எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் – சம்பிக்க - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, August 19, 2019

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் – சம்பிக்கஇலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல், மீண்டும் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலேயே அமையும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “எமது கூட்டணியில் எந்தவொரு பிளவும் ஏற்படவில்லை. சில கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் இறுதியாக இடம்பெற்ற கூட்டத்தின்போது, புதிதாக ஸ்தாபிக்கப்படவுள்ள கூட்டணியின் உடன்படிக்கை தொடர்பாக சில இணக்கபாடுகள் எட்டப்பட்டுள்ளன.

எப்படியும், இந்த மாத இறுதிக்குள் நாம் கூட்டணி தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவித்து விடுவோம். அதேபோல், அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் வேட்பாளரின் பெயரும் விரைவில் அறிவிக்கப்படும். இவை இரண்டையும் ஒன்றாக வெளியிடவே நாம் தீர்மானித்துள்ளோம்.

ஒருவேளை, நான் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் நிச்சயமாக அதற்கான கடமையை நான் சிறப்பாகவே மேற்கொள்வேன். நான் எப்போதும் கூறுவது ஒன்றைத்தான். அதாவது, இந்த நாடு ஒரு குடும்ப ஆதிக்கத்தின் கீழ் வருவதை இல்லாதொழிக்கும் தேர்தலாகவே இந்த ஜனாதிபதித் தேர்தல் அமையும்” என மேலும் தெரிவித்தார்.