வரலாற்றுச் செய்தியை உலகிற்கு உரத்துச் சொல்ல தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணையுமா? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, August 21, 2019

வரலாற்றுச் செய்தியை உலகிற்கு உரத்துச் சொல்ல தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணையுமா?


தமிழ் மக்களுக்கான விடுதலையை வென்றெடுப்பதற்கு பல போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. போராட்டமே வாழ்கையாகவும் வாழ்க்கையே போராட்டமாகவும் தமிழ் மக்கள் வாழ்ந்திருக்கின்றார்கள்.

தமிழ் மக்களின் போராட்டங்களுக்கு முடிவும் இல்லை விடிவும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளமை துரதிஸ்டவசமானது. தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் தற்போது மாற்றம் ஒன்றினூடாகப் பயணிக்கவேண்டிய கட்டாயத்தில் வந்து நிற்கின்றது.

போராட்ட வடிவங்கள் மாறலாம், போராட்டம் இலட்சியம் மாறாது என தேசியத் தலைவர் வே.பிரபாகரன் கூறியதைப் போல எமது போராட்ட வடிவத்தை நாம் மாற்றவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

தமிழ் மக்களின் வரலாற்றில் ஜனநாயக வழிப் போராட்டங்களும் ஆயுதப் போராட்டமும் காலத்திற்குக் காலம் மாற்றங்களைக் கண்டு பயணித்ததை எவரும் மறந்திருக்க மாட்டார்கள். அதேபோல, ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டுள்ள தற்போதைய களச்சூழலில் தமிழர்கள் புதிய வழியை நாடுவது அவசியமானது.காலத்தின் தேவையும் அதுவே.

சிறீலங்காவில் வரவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ் மக்கள் தமக்கான பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தவேண்டியதன் அவசியத்தை ஈழமுரசு கடந்த இதழில் முன்மொழிந்திருந்தது. புலம்பெயர் தமிழ் மக்களிடத்தே அந்த கருத்துருவாக்கம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஈழத் தமிழர்களும் அதை ஆமோதித்திருக்கின்றனர். தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடியலையும் உறவுகள் வவுனியாவில் நடத்திய ஆர்ப்பாட்டம் ஒன்றின்போதும் இந்தக் கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களுக்கு ஒரு பொது வேட்பாளர் தேவை என்ற கருத்தை அவர்கள் அங்கு முன்வைத்திருக்கின்றனர்.

உலக விடுதலைப் போராட்டங்களுடன் ஒப்பிடுகையில் தமிழர்கள் அனுபவிக்காத வலியை எந்த இனமும் அனுபவித்திருக்காது. தமிழர்கள் சந்தித்த துயரங்களை உலகில் எந்த இனமும் சந்தித்திருக்காது.

கொத்துக்குண்டுகள் தலைமேல் கொட்டப்பட்டு, குருதி கொப்பளித்து, சதைப் பிண்டங்களுக்கு மேலாக நடந்து, உறவுகளின் உயரற்ற உடல்களைக் கடந்து சென்ற உணர்வுக்கு அப்பாற்பட்ட நிலையை உலகில் எந்த இனமும் சந்தித்திருக்காது.

சிங்கள இனமும் சிங்களப் படைகளும் தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகளை தமிழர்கள் விரைவில் மறந்துவிடமாட்டார்கள்.

சிங்கள அரசியல்வாதிகள் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு படைகளை ஏவிவிட்டபோது தமிழர்கள் தமது விரோதிகள் என அவர்கள் நினைத்தனர்.

தமிழர்களின் குடியிருப்புக்கள், கோயில்கள், பாடசாலைகள் மீது சிங்களப் படைகள் குண்டுவீசி அப்பாவித் தமிழர்களை அழித்தபோதும் தமிழர்கள் பொறுமையோடுதான் இருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளிடமும் விமானங்கள் இருந்தன. நீண்ட தூர வீச்சுக்கொண்ட உந்துகணை செலுத்திகளும் இருந்தன. அனைத்து வசதிகளும் இருந்தும் கூட தமிழீழ விடுதலைப் புலிகள் எந்தவொரு சிங்களக் கிராமங்கள் மீதும் சிங்களவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதும் தாக்குதல் நடத்தி அப்பாவிச் சிங்களவர்களைக் கொலை செய்யவில்லை.

சிங்கள ஆளும் வர்க்கத்தை ஆட்டம்காண வைப்பதற்காக தென்னிலங்கையில் உள்ள பொருளாதார மையங்கள் மீது இலக்குவைத்து தாக்குதல்களை நடத்தினர்.

