பிள்ளையாரை ஆக்கிரமித்த பிக்கு மனநோயாளியென ஒப்புதல்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, August 27, 2019

பிள்ளையாரை ஆக்கிரமித்த பிக்கு மனநோயாளியென ஒப்புதல்!

அண்மையில் முல்லைத்தீவு - நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நந்திக் கொடிகளை பிடுங்கி எறிந்த பௌத்த பிக்கு மனநோயால் பீடிக்கப்பட்டார் என்று தெரிவித்து அதற்கான மருத்துவ சான்றிதழ்களையும், பௌத்தபிக்கு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நேற்று வவுனியா மேல் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார்.

குறித்த ஆலயம் தொடர்பான மேன் முறையீடும், மீளாய்வும் நேற்று வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றபோதே, பௌத்த பிக்கு தரப்பு இவ்வாறு தெரிவித்தது.

குறித்த வழக்கு விசாரணை தொடர்பில் ஆலய நிர்வாகம் சார்பில் முன்னிலையாக சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது,

நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தினுடைய முல்லைத்தீவு நீதிவான் அவர்களால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீடு மற்றும் மீளாய்வு மனுக்கள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் இன்று (நேற்று -26) எடுக்கப்பட்டிருந்தன. மேன்முறையீட்டு மனுவானது இன்றைய தினம் தான் எங்களுக்கு அந்த வழக்கினுடைய நியாயபடுத்தப்பட்ட பிரதி வழங்கப்பட்டிருந்தது. வழக்கானது எதிர்வரும் ஐப்பசி மாதம் 10ம் திகதி எடுக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. அடுத்ததாக அவர்களால் தாக்கல் செய்யப்பட்டிருந்த 318/19 என்ற மீளாய்வு மனு விசாரணைக்கு வந்தது. அந்த மீளாய்வு மனு விசாரணைக்கு வந்த பொழுது எங்களால் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தினரால், கடந்த தவணை நீதிமன்றத்திலேயே இருக்கின்ற நிலையிலேயே இந்த நிலைமை பேணப்பட வேண்டும் என்று கூறியபோது முறைபாட்டாளர்களான பௌத்த மதகுருவினால் போடப்பட்டிருந்த நந்திக் கொடியை பிடுங்கி எறியப்பட்டது தொடர்பாக கௌரவ மனுவால் விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தது.

பௌத்த மதகுரு சார்பில் தோன்றிய சட்டத்தரணி, பௌத்த மதகுரு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்ட அன்றைய தினம் அவர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததற்கான வைத்தியசாலை சான்றிதழ்களையும் நீதிமன்றில் முன்வைத்திருந்தார்கள். எது எவ்வாறு இருப்பினும் எங்களால் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் வழக்கினை கொண்டு நடாத்த முடியுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. மன்றானது எது எவ்வாறு இருப்பினும் மன்று இட்ட கட்டளையை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என எச்சரித்து குறித்த வழக்கின் உடைய எழுத்துமூல சமர்பணத்திற்காக வருகின்ற பத்தாம் மாதம் ஏழாம் திகதி நியமிக்கப்பட்டிருக்கின்றது. என்றார்.