தமிழ் மக்களின் பிரதிநிதிகளென விடுதலைப் புலிகளினால் அடையாளப்படுத்தப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று தனது கொள்கைகள், இலக்குகளை எல்லாம் புறம்தள்ளி அரச விசுவாசிகளாக தடம்மாறிப் பயணிப்பதனால் அதற்கு மாற்றீடான அரசியல் சக்தியொன்றின் அவசியம் தமிழினத்தால் உணரப்பட்ட நிலையில், அதனை உருவாக்க தமிழின உணர்வாளர்களும் தன்னலமில்லாதவர்களும் மேற்கொண்டுள்ள முயற்சிகள் எல்லாம் தலைக்கனம் மிக்கவர்களாலும் தன் விரலின் வீக்கம் தெரியாதவர்களினாலும் குழப்பியடிக்கப்பட்டுவருகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நிகராக அல்லது அதனை விடவும் பலமிக்கதானதொரு அரசியல் கூட்டை உருவாக்கவேண்டிய நிலையில் அதற்கான முதல் தெரிவாக விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் இணையவேண்டுமென்பதே தமிழ் மக்களின் விருப்பமாகவும் கோரிக்கையாகவும் உள்ள நிலையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஆட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கின்றதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
சுரேஷ் பிரேமச்சந்திரனை இந்தக் கூட்டில் இணைத்தால் தான் இணையமாட்டேன் எனக் கூறும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அதற்காகக் கூறும் காரணங்களும் விளக்கங்களும் விசித்திரமானதாகவும் வேடிக்கையானதாகவும் தமிழ் மக்களை அரசியலே தெரியாத அறிவிலிகள் என நினைத்தும் கூறப்படுபவையாகவுமே உள்ளதாக சுட்டிக்காடப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் பேரவையில் உள்ள ஈ.பி.ஆர்.எல்.எப்.பை விட்டு மாற்று அணியை அமைக்க முடியாது என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கொண்டிருக்கும் கடுமையான நிபந்தனையே கொள்கை ரீதியான கூட்டு அமைவதைக் குழப்புவதாக கஜேந்திரகுமார் கூறியுள்ளார்.
இந்நிலையில் இதே குற்றச்சாட்டை ஈ.பி.ஆர்.எல்.எப்பை இணைத்தால் நான் இணையமாட்டேன் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொண்டிருக்கும் கடுமையான நிபந்தனையே கொள்கை ரீதியான கூட்டு அமைவதைக் குழப்புகிறது என விக்னேஸ்வரனும் கூறமுடியும் என்பதை முதலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புரிந்துகொள்ள வேண்டும்.
அடுத்ததாக, கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய ஈ.பி.ஆர்.எல்.எப். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் கூட்டமைப்பிலிருந்து முதன்முதலாக வெளியேற்றப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கொள்கையிலிருந்து விலகியிருந்த ஈரோஸ் உள்ளிட்ட தரப்புகளுடன் இணைந்து கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டிருந்தது.
இதன்மூலம் ஈ.பி.ஆர்.எல்.எப். தங்களின் சுயரூபத்தை எந்தவொரு இடத்திலும் மாற்றிக்கொள்ளவில்லை என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றதாக அடுத்த குற்றச்சாட்டை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைக்கின்றார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுவதுபோல் உண்மையில் தூய்மையான தலைமையும் கொள்கையும் கொண்ட அக்கட்சி அல்ல. உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலின் பின்னர் ஆட்சியமைக்க எவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐ.தே.க., சுதந்திரக்கட்சி, ஈ.பி.டி.பி. போன்றவற்றுடன் இணைந்து செயற்பட்டதோ அதேபோன்று ஈ.பி.ஆர்.எல்.எப்பும் வவுனியா நகர சபையில் செயற்பட்டது.
மேலும் வவுனியா வடக்கு பிரதேச சபையில் ஈ.பி.ஆர்.எல்.எப்., மகிந்த அணியுடன் கூட்டிணைந்து தவிசாளர் பதவிக்காகப் போட்டியிட்டு கூட்டமைப்பை விடவும் ஒருபடி மேலே சென்று செயற்பட்டிருந்தது எனக் குற்றஞ்சாட்டும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தனது கட்சியைச் சேர்ந்த நடராசா விஜிதரன் என்பவர் கிழக்கில் திருக்கோவில் பிரதேச சபையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கவும் நடராசா சசிதரன் என்பவர் கிழக்கில் பொத்துவில் பிரதேச சபையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைக்கவும் ஆதரவாக செயற்பட்டமை தொடர்பிலும் என்ன கூறப்போகின்றார்?
