கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான சாகும் வரையிலான உண்ணாவிரதம் தோல்வியடைந்தமைக்கு தமிழ் தலைமைகளின் செயற்பாடே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
கல்முனை, பாண்டிருப்பு பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில், “கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான பிரச்சினை தற்போது நீடித்து வருகின்றது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை கடந்த காலங்களில் தரம் உயர்த்தக் கோரி பல்வேறு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் தமிழ் தலைமைகளின் செயற்பாடுகள் காரணமாகவே தற்போதும் பிரச்சினை நீடிக்கின்றது.
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்தபோது பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த வேண்டும் எனக் குறிப்பிட்டே வாக்களித்தனர். ஆனால் இன்று ஒன்றும் நடைபெறவில்லை.
தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் தமிழீழ விடுதலைப் புலிகளின் உதவியுடன் உருவாக்கப்பட்ட செயலகம் என்று புரளியை தெரிவிக்கின்றார்.
இதனால் அதனை தரமுயர்த்த ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்து வருகின்றார்” என வியாழேந்திரன் தெரிவித்தார்.