பிரதமர் தலைமையில் யாழில் பல்வேறு நிகழ்வுகள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, August 14, 2019

பிரதமர் தலைமையில் யாழில் பல்வேறு நிகழ்வுகள்!

வடக்கிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

அதற்கமைய இன்று (வியாழக்கிழமை) பிரதமர் தலைமையில் யாழில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

முதல் நிகழ்வாக இன்று காலை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ள பிரதமர், அதன்பின்னர் நல்லை ஆதீன சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அங்கு சைவ சமய தலைவர்களுடனான கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளதோடு, சைவ மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

அதன் பின்னர் மைலிட்டி துறைமுகத்தை திறந்து வைக்கவுள்ள பிரதமர், தொடர்ந்து புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள 10 வீடுகளை பொதுமக்களிடம் கையளிக்கவுள்ளார்.

அதன் பின்னர் 11 மணியளவில் திருநெல்வேலி விவசாய திணைக்கள பயிற்சி நிலையத்தில் நடைபெறும் நிகழ்வில், பொதுமக்களுக்கு விவசாய உபகரணங்களை வழங்கவுள்ளார்.

அத்தோடு, மதியம் 2 மணிக்கு குருநகர் மீன்பிடி துறைமுகத்திற்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளதோடு, 3.15 மணிக்கு சாவகச்சேரி வைத்தியசாலையின் இயன் சிகிச்சை பிரிவை திறந்து வைக்கவுள்ளார்.

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று வடக்கிற்கு பயணம் செய்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பயணத்தின் முதல் கட்டமாக வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்தார். வவுனியாவில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.

அதன் பின்னர் நேற்று மாலை யாழ்ப்பாணத்திற்குச் சென்ற அவர், யாழ்.நாக விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்நிலையில், இன்றைய நிகழ்வுகளின் பின்னர், நாளை காலை 9 மணிக்கு இந்தியாவினால் யாழில் அமைக்கப்படும் கலாசார நிலைய கட்டுமான பணிகளை பிரதமர் பார்வையிடவுள்ளதோடு, 10 மணிக்கு யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் பிரதமர் தலைமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.