வைத்தியர் சிவரூபனின் கைதானது வடக்கு மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளதாக வடக்கு மாகாணசபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் வைத்தியசாலை பொறுப்பதிகாரி சிவரூபன் அவர்கள் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என காரணம் காட்டி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் வடக்கு மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன்,நல்லாட்சி அரசாங்கமானது தமிழ் மக்களை பயங்கரவாத தடைச்சட்டத்தை பாவித்து தமிழ் மக்களின் குரல்வளையை நசுக்க இவ்வாறான செயற்பாடுகள் ஈடுபடுகிறது.
அரசாங்கமானது ஐநா சபையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக உறுதிமொழி அளித்து இன்றுவரை பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வில்லை.
இது தொடர்பில் யுத்தம் முடிவுற்ற காலத்தில் பல்வேறு அரச அதிகாரிகள் வைத்தியர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப் பட்டு விசாரணைக்கு உட்படுத்தப் பட்டார்கள் அந்த நிலை இன்றும் தொடர்ந்து உள்ளது. இதனை தடுத்து நிறுத்த உலக நாடுகள் முன்வரவேண்டும்.
போர்க்குற்றம் இழைத்த இராணுவ தளபதி சவேந்திர சில்வா தற்போது நாட்டின் இராணுவத் தளபதியாக நியமிக்கப் பட்டுள்ளார். இந்த நியமனமானது தமிழ் மக்களை மேலும் அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
நல்லாட்சி அரசாங்கம் என்ற போர்வையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களை ஒரு இராணுவ மயமாக்கலுக்குள் வைத்திருப்பதே இந்த அரசாங்கத்தின் நோக்கமாக கருதக் கூடியதாக உள்ளது.
இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த சவேந்திர டீ சில்வா இன்று இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.உலக நாட்டில் பல தலைவர்கள் குறித்த நியமனத்திற்கு எதிராக தமது கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள்.
எனவே இந்த அரசாங்கமானது வேண்டுமென்றே தமிழ் மக்களை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் குறித்த குற்றவாளியை இராணுவ தளபதியாக நியமித்து உள்ளார்கள். எனவே இந்த விடயம் கண்டிக்கத்தக்க விடயமாகும் என்றார்.