பிள்ளையானின் விடுதலையை வலியுறுத்தி மட்டக்களப்பில் பேரணி! - Kathiravan - கதிரவன்

Breaking

Sunday, August 18, 2019

பிள்ளையானின் விடுதலையை வலியுறுத்தி மட்டக்களப்பில் பேரணி!


கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானின் விடுதலையை வலியுறுத்தியும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் மட்டக்களப்பில் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சந்திரகாந்தனின் (பிள்ளையான்) 44ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டே இந்த பேரணி நடைபெற்றது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தனின் தலைமையில் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஆரம்பமாகிய இந்த பேரணியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

‘கிழக்கின் அடிமை விலங்கினை உடைக்க சந்திரகாந்தன் மீதான பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கு’ எனும் தலைப்பில் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டது.

இந்த பேரணியில் கலந்துகொண்டவர்கள் விடுதலையினை வலியுறுத்தும் வகையிலான பல்வேறு பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், சந்திரகாந்தனின் ஒளிப்படத்தினையும் ஏந்தியிருந்தனர்.

இந்த பேரணி காந்திபூங்காவில் ஆரம்பமாகி பிரதான பேருந்து நிலையம் ஊடாக சென்று மட்டக்களப்பு வாவிக்கரை வீதியூடாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமை காரியாலயம் வரையில் சென்றது.

அதனைத்தொடர்ந்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதித்தலைவர் கே.திரவியம் தலைமையில் விசேட நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுசந்த புஞ்சிநிலமே, விமலவீர திசாநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முஸ்லிம் பிரதேச மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எம்.எஸ்.சுபைர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி தலைவர் சந்திரகாந்தன் விடுதலைசெய்யப்படவேண்டும் என்ற பிரகடனம் வாசிக்கப்பட்டது. அத்தோடு  எதிர்க்கட்சி தலைவரிடம் வழங்குவதற்கான மகஜரொன்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டது