இப்படியாக நேர்மையான போராட்டத்தை பயங்கரவாதம் எனக் கொச்சைப்படுத்திய சிங்கள அரசுகளும் சிங்கள அடிவருடிகளும் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை மெளனிக்கச் செய்தனர்.

தமிழர்கள் இனிமேல் மேல் எழமாட்டார்கள் என சிங்கள தேசம் கருதியது. ஆனால், ஒரு சில ஆண்டுகளுக்குள் தமிழர்கள் தமது போர்க்குணத்தை வெளிப்படுத்தினர்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் புதிய உத்வேகம் கொண்டு வெளிக்கிழம்பி மாவீரர்களுக்கு சுடரேற்றியதுடன் மீண்டும் தொடங்கியது மிடுக்கு. புலம்பெயர் தேசத்து உறவுகளும் இன்றுவரை தமிழீழ விடுதலைப் பயணத்தில் முனைப்புடன் முதுகெலும்பை நிமிர்த்தி நிற்கின்றது.

இவ்வாறான நிலையில்தான் மீண்டும் தமிழர்களின் உரிமைக் கோரிக்கையை உரத்துச் சொல்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தை தமிழ் மக்கள் சரியாகப் பயன்படுத்தினால் அது தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும். அதுதான் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளர்.

ஜனாதிபதித் தேர்தல்களின் காலம்காலமாக தமிழ் மக்கள் சிங்கள வேட்பாளர்களுக்கே வாக்களித்து வந்துள்ளனர்.

ஒன்றில் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். அல்லது வாக்களிச்சச் செல்லாமல் இருக்கவேண்டும், அல்லது வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்குகளைச் செல்லுபடியற்றது ஆக்கவேண்டும்.

இதைவிட தமிழ் மக்களுக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை. இருந்திருக்கவும் முடியாது. ஏனெனில், சிறீலங்கா ஜனாதிபதித் தேர்தலில் சிங்களவர்களைத் தவிர தமிழர்களோ முஸ்லிம்களோ ஜனாதிபதியாக முடியாத வகையில் அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டிருக்கின்றது.

ஆனால், தமிழ் மக்களால் வெல்ல முடியாது எனத் தெரிந்துகொண்டும் ஒரு வேட்பாளரைக் களமிறக்க வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தக் காரணம் என்னவென்றால், அதுதான் தமிழர்களின் பலத்தை, தமிழர்களின் சுதந்திர தாகத்தை வெளிப்படுத்தும் உத்தி. சிங்கள தேசம் கோத்தபாய ராஜபக்சவையோ சஜித் பிரேமதாசவையோ வேறு எவரையுமோ களமிறக்கலாம்.

அவர்களுக்கு வாக்களிக்கப்போவதால் தமிழ் மக்களுக்கு எந்த விடிவும் கிடைக்கப்போவதில்லை.

இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் மற்றும் தமிழ்த் தேசிய நீரோட்டத்தில் இணைந்து பயணிக்கும் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் சந்தித்துக் கலந்துரையாடி தமது கட்சி சாராத ஒருவரை பொது வேட்பாளராக பிரேரிக்க முடியும்.

ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கைகள் வேறுபடலாம். செல்நெறிகள் வேறுபடலாம், இலட்சியங்கள் வேறுபடலாம். எனினும், தமிழ் மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு இந்த ஜனாதிபதித் தேர்தலில் மட்டும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். இக்கூட்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான கூட்டாக மட்டும் இருக்கட்டும்.

இந்தக் கூட்டு வரலாற்றில் முக்கியத்துவம் மிக்க செய்தியை உலகத்திற்கு சொல்லும் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள், அவர்களின் பிரச்சினை வேறு தமிழ் மக்களின் பிரச்சினை வேறு, அவர்களோடு நாம் தொடர்ந்தும் பேச முடியாது, தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு புலிகள்தான் தடையாக உள்ளனர், அவர்களை அழித்த பின்னர் நாம் தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்குவோம் என ஆட்சிக்கு வந்த அத்தனை அரசுகளும் சர்வதேசத்திற்கு வாக்குறுதி அளித்தன.

மகிந்த ராஜபக்ச அரசு ஐ.நா தொடக்கம் சர்வதேச நாடுகள் அனைத்திற்கும் இந்த வாக்குறுதியை வழங்கியே ஆயுதம் உட்பட அனைத்து உதவிகளையும் பெற்று புலிகளின் பலத்தை அழித்தது. புலிகளின் கட்டமைப்புக்களை இல்லாதொழித்தது.

