவர்கள் நிறைவேற்றினார்கள் என்பதை கண்கூடாக கண்டிருந்தோம்.
இந்த சம்பவம் தமிழர்கள் இந்த நாட்டில் இரண்டாம் தரப்பிரஜைகளாக நடத்தப்படுகின்றார்கள் என்பதை மீண்டும் சான்றுப்படுத்தியது.
இவ்வாறான நிலைமைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த தருணத்தில் தேரர்கள் நீதிமன்ற உத்தரவை மீறி மரணித்த தேரரின் உடலை ஆலய கேணிக்கு அருகில் வைத்து எரியூட்டிவிட்டார்கள்.
தமிழ் இளைஞர்கள் கிளர்ந்தெழுந்தபோதும் மீண்டும் வன்முறையான நிலைமைகள் தோற்றம்பெறக்கூடாது என்பதில் அங்கிருந்த சட்டத்தரணிகள் உள்ளிட்ட அனைவரும் அவர்களை கட்டுப்படுத்தியிருந்தார்கள்.
இந்த நிலையில் தென்னிலங்கையில் முல்லைத்தீவில் தேரரின் உடலை தகனம் செய்வதற்கு இடமளிக்கவில்லை என்ற தவறான செய்தி பரப்பப்பட்டுள்ளது.
உண்மையில் நாம் மதகுருவின் இறுதிக்கிரியைகள் இடம்பெறுவதைஎதிர்க்கவில்லை. ஆனால் இந்துமத பாரம்பரியங்களை சிதைத்து, பண்பாடுகளை அழித்து, எமது புனிதத்தினை இல்லாதொழிக்கும் ஒரு திட்டமிட்ட செயற்பாட்டினையே எதிர்த்திருந்தோம். மேலும் பௌத்தர்களையும், இந்துக்களையும் பிரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு செயற்பாடாக தேரர்களால் கூறப்படுகின்றது.
அவ்வாறு திட்டமிட்ட செயற்பாடு என்றால் ஓரிருவருடன் அல்லது சிலநூறு பேருடனேயே முரண்பாடுகள் ஏற்பட்டிருக்கும். ஆனால் இந்த சம்பவம் தமிழர்களையும் இந்துக்களையும் காயப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட அநீதியான செயற்பாடாகும்.
அதனால் தான் எட்டு மணிநேரத்தினுள் ஏற்பாடு செய்து போராட்டத்தில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்கள் மறுதினமே ஒன்றிணைந்து ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததோடு மகஜர்களையும் கையளித்திருந்தார்கள்.
சட்டத்தரணிகள் வடக்கு கிழக்கில் பணிப்புறக்கணிப்பில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் கூட்டமைப்பின் பங்களிப்பும் அரசாங்கத்திற்கான அழுத்தங்களும் எந்தளவிற்கு இருந்தன என்பதை சீர்தூக்கி பார்க்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருக்கின்றோம்.
தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு உள்நாட்டு நீதிப்பொறிமுறைக்குள் நீதியைப்பெற முடியாது என்பதை தொடர்ச்சியாக கூறிவருகின்றோம்.
அவ்வாறிருக்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு உள்நாட்டில் நீதியைப் பெறமுடியாது என்பதற்கு இது மற்றுமொரு உதாரணமாக உள்ளமை பெரும் வேதனை தரும் விடயம்.
குறிப்பாக நீதிமன்றங்கள் உத்தரவுகளை, தீர்ப்புக்களை பிறப்பித்தாலும் பெரும்பான்மை, இன, மத தரப்பினருக்கு எதிராக அவை ஒருபோதும் நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என்பது இதன்மூலம் வெளிப்பட்டுள்ளது.
இதன்மூலம் நீதித்துறையின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகின்றது. அதுமட்டுமன்றி நல்லெண்ணத்தினை வெளிப்படுத்தியுள்ள இலங்கை அரசாங்கம் நீதியான விடயங்களை முன்னெடுப்பார்கள். ஆகவே தமிழர்கள் உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கும் சர்வதேசத்தின் மனச்சாட்சியை இந்த விடயம் நிச்சயமாக தீண்டும்.
இதேவேளை தமிழர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று பௌத்த தேரர்கள் இதய சுத்தியுடன் கிழக்கு மாகாணத்தில் போராடியிருக்கவில்லை. ஒருசிறுபான்மையினத்தின் பிரச்சினையை பயன்படுத்தி பிறிதொரு சிறுபான்மையினத்தினை அடக்குவதற்கு அவர்கள் கையாண்ட தந்திரோபாயமாகவே அதனை தான் பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .
கிழக்கில் மனச்சாட்சியுடன் தமிழர்களின் தார்மீகமான கோரிக்கைக்காக அவர்கள் போராடியிருந்தால் முல்லையில் தமிழர்கள், இந்துக்களின் பாரம்பரியத்தினையும், பண்பாட்டினையும் அவமதித்து நீதிமன்ற உத்தரவை மீறிச் செயற்பட்டிருக்க மாட்டார்கள் எனவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார். அதுமட்டுமன்றி அத்தகைய செயற்பாட்டினை சரியென்று நியாயப்படுத்திக் கொண்டிருக்கவும் மாட்டார்கள்.
முல்லைத்தீவில் மட்டுமல்ல, தமிழர்தாயகத்தில் நடைபெறுகின்ற பௌத்த மதத்தின் பெயராலான ஆக்கிரமிப்புக்களும், சட்ட மீறல்களும் ஓரிரு தேரர்களால் நடைபெறவில்லை. தமிழர் தாயகத்தில் பௌத்த ஆக்கிரமிப்புக்களும், சட்டமீறல்களும் அரச அனுசரணையுடன் திட்டமிடப்பட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போதைய சூழலில் அந்த நிலைமைகளுக்கு ஒருமுற்றுப்புள்ளி வைப்பதானால், நாம் தோற்றுப்போனாலும் நீதிப்பொறிமுறையை முன்னெடுக்க வேண்டும்.ஜனநாயக ரீதியான மக்கள் போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும்.
கட்டமைக்கப்பட்ட அரசாங்கத்தின் திட்டமிடலை சர்வதேச மயமாக்குதல் வேண்டும். தமிழர்களின் அரசியல் பலத்தினை ஒன்றுதிரட்டி குரலெழுப்புதல் வேண்டும். இந்த நான்கு வழிகள் ஊடாகவே எமது எஞ்சியிருக்கும் இருப்பினை தக்க வைத்துக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.