உண்மை முகத்தை காட்டிவரும் மைத்திரி: அவருடன் பணியாற்றியதால் வெட்கமடைகிறேன் – சாணக்கியன் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, August 21, 2019

உண்மை முகத்தை காட்டிவரும் மைத்திரி: அவருடன் பணியாற்றியதால் வெட்கமடைகிறேன் – சாணக்கியன்போர்க் குற்றவாளியான சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்ததன் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உண்மை முகம் வெளிவந்துள்ளதாக மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஸ்ரீங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக இவ்வாறான இனவாதிகளுடன் பயணித்திருப்பதையிட்டு தான் வெட்கமடைவதாக அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் இன்று (புதன்கிழமை) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

அதில் அவர் தெரிவிக்கையில், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது தமிழ் மக்கள் பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். இந்த நாட்டில் நிலவிய மோசமான ஆட்சி அதிகாரத்தினை துடைத்தெறிவதற்கு பெரும் பங்களிப்பினை தமிழ் மக்கள் வழங்கினார்கள்.

ஆனால் தமிழ் மக்களுக்கு விரோதமான நடைமுறைகளையே ஜனாதிபதி தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றார். இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பயணித்தவன் என்ற அடிப்படையில் நான் வேதனைப் படுகின்றேன்.

இந்த நாட்டில் யாருக்கு எதிராக தமிழ் மக்கள் ஒன்று திரண்டார்களோ அவர்களைப் பாதுகாக்கும் பணியையே ஜனாதிபதி மேற்கொண்டு வருகின்றார்.

தமிழ் மக்களால் புறக்கணிக்கப்பட்டவரை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர ஜனாதிபதி எத்தணித்தார். இவ்வாறு அண்மைக் காலமாக ஜனாதிபதி தமிழ் மக்களுக்கு எதிரான பல்வேறுபட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.

அதன் ஒரு கட்டமாகவே தமிழ் மக்களினால் வெறுக்கப்படுபவராக கருதப்படும் போர்க் குற்றவாளியாக சர்வதேசத்தினால் தெரிவிக்கப்படும் சவேந்திர சில்வாவினை இராணுவத் தளபதியாக நியமித்துள்ளார். இதன் மூலம் ஜனாதிபதி தனது உண்மை முகத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த நாட்டில் பெரும்பான்மையின கட்சிகள் ஓருபோதும் சிறுபான்மை இனத்தினை அரவணைத்து செல்லாத உண்மையினை உணர்ந்தவன் என்ற அடிப்படையில் தற்போது பெரும்பான்மையின கட்சிகளுடன் உள்ளவர்கள் அதில் இருந்து வெளியேறி தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கைகோர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.