சாவகச்சேரி நகரத்தில் புகையிரதத்தின் முன் பாய்ந்து நேற்றுக்காலை ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டிருந்தார். பேஸ்லைன் வீதி, கொழும்பு 2 என்ற முகவரியைச் சேந்த 75 வயதுடைய வரதராசா செல்லப்பா என்பவரே உயிரை மாய்த்தவர்.
அந்த செய்தியை நேற்று வெளியிட்டிருந்தோம்.
அவரது உடல் ஒரு நாளுக்கும் அதிகமாக பிரேத பரிசோதனை செய்யப்படாமல் இருந்து, சற்று முன்னர்தான் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக் செய்ய ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சிற்றூழியர் இல்லாமையினாலேயே பிரேத பரிசோதனை தாமதித்தது. குறிப்பிட்ட சிற்றூழியர் இன்றும் கடமைக்கு சமூகமளிக்காத நிலையில், இன்னொரு சிற்றூழியர் மூலமாகவே பிரேத பரிசோதனை நடத்தப்படுகிறது.
உயிரிழந்தவரின் உறவினர்களிடம் நேற்று சிற்றூழியர் பணம் கேட்டதாகவும், உறவினர்கள் கொடுக்க மறுத்ததையடுத்து, வேண்டுமென்றே நேற்றைய நாளை இழுத்தடித்து விட்டு, இன்று கடமைக்கு சமூகமளிக்கவில்லையென உறவினர்களால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சிற்றூழியர் நீண்ட காலமாக, பிரேத பரிசோதனைக்காக பொதுமக்களிடம் பணம் கேருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இது குறித்து, பாதிக்கப்பட்டவர்களால் எழுத்து மூலமாகவும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை நிர்வாகத்திடம் முறையிடப்பட்டிருந்தது. எனினும், வைத்தியசாலை நிர்வாகம் அந்த முறைப்பாடுகளை கண்டுகொள்ளவில்லை.