ரத்னதேரருக்கு புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் இரகசிய தொடர்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, July 1, 2019

ரத்னதேரருக்கு புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் இரகசிய தொடர்பு!

ஸ்ரீலங்காவுக்கு எதிராக தொடர்ந்தும் செயற்பட்டுவருகின்ற புலம்பெயர் சமூகத்தினரது நோக்கங்களையே நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் நிறைவேற்றி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, புலம்பெயர் சமூகத்துடன் ரத்ன தேரர் இரகசிய தொடர்புகளை வைத்திருப்பதாகவும் கடுமையாக சாடியுள்ளது.

உள்நாட்டு நீதிமன்றக் கட்டமைப்பில் நம்பிக்கை இல்லை என்று கூறிவருகின்ற புலம்பெயர் தமிழ்த் தரப்புடன் இணைந்துகொண்டுள்ள அத்துரலியே ரத்ன தேரருக்கு தற்போது சர்வதேசத்தின் மீது நம்பிக்கை பிறந்திருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனாலேயே உள்நாட்டு விசாரணைகளில் நம்பிக்கை இல்லை என்று ரத்ன தேரர் வீதி வீதிவீதியாக சென்று பிரசாரம் செய்துவருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்திருக்கின்றார்.

“குருநாகல் மருத்துவர் ஷாபியின் விவகாரத்துக்குப் பின்னர் ஸ்ரீலங்காவில் உதய கம்மன்பில, விமல் வீரவன்ச,அத்துரலியே ரத்ன தேரர் உள்ளிட்டவர்கள் சிசேரியன் சத்திரசிகிச்சை நிபுணர்களாகிவிட்டனர். குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்த விசாரணையின் அறிக்கை அண்மையில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மீது நம்பிக்கை இல்லை என்றும் சர்வதேச நீதிமன்றத்துக்கு செல்வதாகவும் ரத்ன தேரர் அறிவித்து வருகின்றார்.

இதுபோன்று புலம்பெயர் சமூகத்தினர் முன்வைத்துவரும் குற்றச்சாட்டுக்களான போர்க் காலத்தில் இடம்பெற்ற படுகொலைகள், போர்க் குற்றங்கள் உட்பட எந்தவொரு குற்றங்களுக்காகவும் சிறிலங்காவைச் சேர்ந்த எவரையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்ல முடியாத நிலமையை 2002 ஆம் ஆண்டிலேயே அப்போதைய பிரதமராக இருந்தபோது ரணில் விக்கிரமசிங்க ரோம் பிரகடனத்துக்கு கைச்சாத்திடாததன் மூலம் உறுதிப்படுத்தியிருந்தார்.

ஐ.நா பாதுகாப்புச் சபையில் தீர்மானம் நிறைவேற்றினால் அன்றி சர்வதேச நீதிமன்றத்துக்கு சிறிலங்காவை அழைத்துச் செல்லமுடியாது. இவை எதனையும் அறியாமல் ரத்ன தேரர் கருத்து வெளியிடுகின்றார்.

உள்நாட்டுப் போரில் இடம்பெற்ற படுகொலைகள் குறித்து குற்றச்சாட்டை முன்வைத்துவருகின்ற புலம்பெயர் சமூகத்தினர்,ஸ்ரீலங்கா இராணுவம் மீதோ உள்நாட்டு நீதிமன்றங்கள் மீதோ நம்பிக்கை இல்லை என்றும், மருத்துவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்றும் கூறிவருகின்றனர்.

ஆனாலும் 19ஆவது திருத்தத்தின் ஊடாக நீதிமன்ற சுயாதீனத்தை உறுதிப்படுத்தியிருப்பதோடு இனப்படுகொலையுடன் இராணுவம் தொடர்புபடவில்லை என்பதையும் திட்டவட்டமாக நாம் கூறுகையில், ரத்ன தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொய்கூறி வருவதாக கூறுகின்றார்.

புலம்பெயர் சமூகத்தினரது பிரசாரங்களை ரத்ன தேரர் திரைமறைவில் நியாயப்படுத்துகிறார். உள்நாட்டு மருத்துவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்றும் அமெரிக்கா, இந்தியாவிலிருந்து மருத்துவர்களை அழைத்து வருவதாகவும் ரத்ன தேரர் குறிப்பிடுகின்றார். அதேபோன்றுதான் புலம்பெயர் சமூகத்தினரும், உள்நாட்டு விசாரணையில் நம்பிக்கை இல்லாததனால் வெளிநாட்டு நீதிபதிகளின் அவசியத்திற்கான அழுத்தத்தை பிரயோகிக்கின்றனர். யாழ்ப்பாணத்திற்கும், கல்முனைக்கும் அண்மையில் சென்ற ரத்ன தேரர், சிங்களத் தமிழ் கூட்டணியை அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

ரத்ன தேரர் புலம்பெயர்ந்த சமூகத்துடன் இரகசியமாக தொடர்பை பேணி வருவதாலேயே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கின்றார். புலம்பெயர் தமிழ் சமூகத்தினரது நோக்கங்களை ரத்ன தேரர் நிறைவேற்றுகின்றாரோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

1994 ஆம் ஆண்டிலிருந்து இந்த நாட்டை ஆட்சிசெய்த அனைத்து ஜனாதிபதிகளும் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதாக வாக்குறுதி அளித்தே ஆட்சிக்கு வந்தனர். அதேபோலவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015 இல் ஆட்சிக்கு வரும்போது இதுவே இறுதியான நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் கீழ் நடத்தப்படுகின்ற தேர்தலாகும் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கமைய அவரே முன்னின்று 19 ஆவது அரசியல் யாப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றினார்.

ஆனால் தற்போது 19ஆவது திருத்தத்தை இரத்து செய்ய வேண்டுமென கூறி வருகின்றார். ஒக்டோபர் 26ஆம் திகதியே அவர் முற்றுமுழுதாக மாறினார். மக்கள் நிராகரித்த குழுவுடன் இணைந்து கொண்டதன் மூலமாக அவர் இன்றும் எமது ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்துக்கும்,அமைச்சரவைக்கும் எதிரான நிலைப்பாட்டில் இருந்தவண்ணம் செயற்பட்டு வருகின்றார். மீண்டும் மஹிந்த ராஜபக்சவின் யுகத்துக்கு நாட்டை இழுத்துச் செல்லும் ஜனாதிபதியின் இந்த முயற்சிகளுக்கு நாம் ஒருபோதும் இணங்க மாட்டோம். ஒவ்வொரு தேர்தல்களிலும் கூறப்பட்டுவந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கான வாக்குறுதியை நாங்களே 19 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றி யதார்த்தமாக்கியிருக்கின்றோம். எனவே இந்த நிலைமையை மாற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்” என்றார்.