இந்து- பெளத்த மோதலை உருவாக்க நாம் ஒருபோதும் நினைக்கவில்லை. ஆனால் நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் செயற்படும் சட்டத்தை வடக்கு கிழக்கில் மாத்திரம் தட்டிக்கழிக்க முயற்சிப்பதே முரண்பாடாக உள்ளதென பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.
நீதிமன்ற தீர்ப்பு தாமதமாகவே தேரரின் பூதவுடலை தகனம் செய்தோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் கொலம்பே மேதாலங்கார தேரரின் பூதவுடல் தகனம் செய்யப்பட்ட விடயம் குறித்து தமிழ் மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பு எழுந்துள்ளது. பொதுபல சேனா பெளத்த அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஜானசார தேரரின் தலையீட்டில் இடம்பெற்றதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இது குறித்து அவர் கருத்து கூறுகையிலேயே இதனை தெரிவித்தார்.
அவர் கூறியதானது,
இந்து -பெளத்த மக்கள் மத்தியில் இன முரண்பாடுகளை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கம் எம்மத்தியில் இல்லை. கொழும்பிலும் ஏனைய சிங்கள பகுதிகளிலும் தமிழ் சிங்கள மக்கள் மிகவும் நல்ல உணர்வுடன் ஆலய மத நடவடிக்கைகளை முன்னெடுத்து ஒற்றுமையாக செயற்பட்டு வருகின்றனர். ஆனால் வடக்கிலும் கிழக்கிலும் மாத்திரம் அந்த நிலைமைகள் இல்லாது பௌத்தம் புறக்கணிக்கப்பட்டு இனவாதம் பரப்பப்பட்டு அரசியல் தூண்டுதல்கள் மற்றும் அரசியல் சுயநலம் காரணமாக முரண்பாடுகள் ஏற்படுத்தப்படுவதை எம்மால் ஏற்றுகொள்ள முடியாது.
அதுமட்டும் அல்ல அந்த பூமி விகாரைக்கு உரித்தான பகுதியாகும். இந்துக்களுக்கு எவ்வாறு அங்கு சகல உரிமையும் உள்ளதோ அதேபோல் பௌத்தர்களுக்கும் சம உரிமை உண்டு. அங்கு எமது தேரர் ஒருவருக்கு நெருக்கடி என்றால் எம்மால் வேடிக்கை பார்க்க முடியாது. இந்த நாட்டில் பெளத்த சிங்கள முதன்மைத்துவம் அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ள நிலையில் அது வடக்கு கிழக்குக்கு பொருந்தாது என்றே அவர்கள் நினைக்கின்றனர். இந்த விடயத்தில் சட்டத்துறையை நாடிய சட்டத்தரணிகளும் அவ்வாறான ஒரு பிரிவினைவாத நிலைப்பாட்டில் இருந்தே வாதாடவும் முன்வருகின்றனர். அதேபோல் தமிழ் தேசிய கூட்டமைப்பு இவ்வாறு பிரிவினைகளை தூண்டி நாட்டில் இல்லாத பிரச்சினைகளை உருவாக்குகின்றனர். இவ்வாறான நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு என்னவாக இருந்தாலும் நாம் எமது உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம்.
கேள்வி:- எனினும் யுத்தத்திற்கு பின்னர் இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த ஒரு பகுதியில் விகாரை அமைத்து பழமைவாய்ந்த விநாயகர் ஆலய பகுதியை புறக்கணிப்பது ஏற்றுகொள்ள முடியாதென்ற நிலைப்பாடு மக்கள் மத்தியில் உள்ளதே?
தேரர்:- யுத்தகாலத்தில் கைப்பற்றப்பட்டதாக கூறுவது தவறு. இங்கு மேதாலங்கார தேரர் நீண்டகாலமாக இருந்தார். ஏன் வடக்கு கிழக்கில் விகாரைகளை அமைக்கக்கூடாதா. அதனையா தமிழ் சமூகம் சார்பில் வலியுறுத்துகின்றீர்கள்.
கேள்வி:- இல்லை, இந்து ஆலய வளாகத்தில் தகனம் செய்ததையே தவறென மக்கள் கூறுகின்றனர். இது இந்துக்களை வேதனைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதே?
தேரர்:- ஆலயத்தில் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை. விகாரைக்கு உரிய இடத்திலேயே நாம் அவ்வாறு செய்தோம். அத்துடன் நீதிமன்றத்தை அவமதிக்கவும் இல்லை. தீர்ப்பு வரும்வரை உடலை வைத்திருக்க முடியாது. ஆகவே நாம் அவ்வாறு நடந்துகொண்டோம். இதனை இந்து பெளத்த மோதலாக பார்க்க வேண்டாம்.
கேள்வி :- தமிழ் தேசிய கூட்டமைப்பு இதில் எவ்வாறு தொடர்புபட்டது? நீங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை குறைகூற காரணம் என்ன ?
தேரர்:- அவர்கள் தான் மக்களை தூண்டிவிட்டு இவ்வாறு குழப்பங்களை ஏற்படுத்தியதாக தகவல் கிடைத்தது. அனைவரும் இதனை அரசியலாக மாற்றவே முயற்சிக்கின்றனர்.