கடன் சுமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்ல விடமாட்டேன் – பிரதமர் - Kathiravan - கதிரவன்

Breaking

Sunday, September 1, 2019

கடன் சுமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்ல விடமாட்டேன் – பிரதமர்

நாட்டின் கடன் சுமையை அடுத்த தலைமுறைக்கும் கொண்டுசெல்ல விடப்போவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே அடுத்த 5 வருடங்களில் அனைத்து கடன்களையும் தீர்த்து நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குளியாப்பிட்டி போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “நான் கால்வாய் புனரமைப்பவன் அல்ல. நாட்டைக் கட்டியெழுப்புபவன். அதுவே என்னுடைய இலக்கு. எனவே நாட்டைக் கட்டியெழுப்ப விரும்பும் அனைவரும் எம்முடன் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றேன். இனவாதத்தை தூண்டிவிட்டு அதன்மூலம் ஆட்சியைக் கைப்பற்ற நாம் முயற்சிக்கவில்லை.

போலி கோசங்களை எழுப்பி போராட்டங்களைச் செய்வதால் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது. நாட்டை முன்னேற்றவும் முடியாது. நாம் ஒரு போதும் ஆட்சியை கைவிட்டுச் செல்லப் போவதில்லை.

ஏப்ரல்-21 ஆம் திகதி குண்டுத் தாக்குதலின் பின்னர் ஆட்சி முடிந்து விட்டது என்று கூறினார்கள். பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து அரசாங்கம் தோல்வியடையும் என்றார்கள். ஆனால் நாம் மிகக் குறுகிய காலத்திற்குள் மீண்டெழுந்துவிட்டோம்.

தற்போது சுற்றுலாத்துறை பயணிகள் வருகை தர ஆரம்பித்துள்ளனர். இவ்வருடம் நவம்பர் மாதமாகும் போது முன்னரைப் போன்று சுற்றுலாப் பயணிகளின் வருகை சாதாரண நிலைக்கு திரும்பிவிடும்” என்று குறிப்பிட்டார்.