தேர்தலுக்கு முன்னைய உறுதிகள் காற்றில் வாலறும் பட்டங்கள் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, August 31, 2019

தேர்தலுக்கு முன்னைய உறுதிகள் காற்றில் வாலறும் பட்டங்கள்

கோதபாயவுக்கு விருப்பமான வாகனம் - வெள்ளை வான். விருப்பமான உடை - இராணுவக் கோல உடை. விருப்பமான உணவு - பாற்சோறு (முள்ளிவாய்க்கால் யுத்த முடிவில் பரிமாறப்பட்டது). விருப்பமான சத்தம் - வேட்டு அல்லது வெடிச்சத்தம் (வேட்பாளராக இவரை அறிவித்தபொழுது வெடிகளைக் கொழுத்துமாறு உத்தரவிடப்பட்டது). விருப்பமான தொழில் - மனிதப் படுகொலை. விருப்பமான நாடு - சீனா. பொழுதுபோக்கு - தலைகளை எண்ணுதல். பரம எதிரிகள் - ஊடகவியலாளர்கள். கேட்பதற்கு விருப்பமற்ற சொற்கள் - மனிதப் படுகொலை, இன அழிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர், சிறுபான்மையினர் உரிமை. விருப்பமில்லாத நகரம் - ஜெனிவா. விருப்பமற்ற இனக்குழுமம் - ஈழத்தமிழர். கனவில் அடிக்கடி வந்து கலக்கம் கொடுப்பவர்கள் - புலம்பெயர் தமிழர். 

இலங்கையின் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் எப்போது என்று இதுவரை நிச்சயமாகச் சொல்லப்படவில்லை.

தேர்தல் சட்டப்படி பார்க்கப்போனால் இவ்வருடம் டிசம்பர் மாதம் 9ஆம் திகதிக்கு முன்னர் நடைபெற வேண்டும். ஆனால், சிலவேளை இழுபட்டு அடுத்த ஏப்ரல் மாதம் அளவில் நடைபெறக்கூடுமென 19வது திருத்தத்தை மேற்கோள் காட்டி மைத்திரி தரப்பு கூறுகிறது.

1978இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன உருவாக்கிய அரசியல் யாப்பும், அதில் இதுவரை கொண்டுவரப்பட்ட 19 திருத்தங்களும் நடைமுறையில் குதர்க்கமாகவும் குழப்பமாகவும் உள்ளன.

ஜெயவர்த்தன ஜனாதிபதித் தேர்தலில் 3ஆம் தடவையும் போட்டியிட ஆசைப்பட்டும் முடியாது போனது, சந்திரிகா தமது பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு வருடத்துக்கு முன்னரே பதவியிலிருந்து நீங்க நேர்ந்தது, 3ஆம் தடவை போட்டியிட்ட மகிந்த ராஜபக்ச தலைகுப்புற வீழ்ந்தது என்பவை இவற்றுள் முக்கியமானவை.

அரசியல் சட்டத்தையும் அதன் திருத்தங்களையும் வியாக்கியானம் செய்பவர்கள் அது இரண்டு தரப்புகளுக்கும் செல்லுபடியாவது போலவும், செல்லுபடியாகாதது போலவும் கருத்துரைப்பதுவே எல்லாக் குழப்பங்களுக்கும் காரணம்.

எதுவாயினும், அடுத்த சில மாதங்களுக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறத்தான் போகிறது. சிங்கள் தேச அரசியல் கட்சிகள் இதில் போட்டியிடவுள்ளன. அவற்றின் அபேட்சகர்களை அறிவிக்கும் அல்லது தெரிவு செய்யும் சமாசாரமே இப்போது சூடு பிடித்துள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்தவாறே புதிதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவை உருவாக்கிய மகிந்த ராஜபக்ச அதன் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்து விட்டார் (அறிவித்து விட்டார் என்பது தெரிவு செய்யப்படவில்லையென்பதை அர்த்தப்படுத்துவது).

19வது திருத்தமானது மகிந்தவை மீண்டும் போட்டியிட விடாது தடுத்துள்ளது. இதே சட்டம் நாமல் ராஜபக்ச 35 வயதை எட்டாததால் போட்டியிட விடாது தடுத்துள்ளது. பசில் ராஜபக்சவை மகிந்தவின் மனைவியும் பிள்ளைகளும் விரும்பவில்லை. மகிந்தவின் அண்ணரும் முன்னாள் சபாநாயகருமான சாமல் ராஜபக்சவுக்கு ராசி சரியில்லைப்போலும்.

இதனால், மகிந்தவின் விருப்பப்படி கோதபாயவை ஜனாதிபதி வேட்பாளராக ராஜபக்ச அன்ட் கம்பனி நியமனம் செய்து அறிவித்துள்ளது. இதற்கென ஒரு கூட்டம் ஏற்பாடானது. மேடையின் முன்வரிசையில் ராஜபக்ச குடும்பத்தினர் வீற்றிருக்க கோதபாயவின் பெயரை மகிந்த அறிவித்தார். இப்பெயர் எவராலும் பிரேரிக்கப்பட்டு வழிமொழியப்படவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும்.

