மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கு தலையில் கொம்பு முளைத்துள்ளது.
மத்தியப்பிரதேசத்தின் ரஹ்லி கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி ஷ்யாம் லால் யாதவ் (74) அவருக்கு 2014ம் ஆண்டு தலையில் அடிபட்டது. அதன் பின் நகம் போன்ற ஒன்று தலையில் முளைக்கத் தொடங்கியது.
ஒவ்வொரு முறை சிகையலங்காரக் கலைஞரிடம் செல்லும் போது அதை நறுக்கிவிடுவது வழக்கம். ஆனால், அது மீண்டும் மீண்டும் முளைத்துக் கொண்டே சென்றது.
ஒரு கட்டத்தில் அதை நறுக்குவதை விட்டு விட்ட முதியவர் ஷ்யாம், பின் அது 10 சென்டி மீட்டர் வரை வளர்ந்து கொம்பு போல தோன்றியதால் மருத்துவமனைக்கு சென்றார். சாகர் நகரில் உள்ள பாக்யோதய் டிர்த் மருத்துவமனையில் மருத்துவர் விஷால் கஜ்பியே அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
74 வயதான விவசாயி அறுவை சிகிச்சைக்காக 10 நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்தார். பரிசோதனைகளுக்குப் பின், கொம்பு வெற்றிகரமாக அகற்றப்பட்டது. தலை முடி மற்றும் நகம், கொம்பு ஆகியவற்றின் வளர்ச்சிக்கு காரணமாக கூறப்படும் கெரட்டின் என்கிற தசை புரோட்டீனில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே அந்த விவசாயிக்கு தலையில் கொம்பு முளைத்ததாகக் கூறப்படுகிறது.
இது புற்றுநோய் தன்மை கொண்டதாகவும் இருக்கலாம் , புற்றுநோய்த் தன்மை இல்லாததாகவும் இருக்கலாம் என அறுவை சிகிச்சை தொடர்பான மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.