முஸ்லீம்களுக்கு ஒரு சிறந்த தலைவர் ரிஷாட் போல, சிங்கள பௌத்தர்களுக்கு ஒரு சிறந்த தலைவர் ஞானசார போல, ஏன் எம் தமிழர்களிற்கு ஒருவர் இல்லையென முல்லைத்தீவு மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நேற்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்ற தீர்ப்பை புறந்தள்ளி பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்த கரைக்கு அருகாமையில் உயிரிழந்த பிக்குவின் உடல் ஞானசாரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகளினால் புதைக்கபட்டுள்ளது.
இந்த சட்டத்தை மீறிய அவரையும் அவரது சகாக்களையும் கைது செய்யாமல் பொலிசார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தமை யானது , தமிழர்களுக்கு என ஒரு சிறந்த தலைவன் இல்லாமல் போனதன் வலியை, வெற்றிடத்தினை உணர்த்தப்பட்டிருக்கின்றது.
இவ்வாறான நிலையில் தமிழ் மக்களின் வாழ்விடம் கேள்விகுறியாகி நிற்கின்றதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
வாய் மூடி மௌனிகளாக தமிழ் தலைமைகள் எதற்காக இருக்கின்றார்கள் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதேவேளை நேற்றையதினம் கூட்டமைப்பின் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் , யாழில் இருந்தபோதும் ஏன் முல்லைத்தீவுக்கு வந்து தேரர்களின் அராஜகம் தொடர்பில் கேள்வி எழுப்பவில்லை எனவும் முல்லைத்தீவு மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் கடந்த 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் தமிழர்களிற்கு ஓர் தலைவர் இருந்தார். அவர் எம்மண்ணில் இருக்கும்வரை எமது மண்ணையோ அல்லது மக்களையோ சீண்டுவதற்கு எல்லோரும் அஞ்சினர். ஆனால், இப்போது தமிழர்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகி விட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் எமது நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. வளங்கள் கொள்ளையிடப்படுகின்றன. பாகனற்ற மந்தைகள் போல தமிழர்களின் இன்றைய நிலை உள்ளதாகவும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை முல்லைத்தீவில் நேற்று இடம்பெற்ற சம்பவம் ஒன்றும் முடிவுரையல்ல... தொடர்கதைக்கான ஆரம்பம் என்பதை தமிழர்கள் எல்லோரும் உணர்ந்துகொண்டுள்ளார்கள்.
தமிழர்களிற்கான ஒரு சிறந்த தலைவன் இல்லாமல் போனதன் வலியை, வெற்றிடத்தினை உணர்த்த்தியுள்ளது முல்லைத்தீவு சம்பவம் என்பதுதான் உண்மை.