யாராவது முன்வந்து உதவி செய்தால் நிச்சயம் நான் சாதித்து காட்டுவேன் – மலையக நாயகனின் ஆசை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, August 3, 2019

யாராவது முன்வந்து உதவி செய்தால் நிச்சயம் நான் சாதித்து காட்டுவேன் – மலையக நாயகனின் ஆசை



உலக உடற்கட்டழகர் போட்டியில் பங்குபற்றுகின்ற வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அதிலும் பதக்கமொன்றை வென்று இலங்கைக்கும், மலையகத்துக்கும் பெருமையை தேடிக் கொடுப்பேன் என்ற நம்பிக்கை என்னிடம் உண்டு.

ஆனால், அதற்கான செலவுகளை செய்வதற்கு என்னிடம் பணம் இல்லை. அதற்கு யாராவது முன்வந்து உதவி செய்தால் நிச்சயம் நான் சாதித்து காட்டுவேன் என ஆசிய ஆணழகன் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்று வெண்லகப் பதக்கத்தை வென்று சாதனைப் படைத்த மாதவன் ராஜ்குமார் தெரிவித்தார்.

53ஆவது ஆசிய ஆணழகன் சம்பியன்ஷிப் போட்டித் தொடர், சீனாவின் ஹேர்பின் நகரில் கடந்த 26ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெற்றது.

இதில் போட்டிகளின் மூன்றாவது நாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆண்களுக்கான 60 கிலோ எடைப் பிரிவிலும், 23 வயதுக்குட்பட்ட கனிஷ்ட சம்பியன்ஷிப் போட்டிப் பிரிவிலும் களமிறங்கிய ராஜ்குமார், பலத்த போட்டிக்கு மத்தியில் மூன்றாவது இடத்தைப் பெற்று இலங்கைக்கான முதலாவது பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்தார்.

இறுதிப் போட்டியில் 30இற்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்குபற்றியிருந்ததுடன், பலத்த போட்டியைக் கொடுத்து அவர் இந்த வெற்றியைப் பெற்றுக்கொண்டார் என்பது சுட்டிக்காட்டத்தக விடயம்.

தனது வெற்றிக் குறித்து ராஜ் குமார் கூறுகையில், “இவ்வருட இறுதியில் டுபாயில் நடைபெறவுள்ள உலக உடற்கட்டழகர் போட்டியில் பங்குபற்றுகின்ற வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அதிலும் பதக்கமொன்றை வென்று இலங்கைக்கும், மலையகத்துக்கும் பெருமையை தேடிக் கொடுப்பேன் என்ற நம்பிக்கை என்னிடம் உண்டு. ஆனால், அதற்கான செலவுகளை செய்வதற்கு என்னிடம் பணம் இல்லை. அதற்கு யாராவது முன்வந்து உதவி செய்தால் நிச்சயம் நான் சாதித்து காட்டுவேன்.

அதேபோல, என்னுடைய இலக்கு மிஸ்டர் ஒலிம்பியாட் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்குபற்றுவதாகும். அந்த இலக்கையும் என்னால் அடைய முடியும் என்ற நம்பிக்கை உண்டு. அதற்கு பணம் தான் தேவை. எனவே, இந்த விளையாட்டை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு எனக்கு அனுசரணையாளர்கள் கிடைத்தால் நிச்சயம் சாதிப்பேன். எனது பெற்றோரின் தொழில் மற்றும் வருமானத்துக்கு சம்பந்தமே இல்லாத ஒரு விளையாட்டு. ஆனாலும், மலையகத்தில் பிறந்த ஒரு தமிழனாக நிச்சயம் சாதித்து காட்டுவேன்” என கூறினார்.

தனது 15ஆவது வயதில் இருந்து உடற்கட்டழகர் போட்டியில் பங்குபற்றி வருகின்ற ராஜகுமார், நுவரெலியா மாவட்டம், லபுக்கலை தோட்டம் கொண்டகலை பிரிவை பிறப்பிடமாகக் கொண்டவர் ஆவார். 23 வயது கொண்ட இவர் ஒரு பிள்ளையின் தந்தையாவார்.

தற்போது இலங்கை இராணுவத்துக்காக விளையாடி வருகின்ற இவர், கடந்த வருடம் நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெற்ற தெற்காசிய உடற்கட்டழகர் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.

மேலும், கடந்த வருடம் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 60 கிலோ கிராம் எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.