கோட்டா முதலில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் கூறவேண்டும் – ஸ்ரீநேசன் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, August 11, 2019

கோட்டா முதலில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் கூறவேண்டும் – ஸ்ரீநேசன்


கோட்டாபய ராஜபக்ஷ முதலில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் கூறவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கோட்டாபய ராஜபக்ஷ பாதிக்கக்கூடிய மிகவும் கசப்பான உணர்வுகளை தமிழ் மக்களின் மனங்களில் விதைத்துள்ளார் எனக் குறிப்பிட்ட அவர், தமிழ் மக்கள் அவரை ஏற்கமாட்டார்கள் என்று குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தெரிவிக்கையில், “தென்னிலங்கையில் இருந்து வரும் தலைவர்களை பொறுத்தவரை அவர்கள் அடிப்படைவாத சிந்தனையில் மூழ்கியுள்ளனர். பேரினவாதப் பிடிக்குள் இறுகியுள்ளனர். பேரினவாதத்தை மட்டும் கையில் வைத்து ஆட்சி செய்பவர்கள்.

அப்படி இல்லாமல் முற்போக்கு சிந்தனையுடன் சிறுபான்மை மக்களும் இலங்கையில் வாழ்கின்றனர். அவர்களின் தேசிய இனப் பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. இதனால் அறவழிப் போராட்டங்களும் ஆயுதப் போராட்டங்களும் நடைபெற்றன.

அவற்றின் தீர்வை போரினால் மட்டும் காணமுடியாது. மாறாக ஜனநாயக ரீதியான பேச்சுவார்த்தை மூலமாக நிரந்தரமான அரசியல் தீர்வை காண்பதன் மூலமாகத்தான் தேசிய பொருளாதாரம் மற்றும் தேசிய ஐக்கியத்தையும் கட்டியேழுப்ப முடியும் என்ற சிந்தனை வர வேண்டும்.

இன்றும் தெருவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்னும் கண்ணீருடன் நிற்கிறார்கள். இதற்கெல்லாம் பதில் கூறும் பொறுப்பு அவருக்கு உண்டு. இந்த தேசிய இனப் பிரச்சினையைத் தீர்க்கக் கூடிய சக்தி, ஆளுமை வலு மிக்க தலைவர்களாக சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாமல் தேர்தலில் வெற்றியடைவோம் என்று கொக்கரிப்போரை பார்க்கும் போது சிறுபான்மையினர் வெட்கித்து நிற்கின்றனர்.

கோட்டாபய ராஜபக்ஷவிடம் பல்லின மக்களை நிர்வகிப்பதற்கான தகுதி உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட தீமைகளுக்கு அவரும் ஒரு காரணம் என்பது தமிழ் மக்கள் மத்தியிலும் நடுநிலை சிந்தனையாளர்கள் மத்தியிலும் பேசப்படுகிறது.

இவ்வாறு பல தீயமைகளைச் செய்த இவர் இந்த தேசியப் பிரச்சினைளை பத்தோடு பதினொன்றாக தட்டிவிடுவார்” என்றார்.