நாட்டில் வாக்குரிமை இருந்தாலும் ஜனநாயகம் இருக்கின்றதா? – அஜித் கேள்வி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, September 1, 2019

நாட்டில் வாக்குரிமை இருந்தாலும் ஜனநாயகம் இருக்கின்றதா? – அஜித் கேள்வி



நாடடில் வாக்குரிமை இருக்கின்றது. ஆனால் ஜனநாயகம் இருக்கின்றதா என்பதில் சந்தேகம் எழுவதாக அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த நாட்டின் அரசியல் முறையும், வாக்களிக்கும் மக்களின் அசமந்தப் போக்கும் பிழையான வழிமுறைகளாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹற்றனில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தெரிவிக்கையில், “இலங்கையில் இருக்கின்ற அரசியல்வாதிகள் அரசியலுக்கு வருகிறார்கள். அரசியல் நடத்துகிறார்கள். அதேபோன்று வாக்காளர்கள் உரிய நாளில் சென்று வாக்குகளை மாத்திரம் அளித்துவிட்டு ஒதுங்கிவிடுகிறார்கள்.

கடந்த 70 வருடங்களாக நாங்கள் ஜனநாயக ரீதியான வாக்களிக்கும் உரிமை இருப்பதாக கதைத்து வருகிறோம். ஆனால் அந்த ஜனநாயகம் உண்மையாகவே இந்த நாட்டில் இருக்கின்றதா என்பது குறித்து எமது மனசாட்சியை தட்டிக் கேட்கவேண்டும்.

வாக்குகளை ஒரு அரசியல்வாதிக்கு அளிக்கும் வரைதான் நீங்கள் மன்னர்கள். அதன்பின்னர் வாக்களித்த அனைவரும் கைவிடப்படுவார்கள்.

அரசியல் கட்சிகள் இருக்கின்றன. அதில் அரசியல் தலைவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் அவர்களிடையே ஜனநாயகம் இருக்கின்றதா என்பது குறித்துதான் சந்தேகமாக இருக்கின்றது.

குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவிலே இருக்கின்ற கட்சிகளின் தலைவர்களையோ, செனட் சபையிலோ, ஜனாதிபதி வேட்பாளர்களைத் தெரிவு செய்வது அந்தந்த கட்சிகளின் உறுப்பினர்கள்தான். ஆனால் எமது நாட்டில் அப்படியல்ல.

இங்கிலாந்து, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் அரச தலைவர்கள் அடிக்கடி மாறுகிறார்கள். கட்சிகளின் உறுப்பினர்களோ, மக்கள் பிரதிநிதிகளோ தங்களின் விருப்பத்திற்கு இணங்க உரிய முறையில் மக்கள் சேவையை வழங்காத பட்சத்தில் அல்லது விதிமுறைகளுக்கு அமைய செயற்படாத போது தங்களின் தலைவர்களை ஒன்றிணைந்து விலக்கிவிடுகிறார்கள். பின்னர் சரியான ஒருவரை தலைவராக தெரிவு செய்கிறார்கள். ஜனநாயகம் என்பது இதுதான்.

குறிப்பாக மக்களின் பிரச்சினைகளை செவிமடுப்பதற்கு அரசியல் தலைவர்கள் முனைவார்களானால், மேடைகளில் இந்த பிரச்சினைகளை பற்றி பேச வேண்டிய தேவையும் இருக்காது” என்று தெரிவித்தார்