முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமை பிரதானி காமினி செனரத் மற்றும் பிரதிவாதிகள் இருவர் சகல குற்றங்களில் இருந்தும் விடுதலை செய்ய நிரந்தர நீதாய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றம் சம்பா ஜனாகி ராஜரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழுவினால் இந்த தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பிரதிவாதிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சரியான முறையில் சாட்சிகள் இல்லாத காரணம் இல்லை என நிரந்தர நீதாய நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி சம்பத் அபேகோன் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் பிரதிவாதிகளுக்கு எதிராக முன்வைக்கபடும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வழக்கு விசாரணை மேற்கொள்ள முடியாது என்பதனால் அவர்களை விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி வரையான காலத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்தியதால் பொதுச் சொத்துக்கள் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் பிரதிவாதிகள் குற்றமிழைத்துள்ளதாக சட்டமா அதிபரினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.