இந்தியாவில் இளைஞர் ஒருவர் கும்பலால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை தூக்கில் ஏற்றாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என இறந்தவரின் மனைவி சபதம் போட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த தப்ரெஸ் அன்சாரி என்ற இளைஞர் கடந்த ஜூன் மாதம் 18ஆம் திகதி நண்பர்களுடன் சென்ற போது இருசக்கர வாகனத்தை திருடியதாக கூறி ஒரு கும்பல் அவரை மரத்தில் கட்டி வைத்தது.
பின்னர் அவர் 7 மணி நேரம் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் அன்சாரியை ஜெய் ஸ்ரீ ராம் என கூறும்படி அந்த கும்பல் வற்புறுத்தியது.
பின்னர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அன்சாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதனிடையில் அன்சாரி பைக்கை திருடவில்லை என அவர் குடும்பத்தார் தொடர்ந்து கூறி வந்தனர்.
இதில் தொடர்புடையவர்களை பொலிசார் கைது செய்தனர், அவர்கள் மீது கொலை வழக்கு பதியப்பட்ட நிலையில், அதை திரும்ப பெறப்பட்டது.
இது அன்சாரியின் மனைவி சைஸ்டா பர்வீன் மற்றும் குடும்பத்தாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இதையடுத்து சைஸ்டா அளித்துள்ள பேட்டியில், என் கணவரை கொலை செய்தவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தூக்கிலிட வேண்டும்.
இதை செய்யவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என கூறி அதிரவைத்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், என் கணவர் எப்படி இறந்தார் என உலகத்துகே தெரியும்.
குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிகள் நடக்கிறது, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என நான் ஏற்கனவே கூறியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.