அரிசியை எண்ணவிட்டு ஆட்டையை போட்ட மந்திரவாதி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, August 19, 2019

அரிசியை எண்ணவிட்டு ஆட்டையை போட்ட மந்திரவாதி!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கரும்புலிபட்டி என்ற கிராமத்தில் சேர்ந்தவர் அண்ணாதுரை. ஐஸ் வியாபாரம் செய்து வரும் இவருக்கு வெள்ளபொண்ணு என்ற மனைவியும், ராமர் என்ற மகனும் உள்ளனர். தனியார் சீட்டு நிறுவனத்தில் ராமர் பணிபுரிந்து வருகிறார். அவர் மீனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

ராமர் மீனா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சில நாட்களுக்கு முன்பு ராமரை நாய் ஒன்று கடித்துவிட, அதைத் தொடர்ந்து அவர்கள் வீட்டிற்கு பாம்பு ஒன்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

இப்படி தொடர்ந்து விலங்குகளால் குடும்பத்தில் உள்ள ஒருக்கும், வீட்டுக்கும் அச்சுறுத்தல் இருந்ததாக மீனாவும் அவரது மாமியார் வெள்ளபொண்ணும் கருதினர். இது ஏதோ அபசகுனமான  நிகழ்வு என்றும் அவர்கள் நினைத்திருந்தனர்.

இந்த சம்பவங்கள் நடைபெற்ற சில தினத்தில் காக்காய் அமர பனம்பழம் விழுந்தது போல் அண்ணாமலையும், ராமரும் வேலைக்கு சென்ற தருணத்தில் தெருவில் கிளி ஜோசியர் இருவர் வந்துள்ளனர்.

வீட்டில் குழந்தைகளுடன் தனியாக இருந்த மாமியார் வெள்ளப்பொண்ணும், மருமகள் மீனாவும் கிளி ஜோசியம் பார்ப்பதாக வந்த இருவர்களிடம் இப்படி எங்கள் வீட்டில் அபசகுனமான சில சம்பவங்கள் நடக்கிறது என முறையிட்டனர்.

அப்போது மீனாவுக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதாக கூறிய அந்தக் கிளி ஜோதிடர் அதை கழிக்க வேண்டும் என்று இருவரிடமும் கூறியுள்ளார். இதனை நம்பிய இருவரும் வீட்டிற்குள் கிளி ஜோதிடரை அழைத்து சென்றுள்ளனர்.

தேங்காய், சூடம், ஊதுபத்தி, குங்குமம் போன்ற பூஜை பொருட்களுடன் ஜோதிடர்கள் களமிறங்கினார். ஐந்தாயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டதுடன் தோஷம் கழிக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட பெண் உடலில் எந்த நகைகளும் இருக்கக் கூடாது எனக்கூறி இருவரிடமும் நகைகளை கழட்டிவைக்க சொல்லியுள்ளனர்.

3 சவரன் நகைகளை கழட்டி ஜோதிடர்களிடம் கொடுத்த மாமியாரையும், மருமகளையும் முக்காடு போட்டு அமரச் சொன்ன அந்த மோசடி ஜோதிடர்கள் ஒரு கைப்பிடி அரிசியை ஒரு தாளில் வைத்து, இன்னொரு கைப்பிடி அரிசியை மற்றொரு தாளில் வைத்து, இருவரிடமும் கொடுத்து இரண்டு காகிதங்களில் உள்ள அரிசியை 238 வரை மாமியாரும், 237 வரை மருமகளும் எண்ண வேண்டும் கூறியுள்ளனர்.

நீங்கள் எண்ணிக் கொண்டு இருங்கள் நாங்கள் மயானம் வரை சென்று அங்கிருந்து மண் எடுத்து வந்து அதன்மூலம் உருவம் செய்து பூஜையை தொடங்க வேண்டும் என கூறி நகைகளுடன் புறப்பட்டுச் சென்றனர்.

ஏமார்ந்ததுகூட தெரியாமல் மாமியாரும், மருமகளும் மெனக்கெட்டு காகிதத்தில் கொடுத்த அரிசி பருக்கைகளை ஒவ்வொன்றாக எண்ணிக் கொண்டிருந்தனர்.

ஆனால் மயானம் சென்று மண்ணை எடுத்து வருவதாகக் கூறிய அந்த இருவரும் வெகுநேரமாகியும் திரும்ப வராததால் சந்தேகம் அடைந்த மாமியார் வெள்ளபொண்ணு ஜோதிடர்கள் கொடுத்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியபோது,

எதிர்முனையில் பேசிய ஜோதிடர் யாரென்றே தெரியாதது போல் வேறு குரலில் பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வெள்ளபொண்ணு உடனடியாக மணப்பாறை போலீசில் இது தொடர்பாக புகார் அளித்தார்.

அந்த எண்ணிற்கு போலீசார் தொடர்பு கொண்டபோது போலீசாரையே மிரட்டும் வகையில் அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மோசடி ஜோதிடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மூட நம்பிக்கையில் அப்பாவிகள் பொருளை இழப்பது தினம் தினம் நடக்கக்கூடிய நிகழ்வாக மாறிவிட்ட நிலையில், அரிசியை எண்ணவிட்டு மாமியார் மருமகளிடம் நகைகளை திருடி சென்ற இந்த நூதன திருட்டை என்னவென்று சொல்வது!