தாம் பெற்றுக்கொண்ட உள்ளூராட்சி சபை ஆசனங்களைத் தக்க வைப்பதற்காக தெற்கின் சிங்கள பேரினவாதக் கட்சிகளிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொள்கையில் தூய்மையான கட்சியும் சோரம்போயுள்ளது தானே? அது மட்டுமல்ல, பல உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க போதிய உறுப்பினர்கள் இல்லாது நெருக்கடிகள் ஏற்பட்டபோது, இதே கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சி ஆட்சியமைக்க இரகசிய வாக்கெடுப்புகளைக் கோரியிருந்தது.
அப்படி அது நடைபெற்று இக்கட்சிக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன், டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான கட்சிகளின் உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்திருந்தால் இவரின் கட்சியும் சுரேஷ் பிரேமச்சந்திரனின் கட்சி செய்த வேலையைத்தான் செய்திருக்கும்.
அதனை இவரால் மறுக்க முடியுமா? அல்லது என்ன காரணத்துக்காக இரகசிய வாக்கெடுப்பைக் கோரினேன் என கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தால் பகிரங்கமாகக் கூற முடியுமா?
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் விக்னேஸ்வரன் தலைமையிலான அணியினரும் இணையவேண்டும் என்றுதான் விரும்புகின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியேறியபோது ,கூட்டமைப்பை விட்டு வெளியேறாதீர்கள், நீங்கள் வெளியேறினால் வேறு தீய சக்திகள் நுழைந்து விடுமென தமிழ் மக்கள் கூறியபோது அதனைக் கேட்காது தனது வறட்டுக் கௌரவத்தால் வெளியேறி தற்போது தனது முகவரியை தொலைத்துக்கொண்டிருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷை இணைக்குமாறு தமிழ் மக்கள் கூறவில்லையென எவ்வாறு கூற முடியும்? எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது, தங்களால் அழிக்கப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ ஆகியவற்றையும் அரவணைத்தே புலிகள் கூட்டமைப்பை உருவாக்கினார்கள். அவர்கள் மூலம் இந்தியாவை நெருங்கவும் புலிகள் விரும்பினார்கள். அந்தக் கூட்டமைப்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடன் தானும் ஒரு எம்.பியாக செயற்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தற்போது தான் கொள்கை வீரன், கறைபடியாதவன் என்றெல்லாம் கூறுவது வேடிக்கை.
விடுதலைப் புலிகளின் தலைவர்தான் ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ ஆகியவற்றை கூட்டமைப்பில் இணைத்து சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரை தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக்கினார். தமிழ்க் கட்சிகளிடையில் ஒற்றுமை அவசியம் என்பதனாலேயே பிரபாகரன் கூட இந்த விடயத்தில் பகையை மறந்து மக்களின் அரசியல் நலனுக்கு முன்னுரிமை கொடுத்தார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை விடவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ்த் தேசியத்திலும் தமிழ் மக்கள் மீதும் அக்கறை கொண்டவரல்ல. இது அனைவருக்கும் நன்கு தெரியும்.
கூட்டமைப்பின் முகமூடியை நீக்கி பிறிதொரு அணிக்கு அந்த முகமூடியைப் பொருத்துவதற்கு நாம் ஒருபோதும் ஒத்துழைப்புகளை வழங்க முடியாது என கஜேந்திரகுமார் கூறி தன்னை ஒரு பலவான் எனக் காட்டும் முகமூடியை அணியப் பார்க்கின்றார். ஈ.பி.ஆர்.எல்.எப்.பை இந்தக் கூட்டில் இணைக்கக்கூடாதென கஜேந்திரகுமார் விடாப்பிடியாக நிற்பதற்கு அவரின் கட்சியின் பலவீனமும் தலைமைப் பதவி மீதான மோகமுமே காரணமாகவுள்ளதாகவும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை விடவும் சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எப். பலமடங்கு பலம் மிக்கது. மக்கள் ஆதரவைக் கொண்டது. அதற்கு வடக்கிலும் கிழக்கிலும் ஆதரவுத்தளம் உண்டு. வடக்கில் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. எனவே, விரைவில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமது கூட்டில் ஈ.பி.ஆர்.எல்.எப்.பை இணைத்தால் அக்கட்சி ஆகக்குறைந்தது 2 பாராளுமன்ற உறுப்பினர்களையாவது பெற்றுக்கொள்ளும். ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அதுமுடியாத காரியம். இதற்கு 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் சிறந்த எடுத்துக்காட்டு.