கோதபாய சுதந்திரக் கட்சியிலும் சரி, பொதுஜன பெரமுனவிலும் சரி உறுப்புரிமை பெறவில்லையென்று கொழும்பு ஊடகமொன்று சுட்டியுள்ளது. எனவே இவரை மகிந்த குடும்ப வேட்பாளர் என்று சொல்வதில் தவறிருக்க முடியாது.

இவர் இலங்கையில் மட்டுமன்றி, சர்வதேச மட்டத்திலும் அறிமுகம் தேவையற்றவர். ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான கொடூர யுத்த காலத்தில் பஞ்சமா பாதகங்களைப் புரிந்த கொடியவர் கோதபாய என்று அப்போது ஜேர்மனியில் வசித்த கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் குறிப்பிட்டது நினைவிலுள்ளது. சிலவேளை அவர் ஜனாதிபதித் தேர்தலில் கோதபாயவுக்கு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டால் ஆச்சரியப்பட வேண்டியிராது.

1978ஆம் ஆண்டின் அரசியல் யாப்பு ஜனாதிபதி ஆட்சிமுறையை இலங்கையில் அறிமுகம் செய்தது. முதல் இரண்டு தடவைகள் ஜெயவர்த்தன இப்பதவியை வகித்தார். அடுத்த ஐந்து ஆண்டுகள் ஆர்.பிரேமதாசவும், டி.பி.விஜேதுங்கவும் பங்கிட்டனர். அதன் பின்னைய இரண்டு தடவைகள் சந்திரிகாவும், அடுத்த இரண்டு தடவைகள் மகிந்தவும் ஜனாதிபதியாகவிருந்தனர்.

தற்போதைய ஜனாதிபதி மைத்திரியின் பதவிக்காலம் அடுத்த வருட முற்பகுதியில் முடிய வேண்டும். இன்னொரு தடவை தேர்தலில் போட்டியிட இவருக்கு சட்டத்தில் இடமிருந்தாலும், இவருக்கு ஆதரவு வழங்க எந்தவொரு அரசியல் கட்சியும் இப்போதில்லை.

இதனை முற்கூட்டியே அவருக்குத் தெரிவிக்கும் வகையில் கோதபாயவை களமிறக்கியுள்ளது ராஜபக்ச குடும்பம். இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் ஜே.வி.பி.யும் இம்முறை தேர்தலில் போட்டியிடுகிறது. இதன் வேட்பாளராக அனுர குமார திசநாயக்க தெரிவாகி, காலிமுகத் திடலில் மக்களிடம் பாரப்படுத்தப்பட்டார்.

அனுர குமார சுமார் பத்து இலட்சம் (ஒரு மில்லியன்) வாக்குகளைப் பெறுவாரென ஆரம்ப கணிப்புகள் தெரிவிக்கின்றன. இவற்றுள் 90 வீதத்துக்கும் அதிகமானவை சிங்கள மகாஜனங்களுடையதாகவிருக்கும்.

ஆக, இரண்டு பிரதான வேட்பாளர்கள் யாரென்பது இப்போது அனைவருக்கும் தெரியும்.

மூன்றாவது வேட்பாளர் தெரிவே இப்போது சவாலாகவுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் புதிதாக உருவாகும் தேசிய ஜனநாயக கூட்டணியே வேட்பாளரை தெரிவு செய்யுமென கூறப்படினும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவே முடிவெடுக்கும் சக்தி.

சஜித் பிரேமதாசவை ரணில் விரும்ப மாட்டாரென்பதால், கட்சிக்குள்ளிருக்கும் ஓர் அணி அவரை மாவட்டங்கள் தோறும் கூட்டித்திரிந்து ''சஜித் வருகிறார்'' என்ற மகுடத்தில் கூட்டங்கள் நடத்தி மாலைகள் அணிந்து அரங்கேற்றி வருகின்றன.

சந்திகளிலும் மேடைகளிலும் வேட்பாளர் தெரிவு இடம்பெறுவதில்லையென்று ரணில் அணியினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

ஆகஸ்ட் 31ஆம் திகதி வேட்பாளர் யாரென்பது தெரிவிக்கப்படுமென ரணில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அடுத்தாண்டில் அரசியலில் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்யும் ரணில் தனது பெயரை அறிவிப்பாரா அல்லது இன்னொருவரை அறிவிப்பாரா என்பது இப்போது மூடுமந்திரம்.

மூன்று கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்தாலும், தமிழருக்கான அரசியல் தீர்வுக்கு எந்தக் கட்சியுடனும் பேரம் பேசி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் திராணி கூட்டமைப்புக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

இந்தப் பத்தியின் இறுதிப் பகுதி பொதுஜன பெரமுன வேட்பாளர் கோதபாய பற்றியதாக அமைவது காலத்தின் தேவை.

