மக்களின் எதிர்பார்ப்பு சஜித் பிரேமதாசவே – யாழில் தெரிவித்தார் மங்கள - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, September 6, 2019

மக்களின் எதிர்பார்ப்பு சஜித் பிரேமதாசவே – யாழில் தெரிவித்தார் மங்கள

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவையே மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள் என்று அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும், மக்களின் இந்த கோரிக்கைக்கு செவி சாய்த்து கட்சி முடிவொன்றை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

யாழ்ப்பணத்தில் என்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கண்காட்சி நிகழ்வு நாளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், இடம்பெறவுள்ளது.

இதில் கலந்து கொள்வதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) அமைச்சர் மங்கள சமரவீர புகையிரதம் ஊடாக யாழிற்கு பயணத்தை மேற்கொண்டிருந்தார். குறித்த நிகழ்வின் ஊடாக தொழில் முயற்சியாளர்களுக்கு பல உதவி திட்டங்களும் வழங்கப்படவுள்ளன.

இந்த நிலையில், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் சஜித் பிரேமதாசவுக்கான தனது ஆதரவினை வெளிப்படுத்தினார்.

அவர் தெரிவிக்கையில், “ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை மக்கள் தெரிவு செய்துவிட்டார்கள். அமைச்சர் சஜித் பிரேமதாசவைத் தான் மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.

பதுளை, மாத்தறை, குருநாகலில் நடைபெற்ற கூட்டங்களில் கலந்துகொண்ட மக்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போதே இது தெளிவாக விளங்குகிறது.

நாம் எங்கு சென்றாலும், மக்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவைத் தான் விரும்புகிறார்கள். நான் இன்று யாழுக்கு வந்தபோதும், அவரால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை பார்க்கக்கூடியதாக இருந்தது.

எனவே, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை புதிதாக தெரிவுசெய்ய வேண்டிய தேவையில்லை என்றே நான் கருதுகிறேன். ஏனெனில் இப்போதே எமது வேட்பாளரை மக்கள் தெரிவு செய்து விட்டார்கள்.

ஆகவே, மக்களின் இந்தக் கோரிக்கைக்கு செவிசாய்த்து, தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.