வெறுமனே ஆட்சியாளர்கள் தமது தலைகளை மாற்றிக்கொண்டு வழமையான ஊழல்வாத அரசியலை செய்ய இனியும் இடமளிக்கக்கூடாது. இந்த ஜனாதிபதி தேர்தலில் மக்களின் பலத்தைக்கொண்டு அடுத்த பொதுத் தேர்தலில் அரசியல் மாற்றம் ஒன்றினை செய்வதே எமது இலக்காகும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக தெரிவித்தார்.
இந்த ஒரு முறை எமக்கு வாய்ப்பளித்து பாருங்கள் ஜனநாயக மாற்றத்தையும், அதேபோல் ஜனாதிபதிகள் வசமிருந்த மக்களின் சொத்துக்களையும் மக்கள் மயமாக்கிக்காட்டுகின்றோம் எனவும் அவர் வாக்குறுதி வழங்கினார்.
தேசிய மக்கள் சக்தியின் அனுராதபுரம் மக்கள் சந்திப்பில் நேற்று முன்தினம் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் இங்கு மேலும் உரையாற்றுகையில்
இன்று ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்காக நாம் இயங்கி வருகின்றோம். இந்த தேர்தல் இந்த நாட்டுக்கான ஆட்சியாளர் ஒருவரையும் அரசாங்கம் ஒன்றினையும் உருவாக்கும் முக்கிய தேர்தலாகும். ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் என்பன மிகவும் எதிர்பார்ப்பு மிக்க தேர்தல்களாகும். இதில் மக்கள் எதிர்பார்ப்புடன் ஆட்சியாளர்களை நியமித்து குறுகிய காலத்தில் அரசாங்கத்தையும் ஆட்சியாளர்களையும் விமர்சிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
இந்த விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்களில் மாத்திரம் ஆட்சியை மாற்றிவிட முடியாது. மாறாக மக்கள் சரியான மாற்றம் ஒன்றினை உருவாக்க வேண்டும். மாற்றத்தை உருவாக்கும் அதிகாரம் மக்களிடமே உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களின் அதிகாரத்தை ஒரு குழுவினருக்கு வழங்குகின்றனர். இம்முறை இந்த அதிகாரத்தை யார் கைகளில் கொடுக்க வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்.
இன்று எமக்கு எவ்வாறான ஆட்சி வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும். இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியில் இருந்து மீளும் ஆட்சியொன்று வேண்டும். ஆகவே இத் தருணம் மிகவும் முக்கியமான தருணமாகும். இதுவரை காலமாக மக்கள் உருவாக்கிய ஆட்சிகள் பலவீனமான ஆட்சி என்பது தொடர்ச்சியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை உருவாக்க கொண்டுவரப்பட்ட ஆட்சியாளர்கள் முதலில் ஜனநாயகத்தையே மீறினார்கள்.
அதேபோல் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வந்ததாக கூரியவர்கள் செய்ததெல்லாம் களவுகளும் கொல்லைகளுமேயாகும். ஜனநாயகம் என கூறியவர்கள் மூலமாக வெள்ளைவேன் கடத்தல், கொலைகள், குற்றங்கள் அதிகரித்ததையும் கடன்களை வாங்கி நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கியதுமே நிலவின. இவ்வாறு ஆட்சியில் இருந்தவர்கள் மாறி மாறி தமது நாசகார வேலையினையே செய்தனர்.
ஒரு ஆட்சியாளர் மீது நம்பிக்கை வைத்து அவரை தெரிவு செய்வதும் பின்னர் அவர் ஊழல் வாதியென அவரை மாற்றுவதுமாக இதே சக்கரமே சுழன்றுகொண்டுள்ளது. இனியாவது மக்கள் இதில் இருந்து விடுபட வேண்டும். இந்த சுழற்சியை இந்த தேர்தலிலாவது நிறுத்தவேண்டும். இனியும் இந்த இரண்டு பிரதான அணியையும் நம்பி வாக்களிக்க முடியும் என மக்கள் நினைகின்றீர்களா? இனியும் இவர்களில் எவரையும் மக்களால் நம்ப முடியாது.