இலங்கை இராணுவத்தில் பல காலம் உயர் பதவி (யாழ்ப்பாணம் உட்பட) வகித்த பின்னர், ஓய்வு பெற்றுவிட்டு அமெரிக்கா சென்று குடியேறி அந்நாட்டு பிரஜாவுரிமை பெற்றவர் இவர்.

2005இல் மகிந்த ஜனாதிபதியானதும் நாடு திரும்பி பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமனம் பெற்றார். இந்தப் பத்தாண்டு காலம் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கி ஒடுக்குவதற்காக தமிழினத்தை இலக்கு வைத்து போர் தொடுத்து அத்தனை நாசகாரச் செயல்களிலும் ஈடுபட்டவர்.

முள்ளிவாய்க்கால் என்பது இவரது கொடூரங்களுக்கான அடையாளம். ஏறத்தாள ஒன்றரை இலட்சம் தமிழ் மக்களை இல்லாமற் செய்தவர்.

ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து நிகழ்த்திய முதலாவது உரையில் தனது அண்ணருக்கு நன்றி கூறிய இவர், நாட்டில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் பொறுப்பு தமக்கு வழங்கியமை காலத்தின் பணி என்று கூறியிருந்தார்.

புரட்சிகர என்று எதனை இவர் எண்ணுகிறார்? அந்த பத்தாண்டு கால புரட்சியைவிட அதற்கு மேலான புரட்சி எண்ணம் இன்னும் உள்ளதா?

அண்மையில் தமிழ் அரசியல்வாதிகளை தனித்தனியாகச் சந்தித்தபோது, தாம் ஜனாதிபதியானால் வடக்கின் பிரச்சனைகளைத் தீர்ப்பேன் என்று உறுதியளித்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சனை என்று கூறாமல், வடக்கின் பிரச்சனையென்று கூறுவதனுடாக இவரது அரசியல் கபடத்தனம் புரிகிறது.

தமிழ் மக்களைப் பொறுத்தளவில் வடக்கின் பிரச்சனை என்பது அங்கு முகாமிட்டிருக்கும் இராணுவத்தினரே. கோதபாய இவர்களை அங்கிருந்து வெளியேற்ற உதவுவாரா?

இராணுவத் தளபதியாக நியமனமாகியுள்ள இவரது நம்பிக்கைக்குரிய, வன்னியின் போர்க்கால தளபதியாகவிருந்த சவேந்திர சில்வா, தமது புதிய பதவியேற்பின் பின்னர் நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியில், ஒரு இராணுவ முகாம்கூட மூடப்படவோ இடம் மாற்றப்படவோ மாட்டாது என்று கூறியதை அதற்கிடையில் தமிழர்கள் மறந்திருப்பார்களென்று கோதபாய நினைப்பது மடைத்தனம்.

எள்ளளவிலும் தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமற்ற கோதபாய பற்றி கொழும்பிலும், புலம்பெயர் நாடுகளிலும் வசிக்கும் சில ஊடகவியலாளர்களுடன் உரையாடிய பொழுது அவர்கள் எவ்வாறு இவரை நோக்குகின்றனர் என்று தெரிவித்ததன் ஒரு சிறு தொகுப்பு கீழே:

கோதபாயவுக்கு விருப்பமான வாகனம் - வெள்ளை வான். விருப்பமான உடை - இராணுவக் கோல உடை. விருப்பமான உணவு - பாற்சோறு (முள்ளிவாய்க்கால் யுத்த முடிவில் பரிமாறப்பட்டது). விருப்பமான சத்தம் - வேட்டு அல்லது வெடிச்சத்தம் (வேட்பாளராக இவரை அறிவித்தபொழுது வெடிகளைக் கொழுத்துமாறு உத்தரவிடப்பட்டது). விருப்பமான தொழில் - மனிதப் படுகொலை. விருப்பமான நாடு - சீனா. பொழுதுபோக்கு - தலைகளை எண்ணுதல். பரம எதிரிகள் - ஊடகவியலாளர்கள். கேட்பதற்கு விருப்பமற்ற சொற்கள் - மனிதப் படுகொலை, இன அழிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர், சிறுபான்மையினர் உரிமை. விருப்பமில்லாத நகரம் - ஜெனிவா. விருப்பமற்ற இனக்குழுமம் - ஈழத்தமிழர். கனவில் அடிக்கடி வந்து கலக்கம் கொடுப்பவர்கள் - புலம்பெயர் தமிழர்.

இந்தப் பட்டியல் குரங்குவால் போல் நீண்டது. இப்படியான ஒருவர் இந்து சமுத்திரத்தின் முத்து என அழைக்கப்படும் இலங்கையின் ஜனாதிபதியானால்....!