தமிழ் மக்களின் பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு காணப்படும் – ஜனாதிபதி வேட்பாளர் கோட்டா - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, August 11, 2019

தமிழ் மக்களின் பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு காணப்படும் – ஜனாதிபதி வேட்பாளர் கோட்டா


தனது அரசாங்கத்தின் காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு முன்வைக்கப்படும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்தோடு, சர்வதேசம் நாட்டின் சுயாதீனத்தில் தலையிடுவதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்வில் வேட்பாளர் அறவிப்பைத் தொடர்ந்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தெரிவிக்கையில், “இலங்கை வரலாற்றில் இந்த நாள் ஒரு விசேடமான நாளாகவே பதியப்படும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தரப்பில் இருந்து ஜனாதிபதி வேட்பாளராக நான் களமிறங்கியதையிட்டு மிகவும் பெருமையடைகிறேன்.

என்னை வேட்பாளராகத் தெரிவுசெய்ய ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கிய அனைவருக்கும் எனது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் இந்த நாட்டை நேசிக்கும் ஒருவன். இலங்கையன் என்றுக் கூறிக்கொள்வதிலும் பெருமையடையும் ஒருவன். எனவே, தற்போது என் முன்னால் காணப்படும் இந்த சவாலை வெற்றிகரமாக எதிர்க்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

நான் அரசாங்க அதிகாரியாக கடமையாற்றிய காலத்திலும், 35 வருடங்களுக்கு முன்னர் இளம் இராணுவ வீரனாகச் செயற்பட்ட காலத்திலும், எனக்கான கடமைகளை நிறைவேற்ற நான் என்றும் எல்லைகளை வகுத்துக் கொண்டது கிடையாது. இதனால்தான், 30 வருட கால யுத்தத்தைக் கூட மூன்றரை வருடங்களில் எம்மால் முடிவுக்குக் கொண்டுவர முடியுமாக இருந்தது.

நாடு என்ற வகையில், நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுப்பதே எனது பிரதான இலக்காக இருக்கிறது. அந்தவகையில், உங்கள் பிள்ளைகளின் எதிர்க்காலத்திற்கான பாதுகாப்பை நான் பொறுப்பேற்கிறேன். அச்சமில்லாமல் அபிவிருத்தியடைந்த நாட்டில் வாழும் சூழல் நிச்சயமாக உருவாகும்.

அத்தோடு, நாம் சர்வதேசத்துடன் மிகவும் நெருங்கிய தொடர்புடன் இருக்கவே விரும்புகிறோம். எனினும், எமது சுயாதீனத் தன்மையில் தலையிட எவருக்கும் அனுமதியளிக்கப்போவதில்லை என்பதையும் நான் இவ்வேளையில் உறுதியுடன் கூறிக்கொள்கிறேன்.

அதேநேரம், தீர்க்கப்படாது காணப்படும் வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வையும் நாம் எமது அரசாங்கத்தின் காலத்தில் முன்வைப்போம். அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்து பயணிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக இருக்கிறது.

இந்தப் புதிய பயணம் இன்று முதல் ஆரம்பமாகின்றது. இதற்காக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.