நான் நிறைய முறை ‘கஞ்சா’ அடித்திருக்கிறேன் என நடிகரும் பிரபல இயக்குனருமான பாக்கியராஜ் சென்னையில் நடைபெற்ற கோலா திரைப்பட பாடல் வெளியீட்டு மேடையில் பேசியது அனைவரையும் பரபரப்பாக்கியது.
அங்கு பேசிய அவர்;
எனர்ஜி என்பது வயது சம்பந்தப்பட்டது அல்ல; மனசு சம்பந்தப்பட்டது. ஒரு நாள் ஒரு முடி வெட்டும் கடைக்கு சேவிங் செய்ய வந்த ரவுடி, அந்தக் கடைக்காரனிடம் ‘சேதாரம் இல்லாமல் செய்தால்தான் விடுவேன். இல்லையென்றால் உன்னை இங்கேயே வெட்டி விடுவேன்’ என்றானாம். இதைக் கேட்டு அந்த ரவுடிக்கு சேவிங் செய்துவிட அனைவருமே பயந்தார்கள்.
ஒரு சிறுவன் மட்டும் தைரியமாக முன் வந்து அந்த ரவுடிக்கு சேவிங் செய்து விட்டான். அந்த ரவுடி ஆச்சர்யப்பட்டு சிறுவனிடம் ‘உனக்கு என்னைப் பார்த்து பயம் இல்லையா?’ என்று கேட்டான். அதற்கு அந்தச் சிறுவன் “ஏதாவது கிராக்காகி நீங்கள் என்னை வெட்டுவதற்காக அரிவாளை எடுக்கும் முன்பாக, நான் என் கையில் இருக்கும் கத்தியை உங்களுக்கு எதிராகப் பயன்படுத்தி விடுவேன்..” என்றானாம். ஆக துணிச்சலுக்கும், வயசுக்கும்கூட சம்பந்தமில்லை.
கஞ்சா அடிப்பதைப் பற்றி இங்கே பல பேர் பேசினார்கள். நானே நிறைய முறை கஞ்சா அடித்திருக்கிறேன். நான் கோவையில் வசித்துவரும்போது என் நண்பர்கள் சிலர் சிகரெட்டில் கஞ்சாவைக் கலந்து கொடுத்தார்கள். அப்படியே அது எனக்கும் பழக்கமாகிவிட்டது.
சில நேரங்களில் அடித்த கஞ்சா நல்லவே வேலை செய்யும். ஒருநாள் அது கிர்ர்னு ஏறிய பிறகு எல்லாரும் கெக்கே பிக்கேன்னு காரணமே இல்லாமல் சிரிச்சிக்கிட்டே இருந்தோம். அப்போதுதான் யோசித்தேன். லைப்ல என்னென்னமோ சாதிக்கணும்னு நினைத்தோமே. ஆனால், இப்படி இருக்கோமே என்று…! அன்றுதான் தோன்றியது. புத்தருக்கு போதி மரம் மாதிரி, எனக்கு போதை மரம்தான் புத்தி கொடுத்தது. அன்றோடு அந்தக் கஞ்சாவுக்கு விடை கொடுத்தேன். இப்போது சிகரெட்டையும் விட்டுவிட்டேன் என்றார்.