பிரான்சில் இருந்து நீதிக்கான நடைபயணம்! - Kathiravan - கதிரவன்

Breaking

Thursday, August 29, 2019

பிரான்சில் இருந்து நீதிக்கான நடைபயணம்!பிரான்சு பாரிசில் பிரெஞ்சுப்பாராளுமன்றம் முன்பாக நேற்று (28.08.2019) புதன்கிழமை 11.00 மணிக்கு சிறிலங்கா இனவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட தமிழினப் படுகொலைகளின் சாட்சியங்கள் அடங்கிய நிழற்படக்கண்காட்சி இடம்பெற்றதைத் தொடர்ந்து  15.00 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு நடைபயணப்போராட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

3 மனிதநேய செயற்பாட்டாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டம்  15.09.2019 ஜெனீவா மனிதவுரிமைகள் சதுக்கம் வரை (முருகதாசன் திடலில்) நிறைவடையவுள்ளது.

இன்றைய தினம் பாரிசின் பிரதான வீதிகளின் ஊடாகச் சென்ற இந்நடைபயணம் 18.30 மணியளவில் சுவாசிலுறூவா மாநகரசபை முன்றிலில் நிறைவடைந்தது.

அங்கு அப்பகுதியில் உள்ள மக்கள் மனிதநேய செயற்பாட்டாளர்களை வரவேற்றிருந்தனர்.

நாளை காலை 08.30 மணிக்கு குறித்த பகுதியில் இருந்து நடைபயணம் ஆரம்பமாகவுள்ளது.   தொடர்ந்து தமிழ்மக்கள் வாழும் பிரதேசங்களால் இந்த நடைபயணம் இடம் பெறும் போது, அப்பிரதேசங்களில் உள்ள எமது மக்களும் கலந்து இப் போராட்டத்திற்கு வலிமை சேர்க்கவேண்டும் என நடைபயணத்தில் கலந்துகொண்ட மனிதநேய செயற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

வெளிநாட்டு மக்களுக்கு எமது போராட்டத்தின் நோக்கம் பற்றிய பிரெஞ்சு மொழியிலான துண்டப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

ஓர் இனத்தின் தொடர் வலிகளை சர்வதேசத்திற்கு எடுத்தியம்பி அதற்கு நீதிகேட்டு கடந்த 19 வருடங்களாக போராட்டம் நடாத்திவரும் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களின் போராட்டத்தின் தொடர்ச்சியாக தியாக தீபம் திலீபனின் 32 ஆவது நீங்காத நினைவுநாட்களில் ஈருருளிமூலமும், கால்நடையாகவும் போராட்டங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - ஊடகப்பிரிவு)
தொடர்புகளுக்கு:
தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு- 06 62 84 66 06
தமிழீழ மக்கள் பேரவை- 06 52 72 5867
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு 0143150421