மகளின் ஆடையை கிழித்து வன்புணர்விற்குட்படுத்த முயற்சித்த மருமகன் மீது மிளகாய்த் தூள் வீசிய மாமனார்: மூவர் காயம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, September 4, 2019

மகளின் ஆடையை கிழித்து வன்புணர்விற்குட்படுத்த முயற்சித்த மருமகன் மீது மிளகாய்த் தூள் வீசிய மாமனார்: மூவர் காயம்



வவுனியாவில் இன்று அதிகாலை தனது மூத்த மகளின் கணவன், தனது இளைய மகளான 25 வயதுடைய யுவதியை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்த முயற்சித்த நிலையில் மருமகன் மீது மிளகாய்த்தூள் வீசி மகளைக் காப்பாற்றிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா, சாந்தசோலையில் வசித்துவரும் தந்தை ஒருவர் தனது மூத்த மகளை மூன்று வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் அவர்களின் குடும்பத்திற்குள் பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதுடன், குடும்ப வன்முறைகளும் இடம்பெற்று வந்துள்ளது. குடும்ப வன்முறைகள் அதிகரித்ததையடுத்து திருமணமான குடும்பத்தினரை மாமனார் வீட்டிலிருந்து தனியாக வசிக்குமாறு கோரி அங்கிருந்து வெளியேறுமாறும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் தமது குடும்பத்தினருடன் வெளியேறிய மருமகன் தனது உறவினர்கள் வீட்டில் வசித்து வந்துள்ளார். பெண்ணின் வீட்டிலிருந்து வெளியேறியதிலிருந்து சீதனம் மற்றும் வீட்டைத்தருமாறு கோரி மனைவியைத் துன்புறுத்தியதுடன், தாயின் வீட்டிலுள்ள கால்நடைகளை விற்பனை செய்து பணம் வாங்கித்தருமாறும் மனைவியிடம் வற்புறுத்தி வந்துள்ளார்.



இந்நிலையில் மனைவி கணவனின் கொடுமைகள் தாங்க முடியாமல் வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார். விசாரணை மேற்கொண்ட பொலிசார் கணவனை அழைத்து சமரசம் செய்ய முயற்சித்துள்ளதுடன் குடும்பச் சண்டைகள் இன்றி வசிக்குமாறு குறிப்பிட்டு நேற்று மாலை கணவனையும் விடுவித்துள்ளனர். இந்நிலையில் பெண் தனது மூன்று வயது மகனுடன் தனது தாயாரின் வீட்டிற்கு வந்து நடந்த சம்பவங்களை தெரிவித்து ஆறுதல் அடைந்துள்ளார்.

இன்று அதிகாலை 1 மணியளவில் மதுபோதையில் மனைவி இருக்கும் சாந்தசோலை மாமனாரின் வீட்டிற்குள் அத்து மீறி உள் நுழைந்து மாமியார் மீது தலைக்கவசத்தினால் தாக்குதல் நடாத்தியுள்ளார். இதனைத் தடுத்த இளைய மகள் மீதும் தாக்குதல் நடத்தியதுடன், தடுக்கச் சென்ற மாமனாரின் மீதும் தாக்கியுள்ளார். இளைய மகளை பாலியல் துஷபிரயோகம் செய்ய முயற்சித்து அவரது ஆடைகளை கிழித்து நகத்தால் கீறல்களை ஏற்படுத்தியபோது சம்பவத்தை உணர்ந்த மாமனார் சமையலறையில் வைக்கப்பட்டிருந்த மிளகாய்த் தூளை அள்ளி மருமகனின் முகத்தில் வீசியுள்ளார். கண்ணில் பட்ட மிளகாய்த்தூளின் எரிவு தாங்கமுடியாமல் மருமகன் வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்தபோது அயவலர்கள் சிலரும் மருமகன் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.


தலையில் காயமடைந்த மருமகன், குடும்பத்தினர் பொலிசாருக்கு தகவல் வழங்க முயன்றபோது அருகிலுள்ள காணியில் ஓடி ஒளித்து கொண்டார். இன்று காலை காயமடைந்த மருகனும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதியாகியுள்ளார்.

இன்று அதிகாலை 1.30மணியளவில் பொலிசாரின் அவசர 119 அழைப்பிற்கு தெரியப்படுத்தி அதன் பின்னர் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு அயலவர்கள் முறைப்பாட்டினை மேற்கொண்டு தாய் மகள் காயமடைந்த நிலைமைகளை தெரிவித்தபோதும், 2.45மணியளவில் பொலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளதுடன், பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைத்துச் சென்று முறைப்பாடுகளை பதிவுசெய்தனர்.

யுவதி அணிந்திருந்த கிழிந்துபோன உடையையும் சாட்சியாக எடுத்துக்கொண்டு முறைப்பாடுகளை பதிவு செய்து சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் தாயையும் மகளையும் அனுமதித்துள்ளனர்.