எனவே ஈ.பி.ஆர்.எல்.எப்.பை இக்கூட்டில் இணைக்க இணங்கினால் தனது முக்கியத்துவம் பறிபோய்விடும். விக்னேஸ்வரனுக்கு அடுத்த தலைவராக தான் இருப்பதில் சிக்கல்கள், நெருக்கடிகள் ஏற்படுமென்ற அச்சமே கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஈ.பி.ஆர்.எல்.எப்பை இணைப்பதற்கான எதிர்ப்பின் பின்னணி.
அதனால்தான் அவர் இதனை வெளிக்காட்டாது தூய்மையான அரசியல், உறுதியான கொள்கை என்ற முகமூடியை அணிந்து தனது வறட்டுக் கௌரவத்தையும் கட்சியின் பலவீன நிலையையும் மூடிமறைக்கப் பார்க்கின்றார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டு என்ற வடிவில் அதிர்ஷ்டம் பலதடவைகள் கதவைத் தட்டிக்கொண்டிருக்கின்றது. இதனை அவர் தவற விடுவாரேயானால் காணாமல்போகும் பட்டியலிலிருந்து அவரின் கட்சியைப் பாதுகாக்க முடியாது போய்விடும். சிலவேளை கடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் தனது கட்சி வழக்கத்துக்கும் விட அதிக வாக்குகளைப் பெற்றுக்கொண்டதையிட்டு தனது கட்சி மக்கள் ஆதரவைப் பெற்றுவிட்டதென அவர் தப்புக்கணக்கு போடுகின்றாரோ தெரியவில்லை.
வடக்கு முதலமைச்சராக விக்னேஸ்வரன் இருந்தபோது, அவருக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையால் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது ஏற்பட்ட அதிருப்தி, அருவெறுப்பின் வெளிப்பாடே கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சிக்கான வாக்குகளாக மாறின. எனவே, அந்த வாக்குகள் அதிகரிப்பதற்கும் விக்னேஸ்வரன்தான் காரணம் என்பதை கஜேந்திரகுமார் புரிந்துகொள்ள வேண்டும்.
அத்துடன், அடுத்த தேர்தலில் விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டொன்று நிச்சயம் களமிறங்கும். அந்தக் கூட்டை எதிர்த்து நின்றால் தனது கட்சிக்கு ஏற்படும் பரிதாப நிலையையும் கொஞ்சம் அவர் சிந்திக்க வேண்டும்.
தற்போதைய நிலையில், கஜேந்திர குமாருக்கு இரண்டு தெரிவுகள் உள்ளன.
ஒன்று, விக்னேஸ்வரனின் கூட்டில் நிபந்தனைகள் விதிக்காது இணைந்து தனது கௌரவத்தையும் கட்சியின் பெயரையும் காப்பாற்றுவதுடன், பாராளுமன்ற உறுப்பினராவது. அல்லது பழைய பகையை மறந்து, கௌரவத்தை துறந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு இணைந்து அதனூடாக தான் மட்டுமாவது பாராளுமன்ற உறுப்பினராவது.
இதில் ஒன்றைத் தீர்மானிக்க கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு மிகக் குறுகிய காலமே உள்ளது.
இதேவேளை, தமிழ் மக்கள் விரும்பும் விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டொன்று உருவாகுவதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எந்தவகையிலாவது தடையாக இருப்பாரேயானால் அவ்வாறான தடைகள் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது துரோகத்தை தொடர வழியேற்படுத்திக்கொடுப்பாரேயானால் அதற்கான விலையை அவர் கொடுத்தேயாக வேண்டும் என அரசியல் அவதானிகள் சுட்டிகாட்டியுள்ளனர்.
நன்றி
தினக்குறல்