இனியும் இவர்களால் நாட்டினை கட்டியெழுப்ப முடியாது. தனி நபர்களை கொண்டு இந்த நாட்டை பலப்படுத்த முடியாது. ஒரு நாட்டினை கட்டியெழுபுவது என்பது மாயாஜால வேலை அல்ல. இந்த நாட்டினை நேசிக்கும் நபர்கள் மூலமாகவே இந்த நாட்டினை கட்டியெழுப்ப வேண்டும். மக்களுக்கு ஏற்படும் கஷ்டங்களை தமக்கு ஏற்படும் கஷ்டமாக நினைத்து வேலை செய்யும் நபர்களே இந்த நாட்டினை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியும்.
ஆனால் இந்த ஆட்சியாளர்கள் அவ்வாறு மக்கள் குறித்து சிந்திக்கும் ஆட்சியாளர்கள் அல்ல. இவர்கள் தமது சுகபோக வாழ்க்கையை மட்டுமே சிந்தித்து ஆட்சி செய்கின்றனர். ஆகவே மக்களுக்கான அணி இன்று உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியுடன் மக்கள் இணைய வேண்டிய தருணம் வந்துள்ளது. இப்போது எமக்குள்ள நோக்கம் இந்த தேர்தலை அடிப்படையாக கொண்டு அடுத்த பொதுத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஒன்று வேண்டும் என்பதேயாகும். தனி நபரை மாற்றி எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை.
ஆகவே அடுத்த பொதுத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஒன்றினை உருவாக்குவதே எமது பிரதான நோக்கமாகும். இந்த தேர்தலில் மக்களின் எதிரிக்கும் மக்களின் நண்பனுக்கும் இடையிலான போட்டியே இடம்பெறுகின்றது. இதில் பெரிய எதிரி யார் சின்ன எதிரி யார் என்ற காரணம் எல்லாம் எடுபடாது. மாற்று அணியில் உள்ளவர் எதிரிகள். அவர்களுக்கு எதிராக நாம் களமிறங்கியுள்ளோம். இதில் மக்கள் யாரை ஆதரிப்பது என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்.
நாட்டில் அனைத்து பகுதிகளிலும் மாளிகைகள் அமைக்கப்பட்டு ஜனாதிபதிக்கான தங்குமிடம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் இரண்டு ராத்திரிகள் கூட தங்காத மாளிகைகளும் இவற்றில் உள்ளன. ஆனால் அவற்றை பராமரிக்க கோடிக்கணக்கில் செலவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. எமக்கு ஒரு முறை ஆட்சியை கையளியுங்கள் இந்த அனைத்து சொத்துக்களையும் மக்கள் மயப்படுத்திக்காட்டுகின்றோம். மக்களுக்கான சரியான சேவையை எவ்வாறு செய்வது என்பதை நாம் செய்து கட்டுகின்றோம்.
எமது எதிர்கால சமூகத்துக்கான சரியான இராச்சியம் ஒன்றினை நாம் உருவாக்கிக்காட்டுகின்றோம். இன்று அரச நிறுவனங்கள் அனைத்துமே நட்டத்தில் இயங்குகின்றன. மக்கள் பெயரை கூறிக்கொண்டு ஆட்சியாளர்கள் கடன்களை பெற்று செல்கின்றனர். இதில் ஒன்றை கூறிக்கொள்ள விருபுகின்றேன், எமது ஆட்சியில் சாராய விற்பனையாளர் எவருக்கும் அரசியல் செய்ய இடமளிக்க மாட்டோம். சாராயம் விற்பவர்கள் சாராய விற்பனையை மட்டும் செய்யட்டும் அரசியல் செய்ய முடியாது.
இன்று இந்த நாட்டில் கொள்கலன்கள் அளவில் குடு போதைப்பொருள் கொண்டுவரப்படுகின்றது. ஒரு அமைச்சர் இன்னொருவரை நேரடியாக குற்றம் சுமத்துகின்றார். ஆனால் இதனை தடுக்க எடுத்த நடவடிக்கை ஒன்றும் இல்லை. ஆகவே முதலில் இந்த அரசியல் குப்பைகளை சுத்தம் செய்ய வேண்டும். இங்கிருந்தே எமது அத்திவாரத்தை போடா வேண்டும். அதற்கே நாம் முன்வந்துள்ளோம். வீழ்ச்சி கண்டுள்ள சமூகத்தை மீண்டும் கட்டியெழுப்ப எம்மாலான சகல நடவடிக்கையும் முன்னெடுப்போம். இனியும் இந்த நாசகார ஆட்சியை முன்கொண்டு செல்ல இடமளிக்க கூடாது. இப்போதில் இருந்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஆரோக்கியமான இராச்சியம் ஒன்றினை உருவாக்குவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.