கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து பெறப்பட்ட தங்க நகைகள், பணத்திற்கு என்ன நடந்தது என தென்னிலங்கையில் வாழும் மக்கள் மத்தியிலும் கேள்வி நிலவுகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் கந்துன்னெத்தி தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முறிகண்டி பிரதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த மக்கள் சந்திப்பு இன்று பிற்பகல் முறிகண்டி பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது முறிகண்டிகுளம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் தொடர்பாக மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து கருத்துத் தெரிவித்த அவர், “இன்று மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. மக்கள் குடிக்க நீர் இல்லாமலும் உணவு இல்லாமலும் பெரும் கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர்.
கடந்த 10 வருடங்களில் வீதியையும், ரயில் போக்குவரத்தையும் மாத்திரம் அபிவிருத்தியாக செய்துவிட்டு மக்களை அபிவிருத்தி பாதைக்குள் அழைத்துச் சென்றுள்ளதாக கூறுகின்றனர்.
இங்குள்ள மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எவருக்கும் விருப்பம் இல்லை. பிரச்சினைகள் இவ்வாறு தொடர்ந்தால் தான் அதைவைத்து அரசியல் செய்யலாம் என்பது அவர்களின் சிந்தனை.
இறுதி யுத்தத்தின் போது அதிலும் குறிப்பாக கடந்த காலங்களில் மக்களுக்கு மீளக் கையளிக்கப்பட்டதை விட மிகுதிக்கு தங்க நகைகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து தென்னிலங்கை மக்களும் கேள்வி எழுப்புகின்றனர்.
விடுதலைப் புலிகளின் வங்கியில் வைப்பிடப்பட்ட பணத்திற்கு என்ன நடந்தது? எவ்வளவு தங்கம், பணம் மீட்கப்பட்டது என்பது ரணில் விக்ரமசிங்கவிற்கும் தெரியாது. எல்லோரும் தத்தமது அரசியலை பாதுகாக்கவே முற்படுகின்றனர்” என அவர் இதன்போது தெரிவித்தார்