மின்சாரம் தடைப்பட்டதனால் மாவை சேனாதிராசாவின் முழக்கத்திலிருந்து பாடசாலை மாணவர்கள் தப்பித்த சுவாரஸ்ய சம்பவம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, September 10, 2019

மின்சாரம் தடைப்பட்டதனால் மாவை சேனாதிராசாவின் முழக்கத்திலிருந்து பாடசாலை மாணவர்கள் தப்பித்த சுவாரஸ்ய சம்பவம்!

மின்சாரம் தடைப்பட்டதனால் மாவை சேனாதிராசாவின் முழக்கத்திலிருந்து பாடசாலை மாணவர்கள் தப்பித்த சுவாரஸ்ய சம்பவம் நேற்று (9) இடம்பெற்றது.

மாவை சேனாதிராசாவின் “முழக்கம்“ பற்றி நாம் புதிதாக எதையும் சொல்ல வேண்டியதில்லை. சிறைக்கொட்டடியில் இரத்தமும் சதையுமாக போடப்பட்டேன் என்பதில் தொடங்கி, போராட்டம் வெடிக்கும் என்பது வரையான மணிக்கணக்கில் முழங்குவார்.

பொதுக்கூட்டங்களில்தான் இந்த முழக்கம் என்றால், கட்சி பிரமுகர்களுடனான கூட்டங்களிலும் இதே முழக்கம்தான். மாவை தலைமையிலான விசேட கூட்டங்கள் ஏதேனும் நடந்து, அது குறித்த தகவல்களை பெறுவதற்காக பிரமுகர்களை தொடர்புகொள்ளும்போது, சொல்லி வைத்ததை போல ஒரு பதில் வரும்.

“3 மணிக்கு கூட்டம் என அறிவித்தார்கள். மாவையர்தானே தலைமையுரை. அதனால் 4.15 அளவில்தான் போனேன். நான் போகும்போதும் அந்த மனுசன் பேசிக்கொண்டிருந்தார்“ என சலித்துக் கொள்ள ஆரம்பித்துள்ளனர்.


தமிழ் அரசுக்கட்சியின் சில பிரமுகர்கள் இதை மாவையிடமே நேரிலும் சொல்லியுள்ளனர். அளவிற்கதிகமாக பேசாதீர்கள், எல்லோரும் ஒரு மாதிரி பார்க்கிறார்கள் என. “நீங்கள் எல்லாம் சின்ன ஆட்கள். உங்களிற்கு விளங்காது. நாம் 1 மணித்தியாலயம் பேசினால்தான், சனம் அதில் 10 நிமிசங்களிற்கான விசயத்தை எடுத்துக் கொள்ளும். சனம் எவ்வளவுக்கெவ்வளவு விசயத்தை கூட எடுத்துக் கொள்ள வேண்டுமோ, அவ்வளவிற்கு நாம் அதிகமாக பேச வேண்டும்“ என அசால்ட்டாக பதில் சொல்லியிருக்கிறார்.

மாவையின் இந்த “முழக்கத்தில்“ நேற்று சிக்கி சின்னாபின்னமானது, அச்சுவேலி மத்திய கல்லூரி மாணவர்கள்.

கல்விமைச்சு நடைமுறைப்படுத்தும் திட்டம்- அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டம். இதன்படி பாடசாலைகளில் அமைக்கப்பட்ட கட்டடங்களை அந்த பகுதிக்குரிய அரச எம்.பிக்கள் திறந்து வைப்பதென்பதுதான் திட்டம். வடக்கில் அரச எம்.பிக்கள் என்றால் அது கூட்டமைப்புத்தானே. அதன்படி கூட்டமைப்பு எம்.பிக்கள் திறந்து வைத்தனர். சித்தார்த்தன் தென்மராட்சியில் சில பாடசாலைகளில், சுமந்திரன் ஹாட்லிக்கல்லூரியில், மாவை அச்சுவேலி மத்திய கல்லூரியில் கட்டடங்களை திறந்து வைத்தனர்.


அச்சுவேலி மத்திய கல்லூரியில் மாவை கட்டடத்தை திறந்து வைத்துவிட்டு, பாடசாலை மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

சர்வதேச விசாரணை, போர்க்குற்றம், ஐ.நா அமர்வு, புதிய அரசியலமைப்பிற்குள் சமஷ்டி எங்கே ஒளிந்திருந்தது, கட்சி மீது எதிர்க்கட்சிகள் சுமத்தும் விமர்சனம், ஜனாதிபதி தேர்தல், பொருளாதார கொள்கை என சுமார் ஒன்றேகால் மணிநேரம் மாவை முழங்கித்தள்ளினார்.

வழக்கமாக மாவை சொல்லும் விசயங்கள் கட்சிக்குள்ளேயே விளங்குவதில்லை. இதில், பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஒன்றேகால் மணிநேரம் முழங்கினால் சொல்லவும் வேண்டுமா?

இந்த இடி, மின்னல், புயலில் இருந்து தப்பிக்க முடியாமல் பாடசாலை மாணவர்கள் விழிபிதுங்கிக் போயிருந்தனர்.

அந்த நேரத்தில் திடீரென மின்சாரம் தடைப்பட்டது. ஒலிவாங்கி இயங்கவில்லை. ஆனால் விடாக்கண்டனான மாவை ஒலிவாங்கி இல்லாமல் முழங்க தொடங்கினார். “எமது உரிமைப்போர்“ என மாவை உச்சரித்தபோது, மின்சாரம் தடைப்பட்டது. ஒலிவாங்கி இயங்காத நிலையில், “எமது உரிமைப்போர்… எமது உரிமைப்போர்“ என ஒலிவாங்கி இல்லாமல், பார்வையாளர்களிற்கு கேட்கும் விதமாக குரலை திடீரென உயர்த்தி “முழங்கினார்“. இந்த திடீர் முழக்கத்தால், முன்வரிசையில் இருந்த மாணவர்கள் மிரண்டு விட்டனர். பின்னர், சுதாகரித்துக் கொண்ட மாணவர்கள் மத்தியில் சிரிப்பொலி எழுந்தது.

உடனடியாக பாடசாலை ஜெனரேற்றரை இயக்கி மின் வழங்கப்பட்டது. மின் தடைப்பட்டு வந்த நிகழ்வால், மாவை மிகச்சுருக்கமாக- ஒன்றேகால் மணித்தியாலத்தில்- உரையை முடித்துக் கொண்டார்.

இதேவேளை, மாவையின் முழக்கத்தில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல், மாணவர்கள் சிலர்தான் மின்சாரத்தை துண்டித்ததாக, நேற்று பாடசாலையுடன் தொடர்புடைய வட்டாரங்கள் சிலர் தெரிவித்தனர். எனினும், பாடசாலையின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளிடம் கேட்டபோது, அதை மறுத்திருந்தனர். அது வழக்கமான மின்தடை என்றனர்.