கூட்டமைப்பும் மஹிந்தவையே விரும்புகின்றது? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, August 8, 2019

கூட்டமைப்பும் மஹிந்தவையே விரும்புகின்றது?


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எவரையும் ஆதரிக்காமல் நடுநிலை வகித்துக் கொண்டிருப்பதாக பேசிக் கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இப்பொழுது தாம் ஆதரித்துக் கொண்டிருக்கும் ஐக்கிய தேசிய கட்சியினை கை விடுவதற்கான முன் முயற்சிகளை ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதனூடாக மஹிந்தவின் ஆட்சியை ஏற்படுத்தி அந்த ஆட்சிக்கு எதிராக தமிழ் தேசியம் பேசி மீண்டும் பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றுவதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் எனவும் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக மேலும் தெரிவித்ததாவது, இன்றைய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை முழுமையான முறையில் ஆதரித்து அதனூடாக அரசியலமைப்பு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நம்பி அதனை செய்து முடிக்க முடியாத நிலையில் நாம் சொன்ன அபிவிருத்திக்குள் நுழைந்து கம்பெரலிய திட்டத்தை கையிலெடுத்து இன்று தடுமாறிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்நிலையில் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை ஜனாதிபதி தேர்தலில் ஆதரித்தால் தம்மால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமக்குரிய ஆசனங்களை வெல்ல முடியாது என்ற நிலையில் இன்று குழம்பிப் போயிருக்கின்றார்கள்.

2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 19 வது திருத்த சட்டத்தை வரைவதில் முன்னோடியாக இருந்த சுமந்திரன் அந்த திருத்த சட்டத்தில் தமிழ் மக்களுக்கான எவ்வித அரசியலமைப்பு மாற்றத்தையும் அதில் உட்புகுத்தவில்லை. இதனை காலங்கடந்து உணர்ந்து கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்கள் அத்தலைமைக்கு பாரிய அழுத்தத்தை கொடுத்து வருகின்றனர்.

இன்று குழம்பிப் போயிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எதிர்வரும் தேர்தலில் 6 ஆசனங்களைக் கூட தக்கவைத்துக் கொள்ள முடியாத நிலைமை ஏற்படும் என கூட்டமைப்பினரே எதிர்வு கூற ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் வெறுமனே மீண்டும் தமிழ் தேசியத்தை பேசாவிட்டால் மீண்டும் பாராளுமன்ற ஆசனங்களை பெறமுடியாது என்ற நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆட்சியில் அமர்த்தி மீண்டும் தமிழ் தேசிய பேச்சின் ஊடாக தமது செல்வாக்கினை அதிகரித்துக் கொள்ள முற்படுகின்றார்கள்.

அது மட்டுமின்றி கிளிநொச்சி மாவட்டத்திலும் எனக்கான அரசியல் அழைப்பு இன்று எழுந்துள்ளது. இதனடிப்படையில் நான் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மாபெரும் வெற்றியை அடையக்கூடிய சூழ்நிலை எழுந்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை மையப்படுத்தி இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பை பலவீனப்படுத்திய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயல்பாட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்கள் உணர்ந்துள்ளார்கள் எனவும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்துள்ளார்.