ஆனால் இன்று நடப்பது என்ன? யுத்தம் முடிவுக்கு வந்து பத்து வருடங்கள் கடந்துவிட்டன. வடக்கு கிழக்கு மிக வேகமாக சிங்கள மயப்படுத்தப்பட்டு வருகின்றது. வடக்கு கிழக்கில் ஆயிரம் பெளத்த விகாரைகள் அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டு விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தமிழ் மக்களின் வரலாற்று இடங்கள் சிறீலங்கா தொல்லியல் திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்டு அழிக்கப்படுகின்றன.

தமிழர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க பூர்வீக இடங்கள் அனைத்தும் மாற்றியமைக்கப்பட்டு சிங்களப் பிரதேசங்கள் ஆக்கப்படுகின்றன. ஏன்? தமிழர்களின் முப்பாட்டன் எனப் போற்றப்படும் இராவணன் என்ற மன்னனைக்கூட சிங்கள தேசம் இன்று சிங்கள மன்னன் என மாற்றியமைத்துக் கூறுகின்றது.

இவ்வாறான நிலையில் இனிமேல் சிங்கள தேசம் தமிழ் மக்களுக்கு நீதி வழங்கும் என எதிர்பார்க்க முடியாது. துளிகூட அது நடைபெறப்போவதில்லை. இதனால்தான் நாம் புதிய உத்தி ஒன்றைக்கையாள்வது தொடர்பாக வலியுறுத்துகின்றோம்.

தமிழ் மக்களின் வரவேற்பைப் பெற்ற திட்டம் ஒன்றை தமிழர் தலைமைகள் செயற்படுத்த முன்வரவேண்டும். தமிழர்களின் அபிலாசைகளை வெளிப்படுத்த சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரைக் களம் இறக்கவேண்டும். இதில் தமிழ் மக்கள் அனைவரையும் வாக்களிக்கச் செய்தல் வேண்டும்.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைப் போல இதைச் செயற்படுத்தலாம்.  

யாழ்ப்பாணம் பண்ணாகத்தில் 1976 மே 14 ம் திகதி நடந்த தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமே வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஆகும்.

தனித் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும் என்பதே அத் தீர்மானத்தின் சாராம்சம். ஈழத்தமிழர்களுக்காக ஈழத் தந்தை எனப்படும் செல்வநாயகம் தலைமையில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து வட்டுக்கோட்டை எனும் தொகுதியில் பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலய பிரதான மண்டபத்தில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் தீர்மானங்களை அறிவித்து பிரகடனம் செய்தனர்.

இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும். அதில் ஒரு தேசிய இனமாக தமிழரின் அரசியல் இலக்கை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் தன்னாட்சி உரிமை வேண்டும்.

அதற்காக முழுமூச்சான பயணத்தை அஞ்சாத அர்ப்பணிப்புக்களோடு நாம் முன்னெடுக்கவேண்டும் இந்த விடயங்களையே வட்டுக்கோட்டைத் தீர்மானப் பிரகடனம் வெளிப்படுத்தியது.

இந்த விடயங்களை வலியுறுத்தி 1977 இல் நடைபெற்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழர் பிரதேசங்களில் பெரும் வெற்றி பெற்றது. அந்த வெற்றியின் அடிப்படையில் தமிழ்க் கட்சிகள் செயற்பட்டன.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியதாலேயே மக்கள் அதிகளவில் வாக்களித்தனர். அதேபோன்ற ஒரு நிலையை இப்போதும் ஏற்படுத்த வேண்டும். ‘இனப்படுகொலை விசாரணை நடத்தப்படவேண்டும், தமிழர் தாயகத்தில் பெளத்த விகாரைகள் அமைக்கப்படக்கூடாது, தமிழர்களின் தொல்லியல் வரலாற்று இடங்கள் பாதுகாக்கப்படவேண்டும், ஒற்றையாட்சி நீக்கப்பட்டு சமஷ்டி அரசமைப்பு உருவாக்கப்படவேண்டும்,

தமிழர்களின் நீண்டகால இனப்பபிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும், இந்த அனைத்து விடயங்களையும் சிறீலங்கா அரசு செயற்படுத்தாது எனக் கருதுவதால் சர்வதேசம் தலையிடவேண்டும்’ இவ்வாறு தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும்.

அனைத்துக் கட்சிகளும் இதற்காக மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும். மக்களைத் தயார்ப்படுத்த வேண்டும்.

புலம்பெயர் செயற்பாட்டாளர்களே... இது இறுதிச் சந்தர்ப்பம். இதற்கான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்ளாவிட்டால், அடுத்த ஐந்து வருடங்களுக்குள் தமிழர் தாயகம் என்ற பேச்சை எவரும் பேசாமல் இருப்பதற்கு தயாராகுங்கள்.

நன்றி: ஈழமுரசு

‘தாயகத்தில் இருந்து’ காந்தரூபன்