கனடா கணவனால் கொல்லப்பட்ட தர்ஷிகா! இது தொடர்கதையா அல்லது முடிவுரையா? வெளிவரும் ஆதங்கங்கள் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, September 16, 2019

கனடா கணவனால் கொல்லப்பட்ட தர்ஷிகா! இது தொடர்கதையா அல்லது முடிவுரையா? வெளிவரும் ஆதங்கங்கள்

கனடாவின் Scarboroughவில் 27 வயதான தர்ஷிகா ஜெகநாதன் பகல் பொழுதில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வீதியொன்றில் அவரது (முன்னால்) கணவனினால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பலரது மனச்சாட்சியையும் கேள்விக் குள்ளாக்கியுள்ளது.

வசதியாக வாழவைக்கவேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் எடுக்கின்ற முடிவுகள் எத்தனை பேரை சந்தோசமாக வாழவைக்கின்றது?


இதை ஆணவக் கொலை என்ற வரையறைக்குள் உள்ளடக்கி விடலாமோ தெரியவில்லை - ஆனாலும் மிகப் பெரியதொரு துயரம் - கொடூரம் - வன்முறை - வன்மத்தின் உச்சம்.

Torontoவின் இந்த வருடத்திற்கான 45ஆவது கொலையாக தர்ஷிகா ஜெகநாதன் பதிவாகியுள்ளார்.

இந்தக் கொலையுடனான முதலாம் நிலைக் குற்றச்சாட்டை எதிர்கொண்டு தடுப்புக் காவலில் இருப்பவர் 38 வயதான சசிகரன் தனபாலசிங்கம்.


தர்ஷிகாவின் கொலையை தமிழர் சமூகத்தின் மீதான தவறாக நோக்குவது நியாயமற்றது. ஆனாலும் ஒரு பொறுப்புள்ள சமூகமாக தமிழர் சமூகம் இது போன்ற வன்முறைகள் குறித்து உடனடி எதிர்வினையாற்ற வேண்டிய அவசியம் உள்ளது.

தமிழர்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவம் பொது அமைப்புக்கள், சங்கங்கள், ஊடகங்கள், (ஆண்கள்) மனநல சேவை அமைப்புக்கள் என பலரது உயிர்ப்புள்ள நகர்வுகளுக்கு உடனடியாக உள்ளாக வேண்டிய துயரமான சம்பவம் இது.

2015ஆம் ஆண்டு திருமணமாகி, துணையாக இருப்பார் என நம்பியவரின் கரங்களினால் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டிய நிலை எவ்வாறு ஏற்பட்டது?

தர்ஷிகா - இலங்கையில் மானிப்பாயைச் சேர்ந்தவர். அதிகம் இறை பக்தி கொண்டவர். சசிகரன், தாயகத்தில் முல்லைத்தீவைச் சேர்ந்தவர். தர்ஷிகா - சசிகரன் தம்பதியினர் திருமணம் 2015ஆம் ஆண்டு இந்தியாவில் நிகழ்ந்தது.

கனடாவில் இருந்து சென்று பெற்றோர்களின் ஏற்பாட்டில் சசிகரன் தர்ஷிகாவைத் திருமணம் செய்தார் . 2017ஆம் ஆண்டு February மாதம் 27ஆம் திகதி தர்ஷிகா கனடாவை வந்தடைந்தார் . இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் சசிகரனின் பெற்றோரின் வீட்டிலேயே வாழ்ந்து வந்தனர்.

ஆனாலும் இருவருக்கும் இடையில் அமைதியான வாழ்க்கை நீண்டகாலம் நீடிக்கவில்லை. கனடாவுக்கு புலம்பெயர்ந்த சில மாதங்களிலேயே தர்ஷிகா பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

தர்ஷிகாவைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஒன்றிக்கும் மேற்பட்டமுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனையும் சசிகரன் அனுபவித்துவர் . அவரது பிணை விடுதலையின் நிபந்தனைகளில் பிரதானமானது "தர்ஷிகாவுடன் நேரடியாகவோ - மறைமுகமாகவோ தொடர்பை ஏற்படுத்த முனையக்கூடாது" என்பதுதான்.



ஆனாலும் பிணை நிபந்தனைகளை சசிகரன் பின்பற்றவில்லை என்பதைத்தான் அவரது நீதிமன்றக் கோப்புக்கள் சுட்டிக் காட்டுகின்றன. சசிகரன் மீது இரண்டு தாக்குதல் குற்றச்சாட்டுக்கள் நிலுவையில் உள்ளன.

தர்ஷிகா, உடல் ரீதியாக மாத்திரமல்ல மன ரீதியாகவும் பல துன்பங்களை எதிர்கொண்டார். அவரது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டது. தர்ஷிகா தனது குடும்பத்துடன் தொடர்புகளை பேணுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. இலங்கையில் வாழும் பெற்றோரிடம் தொலைபேசில் பேசுவதற்குக் கூட அவருக்கு அனுமதி இருக்கவில்லை.

கொலை செய்யப்பட்டபோது தர்ஷிகா, சசிகரனிடமிருந்து பிரிந்திருந்தார்.

தர்ஷிகா அரசாங்கம் மீதோ - ஏனையவர்கள் மீதோ சாராமல் தனது வாழ்வை நகர்த்த இறுதிவரை முயன்றவர். Dollarama அங்காடியில் (Neilson & Ellesmere) தொழில் வாய்ப்பைப் பெற்றிருந்த தர்ஷிகா, தனது சக தொழிலாளர்களின் அளவற்ற அன்பையும் மரியாதையும் பெற்ற ஒரு இனிமையான பெண்.



