மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட செயலகத்தில் நேற்று(19.08.2019) பிற்பகல் 2.30 மணியளவில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட சுகாதார திணைக்களமும்,பிரதேச சபையின் செயலாளர்கள்,பிரதேச செயலாளர்கள்,மற்றும் இது தொடர்பான அதிகாரிகளுடனான கலந்துரையாடல் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந் தலைமையில் நடைபெற்றது.
மாவட்டத்தின் சகல பிரதேச சபைகள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திண்மக்கழிவுகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் மாவட்டத்தின் தற்போது டெங்கு நோயின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளதாகவும் இவ்வருடம் இதுவரை 1005 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு சிகிச்சையின் மூலம் குணமடைந்துள்ளனர்.
இவ்வருடம் குறிப்பாக மடடக்களப்பு மாவட்டத்தில் எவ்வித இறப்பும் இடம்பெறவில்லை என தொற்றுநோய் தடுப்பு வைத்திய அதிகாரி டொக்டர்.வீ.குலராஜசேகரம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் திண்மக்கழிவு தரம் பிரித்தல் தொடர்பாக பிரதேச சபைகளுக்கு ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு பொது சுகாதார பரிசோதகர்கள்,பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகளும் சேர்ந்து தரம் பிரித்தல்,மற்றும் பாதுகாப்பான முறையில் கழிவகற்றல்,போன்றவற்றை இவர்களின் கண்காணிப்பின் கீழ் நடைமுறைப்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் குறிப்பிடுகையில் மாவட்டத்தில் தற்போதைய காலநிலையை கருத்தில் கொண்டு பாடசாலைச்சூழல்கள்,பொது இடங்கள்,வீடுகள்,என எல்லா இடங்களிலும் டெங்கு அவதானிப்பை செலுத்துவது அவசியம் என்றும் இதனை நிலைபேறான நடைமுறையினைக் கடைப்பிடிப்பதன் மூலம் எமது மக்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என குறிப்பிட்டார்.
திண்மக்கழிவினை முறையான முகாமைத்துவத்துடன் மீள்சூழற்சிக்குட்படுத்தப்பட வேண்டும் என இவற்றினூடாக ஓரளவு வருமானங்களையும் பிரதேச சபைகள் பெற்றுக்கொள்ள முடியும்.இதற்காக உரிய வியாபார முகவர்களை இனங்கண்டு அவர்களுடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டது