காணாமல் போன வடமாகாணசபை வாகனங்கள் றிசாத் பண்ணையில்? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, August 24, 2019

காணாமல் போன வடமாகாணசபை வாகனங்கள் றிசாத் பண்ணையில்?


வவுனியா செட்டிகுளம் இடைத்தங்கல் முகாமில் பயன்படுத்தப்பட்டு வந்த வடமாகாணசபையினது பெருமளவு வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அமைச்சர் ரிசாட் பதீயுதினின் பண்ணையின் பயன்பாட்டிற்கு திருட்டுத்தனமாக உபயோகித்து வந்த உழவு இயந்திரமொன்று திருட்டு மாடு கடத்திய சமயம் தலைமன்னார் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கையகப்படுத்தப்பட்ட வாகனம் வவுனியா செட்டிகுளம் இடைத்தங்கல் முகாமில் பயன்படுத்தப்பட்டு வந்த வாகனங்களில் ஒன்று என தெரியவந்துள்ளது.

கடந்த் 2009ம் ஆண்டு இறுதிப் போரில் வெளியேற்றப்பட்ட மக்கள் செட்டிகுளம் மெனிக் பாம் பகுதியில் இடைத் தங்கல் முகாம் என்னும் பெயரில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

அச்சமயம் அங்கிருந்த முகாம் பாவனைக்காக வடமாகாணசபையின் பெருமளவு வாகனங்கள் பெறப்பட்டிருந்தது.

அதேபோன்று மீள்குடியேற்ற அமைச்சினால் அரச நிதியில் கொள்வனவு செய்யப்பட்டு அமைச்சின் பதிவில் இருந்த உழவு இயந்திரம் முகாம் மேம்பட்ட நிலையில் உழவு இயந்திரமும் காணாமல் போய்விட்டது.

அவ்வாறு காணாமல்போன உழவு இயந்திரம் அமைச்சரின் பண்ணையிலேயே இருந்துள்ளது.


 
இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் பௌர்ணமி தினத்தன்று இறைச்சிக்காக மாடு கடத்திய குற்றச் சாட்டில் மேற்படி உழவு இயந்திரம் பொலிசாரால் கண்டுபிடிக்கபட்ட நிலையில் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டது.

இதனால் அமைச்சர் அகப்பட்டு விடுவார் என்பதனால் அந்த உழவு இயந்திரம் தமது பாவனையில் உள்ளதாக மன்னார.பிரதேச சபையினர் போலியான கடிதம் வழங்கி அதற்கான வரி செலுத்துவதற்கான அனுமதியை தருமாறு தற்போதைய மீள்குடியேற்ற அமைச்சிற்கு கடிதம் அனுப்பி அனுமதியை பெற்றுள்ளனர்.

பொலிசாரால் வாகனம் கைப்பற்றிய பின்பே இவ்வாறு அனுமதி பெற்றுள்ள நிலையில், அமைச்சின் அனுமதியையும் பெற்று அந்த கடிதங்களை சமர்ப்பித்து பொலிசாரால் கையகப்படுத்திய உழவு இயந்திரம் பிணை எடுக்கப்பட்டுள்ளது.
 
இவ்வாறு பொலிசாரால் கைப்பற்றிய உழவு இயந்திரம் இன்று வரையில் சபையில் பதிவு செய்யப்படாத காரணத்தினால் அது தொடர்பான பிரச்சணையை சபை பொறுப்பேற்க கூடாது என சபையிலும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அமைச்சரை காப்பாற்ற பிரதேச சபைத் தவிசாளரும் முற்பட்டமை உறுதி செய்யப்படுகின்றது.

இதேவேளை காணாமல் போன வடமாகாணசபையின் வாகனங்கள் தொடர்பில் பொலிஸ் பாரிய மோசடி பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.