புல்மோட்டை பொன்மலைக்குடா பகுதியில் நீராட சென்ற 5 மாணவர்களில் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில், அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புல்மோட்டை இரண்டாம் வட்டாரத்தை சேர்ந்த மக்கீன் முனாசீர் (12 வயது) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரியவருகிறது. புல்மோட்டை மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்கள் ஐந்து பேர் நேற்று வீட்டாருக்கு தெரியாமல் பொன்மலைக்குடா பகுதிக்கு கடலில் நீராடச் சென்றுள்ளனர்.இதன்போது அவர்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில் அவர்களில் நால்வர் காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்த நிலையில் காணாமல்போன ஒருவரை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் இன்று காலை கொக்கிளாய் களப்பு முகத்துவார சிறு கடற்பகுதியில் சடலம் கரையொதுங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சடலம் மரண விசாரணையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன