ஊடகவியலாளரை தாக்கிய சிறீடெலோ? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, August 27, 2019

ஊடகவியலாளரை தாக்கிய சிறீடெலோ?

இணைய ஊடகமொன்றின் பேரில் கப்உஈபம் வாங்கிவருவதாக அடையளாப்படுத்தப்பட்ட டெலோ கட்சி நபரொருவர் ஊடகவியலாளரை  தாக்கியுள்ளார்.

வவுனியா ஊடகவியலாளர் கே.கோகுலன் மீது நேற்று திங்கட்கிழமை (26) மாலை சிறிடெலோ அரசியல் கட்சியின் இளைஞரணி தலைவர் தாக்குதல் நடத்தியமையால் ஊடகவியலாளர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியாவில் இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஈரப்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் வருடாந்த ஊடக சந்திப்பு நேற்று திங்கட்கிழமை (26) மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது அங்கு வருகை தந்த சிறிடெலோ கட்சியின் இளைஞரணி தலைவரான பரமேஸ்வரன் கார்த்தீபன் ஊடக நிறுவன மொன்றின் இலட்சினை பொறிக்கப்பட்ட ஒலிவாங்கியை ஊடக சந்திப்பில் வைத்தது யார்? என அங்கிருந்த ஊடகவியலாளர்களுடன் முரண்பட்டுள்ளார்.

எனினும் அனைவரும் மௌனமாக இருந்துள்ள போதிலும் தொடர்ந்து ஊடக சந்திப்புக்கு இடையூறு விளைவித்த நிலையில் அங்கிருந்த ஊடகவியலாளர் தானே குறித்த ஒலிவாங்கியை வைத்ததாகவும் அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை எனவும் ஊடகவியலாளர் கே.கோகுலன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனால் குறித்த ஊடகவியலாளருடன் முரண்பட்டுக் கொண்ட இளைஞரணி தலைவர் வெளியில் சென்று ஊடகவியலாளர் வரும் வரை காத்திருந்து தாக்கியுள்ளார் என தெரியவருகின்றது.


எனினும் ஊடகவியலாளருடன் சென்ற ஏனைய ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் தாக்குதல் நடத்த முடியாதவாறு தடுத்து ஊடகவியலாளரை காப்பாற்றி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கு ஊடவியலாளர் சென்ற நிலையில் குறித்த சம்பவம் ஈரப்பெரியகுளம் பகுதியில் இடம்பெற்றமையால் அங்கு சென்று முறைப்பாட்டை பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டதையடுத்து ஈரப்பெரியகுளம் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில் பொலிஸ் முறைப்பாட்டின் பின்னர் ஊடகவியலாளருக்கு உடல் நிலை மோசமானதையடுத்து வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளரின் வீட்டின் மீது அண்மையில் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.இந் நிலையில் சிறிடெலோ கட்சியின் இளைஞரணி தலைவரும் ஊடகவியலாளரே தாக்குதல் நடத்தியதாக முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

அண்மையில் புதிய கற்பகபுரம் பகுதியில் சிறிடெலோ கட்சியின் சார்பில் சுதந்திரக்கட்சியின் ஊடாக உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினரான விஜயகுமாரினால் கிராமத்தில் சமூக செயற்பாட்டில் ஈடுபடும் இளைஞர்களுக்கு அச்சுறுத்தல் விடுவதாக ஊடகங்களுக்கு கிராம மக்கள் தெரிவித்த கருத்து செய்தியாக வெளியிடப்பட்டு வந்த நிலையிலேயே சிறிடெலோ இளைஞரணி தலைவர் பரமேஸ்வரன் கார்த்தீபன் குறித்த ஊடக நிறுவனத்திற்கு எதிராக செயற்பட்டுவருவதுடன் ஊடகவியலாளர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்.