இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த சிலருக்கும் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படும் நிலையில் , தமிழகத்தில் சென்னை, மதுரை, நெல்லை உள்பட 5 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காஇ முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அந்தவகையில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறி நெல்லை, மேலப்பாளையம் முகமது இப்ராஹிம் என்பவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதன்காரணமாக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மதுரை நரிமேட்டில் முகமது ஷேக் மொய்தீன் என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.
அதேபோல், தேனி மாவட்டம், கோம்பை பகுதியில் மீரான் கனி, முகமது அப்சல் ஆகியோரது வீடுகளிலும் சென்னையில் கொத்தாவால் சாவடியைச் சேர்ந்த தவ்ஃபிக் முகமது என்பவரது வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும், ராமநாதபுரத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
தேசிய புலனாய்வு முகமையின் இந்த திடீர் சோதனை நடவடிக்கையால் குறித்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை அன்சருல்லா என்ற பயங்கரவாத அமைப்பிற்கு நிதி திரட்டிய புகாரில் டெல்லியில் சமீபத்தில் 14 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்த நிலையில் , கடந்த வாரம் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள இஸ்லாமிய ஹிந்த் அமைப்பின் தலைவர் சையது முகமது வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டதாகவும் இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.