கோயில் தேர் திருவிழாவின் போது கோயில் அர்ச்சகர் ஒருவர் தேரிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் தமிழகத்தில் உள்ள திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் அர்ச்சகராக இருப்பவர் முரளி. ஆடிப்பூர விழாவை முன்னிட்டு இக்கோயிலில் கடந்த 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் காப்பு கட்டப்பட்டது.
இந்நிலையில் நேற்று கமலாம்பாள் அம்மனின் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்போது அம்மன் வீதி உலா முடிந்து கோயிலுக்கு வந்து சேர்ந்த நிலையில் அர்ச்சகர் முரளி தேர் மீது ஏறி அம்மனுக்குத் தீபாராதனை காட்ட முற்பட்டபோது, எதிர்பாராத விதமாகத் தேர் நகர்ந்ததால் அர்ச்சகர் முரளி நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அங்கிருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அர்ச்சகர் முரளியை அனுமதித்து , அதன்பின்னர் மேலதிக சிகிச்சைக்காகத் தஞ்சாவூர் கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து அவரது உடல் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது . ஆலய தேர் திருவிழாவில் இப்படி ஓர் அசம்பாவைதம் இடம்பெற்றமை அங்கு பெரும் சோகத்தைனை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை உயிரிழந்த அர்ச்சகர் முரளி, பரம்பரை பரம்பரையாக குருக்கள் குடும்பத்தின் அடிப்படையில் இந்த கோவிலில் வேலை பார்த்து வந்தவர். அதோடு இவரது தாத்தா, அப்பாவுக்கு பிறகு முரளி தலைமை குருக்களாக பொறுப்பேற்றார். மேலும் அவரது மகன், சகோதரர்களும் இங்கு குருக்களாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது