ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையடுத்து பயங்கரவாத செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள வைத்தியர்கள், பொறியியலாளர்கள் மற்றும் மௌலவிமார் உட்பட 36 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் இரவு அவரை சந்தித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதியளித்தார்.
மேலும் சட்டவிரோதமான முறையில் கருத்தடை சிகிச்சை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருந்த குருநாகல் வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷாபி குற்றமற்றவர் என விசாரணைகளின் பின்பு நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதிமொழி வழங்கினார்.
தற்போது அமுலிலுள்ள அவசரகாலச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட மாட்டாதெனவும் அவர் கூறினார்.
நாட்டில் தற்போது முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள், அவசரகாலச் சட்டத்தின் கீழான அநாவசிய கைதுகள், அச்சுறுத்தல்கள், துன்புறுத்தல்கள், பொய்ப் பிரசாரங்கள் தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
இச் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், ஏ.எச்.எம்.பௌஸி, எம்.எஸ்.எஸ். அமீரலி, அப்துல்லாஹ் மஹ்ரூப், அலிசாஹிர் மௌலானா, பைசல் காசிம், எஸ்.எம்.எம்.இஸ்மாயில், எம்.ஐ.எம். மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் 36 பேரின் விடுதலை குறித்து சட்டமா அதிபர், பதில் பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோருடன் பேசி, தான் உடன் நடவடிக்கை எடுக்குமாறு கூறியதாக தெரியப்படுத்துமாறு ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபாவைக் கேட்டுக் கொண்டார்.
சிறையிலிருந்து ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட ஞானசார தேரர் குறித்தும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் முறையிட்டனர். முஸ்லிம்கள் மீதான கெடுபிடிகள் நாளாந்தம் அதிகரித்து வருகின்றன.
நீங்கள் மன்னிப்பு வழங்கி சிறையிலிருந்து விடுதலை செய்த ஞானசார தேரர் இன்று உலமா சபையை விமர்சித்து முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகப் பேசி வருகிறார். பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்.
ஜனாதிபதி என்ற வகையில் நீங்கள் இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல் இன முரண்பாடுகள் மேலெழும் என்றும் தெரிவித்தனர்.
இதனையடுத்து அங்கிருந்தவாறே ஞானசார தேரரை தொலைபேசியூடாக தொடர்புகொண்ட ஜனாதிபதி, முஸ்லிம்களுக்கு எதிரான அவரது கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் தனது அதிருப்தியினை வெளியிட்டார்.
அத்துடன் தொடச்சியாக இவ்வாறு செயற்பட்டால் மீண்டுமொரு தடவை என்னால் உங்களுக்கு மன்னிப்பு வழங்க முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.
இந்தச் சந்திப்பு பற்றி பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் விளக்கமளிக்கையில், ‘பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரரை விடுவித்தது நீங்கள். இன்று அவர் உலமா சபையை விமர்சிக்கிறார். பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார்.
நீங்களே அவரை விடுதலை செய்தீர்கள் என்று கூறினோம். ஞானசார தேரர் தொடர்பில் நாம் கடும் எதிர்ப்பினையும் அதிருப்தியினையும் வெளியிட்டோம்.
அவசரகாலச் சட்டத்தின் கீழ் பயங்கரவாதத்துடன் எதுவித தொடர்புமற்ற அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
டாக்டர் ஷாபி கருத்தடை தொடர்பில் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
எனவே கைது செய்யப்பட்டு குற்றங்கள் நிரூபிக்கப்படாதவர்கள் உடன் விடுதலை செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தினோம்.
அவசரகாலச் சட்டத்தின் கீழ் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளதை தெளிவுபடுத்தினோம். எங்களது முறைப்பாடுகளை செவிமடுத்து ஜனாதிபதி அவை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்’ என்றார்.