கணவனின் வன்முறைகளின் எதிரொலியாக கடந்த சில வாரங்களாக விவாகரத்துப் பெற்றுக் கொள்ளும் எண்ணத்திலும் தர்ஷிகா இருந்தார். இதனை எதிர்கொள்ள முடியாத சசிகரன் - இரண்டு வாரங்களுக்கு முன் தர்ஷிகாவைக் கொலை செய்யப் போவதாக அவரது சகோதரனிடம் எச்சரித்திருந்ததாகவும் ஒரு தகவல் உள்ளது.

இந்த எச்சரிக்கையில் உண்மை இருப்பின் அது தொடர்பில் ஏன் பொலிஸாரிடம் முறையிடப்படவில்லை? என்ற கேள்வி உள்ளது.

September 11 - புதன்கிழமை மாலை 6:30 மணியளவில் Dollaramaவில் வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் வழியில் - கொலைத் திட்டத்துடன் காத்திருந்த கணவனிடமிருந்து தர்ஷிகாவால் தப்பிச் செல்ல முடியவில்லை. தன்மீது வெட்டுக் காயங்கள் இருந்தோதிலும் இம்முறையும் தப்பித்துவிடலாம் என்ற தர்ஷிகாவின் எண்ணமும் முயற்சியும் வெற்றியளிக்கவில்லை.

இறுதித் தடவையாக தன்னை ஏற்றுச் சென்ற பேரூந்தில் இருந்து இறங்கி தனது வாடகை வீட்டை நோக்கிச் சென்ற தர்ஷிகா - வெட்டுக் கத்தியியால் பலமுறை வெட்டப்பட்டு - அநாதைபோல் யாரோ ஒருவரின் வீட்டின் முன் வீழ்ந்து மரணமடைந்தார்.

சசிகரன், தர்ஷிகாவுக்காக பதுங்கி இருந்துள்ளார். தாக்கப்பட்டபோது தர்ஷிகா, தனது உயிரை காப்பாற்றிகொள்ள ஓடியுள்ளார். அவர் வாழ்ந்துவந்த அமைதியான வீதியை உயிர் மீதான பயம் கொண்ட தர்ஷிகாவின் அலறல் துளைத்தது.

தான் தாக்குதலுக்கு உள்ளான சமயம் - தர்ஷிகா தனது செல்லிடை பேசியில் அவசர உதவியை - பொலிஸாரை நாடினார். அந்த அழைப்பில் தப்பிக்க வேண்டும் என்ற அவரது அழுகையின் ஒரு பகுதி பதிவாகியது.



ஒரு மரண வாக்குமூலம் போல அந்த ஒலிப்பதிவு சசிகரனுக்கு எதிரான கொலைக் குற்றச்சாட்டு விசாரணையில் ஆதாரமாக பயன்படுத்தப்படும். கொடூரமான இந்த வன்முறையை சித்தரிக்கும் ஒளிப்பதிவுகளை பொலிஸார் சேகரித்து வருகின்றனர்.

தர்ஷிகா அவசர உதவி வருவதற்கு முன்னரே மரணமடைந்தார். அவரைத் தாக்கிய சசிகரன் பொலிஸார் சம்பவ இடத்தை சென்றடைய முன்னரே தப்பித்துச் சென்றுள்ளார்.

தான் திருமணம் செய்த பெண்ணை நடுத்தெருவில் திட்டமிட்டு கொலை செய்த சசிகரன் - Toronto பொலிஸாரின் 42 ஆவது பிரிவு காவல் நிவையத்தில் - 45 நிமிடங்களின் பின்னர் - சரணடைந்துள்ளார்.

அந்தப் பொழுதில் அவர் குடிபோதையில் இருந்துள்ளார் அதிகாரி ஒருவரை தாக்க முனைந்ததாக பதிவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

சசிகரன் மீது, முதல் நிலை திட்டமிட்ட கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. மறுநாள் அவர் நீதிமன்றில் நிறுத்தப்பட்டபோதிலும் அவருக்கு பிணை வழங்கப்படவில்லை.

தன் மீதான நீதிமன்ற விசாரணையின்போது அவர் எந்த உணர்ச்சிகளையும் சசிகரன் வெளிக் காட்டவில்லை. தனது பெயரை நீதிபதியிடம் தெரிவித்ததைத் தவிர வேறு எதுவும் பேசவில்லை.

இந்நிலையிஒல் சசிகரனை எதிர்வரும் புதன்கிழமைவரை தடுப்புக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சசிகரனுக்கு அடுத்த வழக்கு விசாரனையின்போது (September 18) தமிழ் மொழி பெயர்ப்பாளர் ஓருவரை கோரியுள்ள அவரது வழக்கறிஞர், தனது கட்சிக் காரருக்கு மருத்துவ உதவியையும் கோரியுள்ளார்.

தமிழர்கள் ஒரு சமூகமாக இந்தக் கொடூரமான கொலை குறித்து ஒளிவு மறைவற்ற கலந்துரையாடலிலை முன்னெடுக்க வேண்டும். எங்கள் சமூகத்தில் என்ன நடக்கின்றது என்பதில் நாங்களே நேர்மையான விமர்சனங்களை எதிர்கொள்ளல் அவசியம்.

இது காலத்தின் கட்டாயம் நமது சமூகத்தின் மீதான மற்றையவர்களின் பார்வை இதுவே உயிரிழந்த தர்ஷிகாவின் பெயரால் நாம் முன்னெடுக்கக்கூடிய மிகப்பெரிய அஞ்சலி!