சிதறிக் கிடக்கும் தமிழ்த் தலைவர்களை ஓரணியில் நிறுத்தும் சக்தியாய் ‘எழுகதமிழ்’ அமையட்டும்.வேல்முருகன் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, September 14, 2019

சிதறிக் கிடக்கும் தமிழ்த் தலைவர்களை ஓரணியில் நிறுத்தும் சக்தியாய் ‘எழுகதமிழ்’ அமையட்டும்.வேல்முருகன்

முள்ளிவாய்க்காலில் பேரழிவைச் சந்தித்தும் மனம் தளராமல் நீதிக்கான நெடும்பயணத்தில் நடைபோடும் ஈழத் தமிழ் சொந்தங்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக எனது
நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈழத் தமிழர்களை அழிக்க நினைக்கும் சிங்களப் பெளத்த பேரினவாதிகள் அஞ்சி நடுங்கும்படி ’என்றும் வணங்கா மண்’ இதுவென உலகுக்கு அறிவிக்க தமிழ் மக்கள் பேரவை ஒழுங்கு செய்யும் எழுக தமிழ் பேரணியை தமிழ் மக்கள் வெற்றிப்பெற செய்ய வேண்டும்.  ஈழத் தமிழர்களின் விடுதலைக் கனவைப் போற்றியபடி தோள்கொடுத்து நிற்கும் தொப்புள் கொடி உறவுகளாய் தமிழ்நாடு உங்களோடு உணர்வுப்பூர்வமாக நிற்கிறது என்பதை இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தாயக கனவினில் சாவினைத் தழுவிய ஆயிரமாயிரம் இளம் காளைகளின் தமிழீழக் கனவைத் தகர்ப்பதற்கு ஆட்லெறிகள் எதுவும் இதுவரை பூமியில் கண்டுபிடிக்கப்பட வில்லை என்பதை உலகுக்கு உணர்த்தும்படி எழுக தமிழர்களே!

விடுதலைப் பயிர் வளர்க்க தம் உயிரை விதைத்து மாவீரர்களாய் வரலாற்றில் நிலைப்பெற்றோர் தம் ஈகங்களும் விடுதலைப் போரில் அப்பாவிப் பொதுமக்கள் ஆயிரமாயிரம் உயிரை விட்டதும்  வீண் போகவிடாமல் தடுக்க வீறுகொண்டு எழுக தமிழர்களே!

கொத்துக் குண்டுகளாலும் ஆட்லெறிகளாலும் உணவு, மருந்து பொருட்களைக் தடுத்ததாலும் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று வகைதொகையின்றி ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தவர்களை நீதியின் முன் நிறுத்தாமல் ஓயமாட்டோம் என உலகிற்கு சொல்வதற்கு எழுக தமிழர்களே!

’வெற்றிப் பெற்று விட்டோம்’ என்ற இறுமாப்பில் தமிழ் மண்ணெங்கும் பெளத்த விகாரைகளை நிறுவியும் ’வளர்ச்சித் திட்டங்கள்’ என்ற பெயரால் தமிழ் மண்ணை ஆக்கிரமித்தும் சிங்களப் பெளத்தமயமாக்கும் பேரினவாதிகளின் கட்டமைப்பு ரீதியான இன அழிப்புக்கு எதிராய் ’உடல்கள் வேறு உணர்வுகள் ஒன்று’ என்று எழுக தமிழர்களே!

ஆண்டுகள் பத்து உருண்டோடிவிட்டதால் ’சோர்ந்து விடுவோம்’ என்றெண்ணி வெற்றிக் கூக்குரல் இடுவோரின் கொட்டம் அடக்க ஆழிப் பேரலைப் போல் எழுக தமிழர்களே!

”தாமே முன்மொழிந்து கொண்டு வந்த தீர்மானத்தை நடைமுறைபடுத்தாமல் இரண்டாண்டு, இரண்டாண்டு என்று காலம் கடத்தி அத்தீர்மானத்தைக் காலில் போட்டு மிதிக்கும் இனப்படுகொலையாளர்களை உலகத்தின் முன்பு பொறுப்புக்கூற வைக்காமல் நாங்கள் ஓயப்போவதில்லை” என்பதை சர்வதேச சமூகம் அறிந்து கொள்வதற்கு எழுக தமிழினமே!

போர்க் குற்றச்சாட்டு காரணமாக ஐ.நா. அமைதிக் காப்பு படையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட சர்வேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக்கி உலகின் கண்களில் மண்ணைத் தூவி இனப்படுகொலைக்குப் பரிசளித்து மகிழும் சிங்கள ஆட்சியாளர்களின் குலைநடுங்க கொப்பளிக்கும் கோபத்தோடு எழுக தமிழர்களே!

மக்களிடம் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்துவிட்டு எதிரிகளின் பகடைக் காயாக மாறிப் போன தமிழ்த் தலைவர்களுக்கு இறுதி எச்சரிக்கை ஒலி எழுப்ப எழுக தமிழர்களே!

உள்நாட்டு விசாரணையென்று உலகை ஏய்த்துவரும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு உற்றத் துணையாய் நின்று தமிழர்களின் கண்ணில் குத்தும் காரியத்தை செய்வோரின் துரோகப் படலத்திற்கு முடிவுகட்ட எழுக தமிழர்களே!

நம்மை கிள்ளிக் கீரையாய் மதித்து இயன்றவரை வளைக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் பிராந்திய வல்லரசுகளும் உலக வல்லரசுகளும் தமிழர்களின் போராட்ட உறுதியை அறிந்தேற்கும்படி அணிஅணியாய் திரள்க தமிழர்களே!

சிதறிக் கிடக்கும் தமிழ்த் தலைவர்களை ஓரணியில் நிறுத்தும் வரலாற்று சக்தியாய் தமிழ் மக்கள் பேரவையின் ’எழுக தமிழ்’ பேரணி அமையட்டும்!

மீண்டும் வருவோம் என்ற நம்பிக்கையோடு எதிரியிடம் கையளிக்கப்பட்டதால் ஆயிரமாயிரமாய் காணாமலடிக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி எழுக தமிழர்களே!

முன்பொருமுறை இதே செப்டம்பர் மாதத்தில் இந்திய அமைதிப் படைக்கு எதிராய் ஈழத் தமிழர்களை எழுச்சிக் கொள்ளச் செய்ய இந்தியாவின் ஆக்கிரமிப்புப் பசிக்கு தன்னுயிரை இரையாக்கி வீரச்சாவடைந்த ஈகச்சுடர் திலீபனின்  நினைவுகள் வழிநடத்த ஆக்கிரமிப்பாளர்களின் வேட்கையைத் தீக்கிரையாக்கும் எரிமலை என எழுக தமிழர்களே!

எத்தனை எத்தனை ஈகங்கள், எத்தனை எத்தனை வலிகள், எத்தனை எத்தனை இழப்புகள் எத்தனை எத்தனை இடப்பெயர்வுகள், எத்தனை எத்தனை துரோகங்கள் – இத்தனைக்கும் விடைகாணாமல் வீறுகொண்டெழுந்த இனம் பின் வாங்காது எனச் அறிவிக்க எழுக தமிழர்களே!

தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் எனப் பிரகடனப்படுத்த எழுக தமிழர்களே!