2012 ல் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் தாமரை கோபுரத் திட்டத்திற்காக வழங்கப்பட்ட 2 பில்லியன் ரூபாய் தொடர்பாக தற்போது எந்த தகவல்களும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள தாமரைக் கோபுரத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு நிதி மோசடி மற்றும் ஊழல் என்ற தலைப்பில் பேசிய ஜனாதிபதி, சீனாவில் அத்தகைய நிறுவனம் எதுவும் இல்லை என்று தெரியவந்துள்ளதாகவும் கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தாமரைக் கோபுரமானது, நிர்மாணிப்பு யுகத்தில் எமக்கு கிடைத்த ஒரு வெற்றியாகவே நாம் கருதுகிறோம். இது இலங்கையின் மிக முக்கியமான ஒரு சின்னமாக மாற்றமடைந்துள்ளது என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.
தேசிய ரீதியாக மட்டுமன்றி சர்வதேச ரீதியாவும், இது எமக்கான பெருமையைத் தேடித்தந்துள்ளது. தாமரைக் கோபுரத்தின் நிர்மாணிப்புப் பணிகளுக்காக 7 வருடங்கள் தேவைப்பட்டன.
2012 ஆம் ஆண்டுதான் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கான நிதி எமக்கு சீனாவிலிருந்து எக்ஸிம் வங்கி ஊடாக கடனுதவியாக வழங்கப்பட்டது. இதற்காக எமது அரசாங்கமும் ஐந்து தரப்பினருடன் உடன்படிக்கையியை செய்துக்கொண்டது. இந்த நிர்மாணிப்பு தொடர்பாக இலங்கையர் என்ற ரீதியில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
2012 ஆம் ஆண்டு இதன் அடித்தளம் அமைப்பற்காக 200 கோடி ருபாய், அலிப் என்ற சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. ஆனால், அந்த நிறுவனம் சிறுது காலத்தில் காணாமல் போய்விட்டது. அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 200 கோடி ரூபாயும் எங்கு சென்றது என்று தெரியவில்லை.
இது தொடர்பாக நாம் விசாரணைகளையும் மேற்கொண்டோம். இறுதியில் அந்த நிறுவனம் எங்கு சென்றது என்பது இதுவரை தெரியாதுள்ளது.
இதனையடுத்து எமது மக்களின் பணத்தில் இந்த கோபுரத்தை அமைக்க நாம் தீர்மானித்துள்ளோம். மேலும், இதன் நிர்மாணிப்புப் பணிகளை முழுமைப்படுத்த இன்னும் 300 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.
இவ்வாறான எமது நாட்டின் இந்த தேசிய சொத்தை நாம் பாதுகாக்க அரசாங்கம் என்ற ரீதியில் நாம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்” என கூறினார்.